Sunday, 27 October 2013

மதுவும் வீரமும்


எமது நாக்கு இனிப்பு, புளிப்பு, உறைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என்ற அறுசுவைகளையும் உணரும். ஆனால் எமது உடம்போ நகைத்தல் [சிரித்தல்], அழுதல், இழிவரல் [அருவருப்பு], மருளுதல் [வியப்பு], அச்சம், பெருமிதம் [வீரம்], வெகுளி [கோபம்], உவகை [மகிழ்ச்சி], சாந்தம் ஆகிய ஒன்பது சுவைகளையும் காட்டும். ஆக மொத்தம் இந்த பதினைந்து சுவைகளுக்கும் மனிதர்களாகிய எம்மை ஆட்சி செய்கின்றன. நாம் அவற்றின் அடிமைகளாக இருக்கின்றோம். நாக்கு இல்லாவிட்டால் உடல் ஏது? ஆதலால் எந்தப் பெரிய வீரனாக இருந்தாலும் அவன் தன் நாவுக்கு அடிமையாகத் தானே இருக்க வேண்டும்!
இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் சங்ககாலத்தில் ஒரு பெரும் போர் நடந்தது. அப்போரில் வெற்றி பெற்றதால் அந்நாட்டு அரசன், போர் புரிந்த வீரர்களுக்கு எல்லாம் பாராட்டிப் பரிசு கொடுப்பதற்காக பெரிய விருந்து [பெருஞ்சோறு] அளிக்கின்றான். மனிதரைவிட இருமடங்கு, மும்மடங்கு உயரமான குடங்களில் மது வகைகளும், வண்டில் வண்டிலாக பழங்களும், அண்டா அண்டாவாக கறிவிறவு நெய்சோறும் அங்கே கொட்டிக் கிடந்தது. 

மது அருந்தும் நேரமும் வந்தது. மதுவைப் பறிமாறுவோர் அவற்றை ஒன்றோடு ஒன்று ஏற்றமுறையில் கலந்து மதுவின் சுவையைக் கூட்டினர். ஆனால் அந்த நேரத்துக்காகக் காத்திருந்த இளைஞர்களில் ஒருவன் பொறுமையை இழந்தான். எவ்வளவு நேரம் தான் மதுவகையைச் சேர்த்து குலுக்கி கலப்பது? போர் முனையில் மிகவும் சுறுசுறுப்பாகச் சுழன்று போர்புரிந்தவனுக்கு மது கலப்போரின் ஆமை வேகம் கோபத்தைத் தூண்டியது. உடனே தன் உடைவாளை எடுத்தான். மது கலப்போருக்கு அவ்விளைஞன் மேல் கோபம் வந்தது. அரசனுக்கு மதுகலந்து கொடுப்பவர்கள் அல்லவா? கோபம் வராமல் இருக்குமா? 

அந்த விருந்துக்கு விரிச்சியூர் நன்னாகனார் என்ற சங்ககாலப் புலவரும் வந்திருந்தார். அவரும்  மதுகலக்குவோரின் செய்கையைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கும் மதுகலக்குவோர் மேல் உள்ளூரக் கொஞ்சம் சினம் இருந்தது. ஆதலால் அவர்களைப் பார்த்து

“வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
யாம்தனக்கு உறுமுறை வளாவ, விலக்கி,
வாய்வாள் பற்றி நின்றனன் என்று
சினவல் ஓம்புமின் சிறுபுல்லாளர்
ஈண்டே போல வேண்டுவன் ஆயின்
என்முறை வருக என்னான் கம்மென
எழுதரு பெரும்படை விலக்கி
ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே”         - (புறம்: 292)

‘ஆண்மையில்லாதோரே! அரசனுக்காக எடுத்துக் கொடுத்த இனிய குளிர்ந்த மதுவை, ஏற்ற முறையில் வளாவித் [கலந்து], தருவதற்குள் பொறுமையில்லாது கோபித்து தனது உடைவாளைப்  பற்றி நிற்கிறான் என்று சினம் கொள்ளாதீர்கள். இங்கே நடந்தது போல [ஆண்மையுடன் தன் உடைவாளைப் பற்றிப் பிடித்தது போல], அவன் விரும்பினால் என்முறை வரட்டும் என்று காத்திராமல் விரைவாக எழுந்து சென்று பெரும் படையை தடுத்து, வெற்றி பெற்று நிற்கும் ஆண்மையுடையவனே’ என்று எடுத்துக் கூறுகிறார்.

சிறுபுல்லாளர் என்று மது கலப்போரை விளித்து, அவர்கள் வீரம் அற்ற வீணர்கள் என்பதை  எமக்குக் காட்டித்தந்துள்ளார். மதுவைச் சுவைபடக் கலக்கினால் அங்கு வீரம் விளையுமா என்ன? உடலின் சுவை வேறு. நாவின் சுவை வேறு. ஆனால் வீரச்சுவையைச் சுமந்து நின்ற ஆண்மையாளன் கூட நாவின் சுவைக்காக கோபச்சுவையுள் கட்டுண்டு கொதித்தெழுந்ததை இப்பாடல் காட்டுகிறது.

போர் நடைபெறும் இடங்களில் ஒருவரோடு ஒருவர் சினந்தால் போரின் அமைதி கெடும். ஆதலால் இப்படியான பிடிபாடுகளை தீர்த்து வைக்க  அறிவுள்ள புலவர்களை அரசர்கள் தம்மோடு அழைத்துச் சென்றனர். அந்த இளைஞனைப் பெரிய ஆண்மையாளனாக விரிச்சியூர் நன்னாகனார் சொன்னாலும் அவனுக்கு மதுச்சுவையின் மேலிருந்த மோகம், அவனது வீரத்தைக் கோபமாக வீழ்த்திவிட்டது என்பதே உண்மை. சங்ககால வீரனான இவனும் நாவின் சுவைக்கு அடிமை தானே!
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment