மையினாற் கண் எழுதி...
- சாலினி -
உலகஇயற்கை கற்றுக் கொடுத்த பாடங்களால் மனிதன் தன் வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து கொண்டான். உலக இயற்கையை இயக்கும் சக்தி, தனது நிலையில்லா வாழ்க்கையை, அழியாது நிலைத்து நிற்கவைக்கும் என நம்பினான். அவனின் நம்பிக்கையே கடவுள் கொள்கைக்கு வித்திட்டது. பிறந்தவர் யாவரும் இறப்பது திண்ணம். ஆதலால் இறப்பைத் தாம் தழுவும் முன்னம் தம்மை எல்லாம் இயக்கும் அந்தப் பழம் பெரும் சக்தியைக் காணும் வழியைத் தேடினான். அவன் தேடிய வழியை பிறருக்கும் எடுத்துச் சொன்னான். இறப்பு எம்மைத் தழுவும் முன் ‘பழம் பெரும் சக்தியை நினை’ என்றான். அப்படிச் சொன்ன சான்றோர்களை நாம் அருளாளர்கள் என்று சொல்கிறோம். தான் கண்டு சுவைத்த அருட்சுவையை உலகுக்கு முதன்முதல் எடுத்துச் சொல்லி வழிகாட்டியவர் காரைக்கால் அம்மையாரே!
அதனாற்றான் என்னவோ சிவனும் ‘அம்மையே!’ என அழைத்து மகிழ்ந்தார் போலும்.
“உத்தமராய் வாழ்வார் உலந்தாக்கால் உற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமுன் - உத்தமனாம்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தந்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து” - (திருஇரட்டைமணிமாலை - 20)
கடல்போல ஆழமான நெஞ்சே! நல்லவர்களாக வாழ்பவர்கள் இறந்து போனால் கூட உறவினர்கள் காய்ந்த மரத்தை அடுக்கிச் சுடுவர். அப்படி சுடுபட முன்னர் நீண்ட கடலின் நஞ்சை உண்டு, பாற்கடலின் நெய்யில் குளித்த உத்தமனாம் இறைவனின் திறமைகளை எழுச்சியுடன் கேட்பாய்! என்கிறார்.
திருநாவுக்கரசு நாயனாரும்
“ஐயினால் மிடறடைப்புண்டு ஆக்கை விட்டு
ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி
மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும்
ஐயனார்க்கு ஆளாகி அன்பு மிக்கு
அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்
கையினால் தொழுமடியார் நெஞ்சின் உள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே”
கோழையால் [ஐ - சளி] தொண்டை அடைப்பு ஏற்பட்டு, உடலைவிட்டு உயிர் போனதும் வீட்டில் உள்ளோர் சேர்ந்து, மை கொண்டு கண்ணை [கோயிற் சிலைகளுக்கு அருள்பொழியும் கண் வரைதல் போல] வரைந்து, மாலை போட்டு மயானத்தில் இடமுன்னர், பிறைசூடும் பரமனுக்கு ஆளாகி, அன்பால் உள்ளம் நெகிழ்ந்து, மெய் சிலிர்த்து இறைவனின் திருவடியைத் தொழும் அடியவர் நெஞ்சினுள்ளே இறைவனைக் காணலாம் என்கிறார்.
இன்றைய தமிழர்களாகிய நாம் ஒருவர் இறந்தால் அவரின் கண்களை மூடிவிடுகிறோம். கண்மூடி இருக்கும் போது சிலர் தூங்குவது போல் இருப்பார்கள். ஆனால் எல்லோரும் அப்படியிருப்பதில்லை. அது அவரவர் பெற்று வந்த வரம். அதனால் நம் முன்னோர்கள் ஒருவர் இறந்ததும் அவரை உயிருடன் இருப்பது போல் காட்டுவதற்காக மை கொண்டு கண்ணிருப்பது போல வரைந்திருக்கிறர்கள். திருநாவுக்கரசர் நாயனார் வாழ்ந்த காலத்தில் அந்த வழக்கம் இருந்ததை இத்தேவாரம் எடுத்துக் கூறுகிறது. அந்தப் பழக்கம் மாற்றார் படையெடுப்பால் அழிந்தது போலும். ஆனால் இன்றும் மாலை சூட்டுகின்றோம். மையினால் கண் எழுதாவிட்டாலும் மாலை சூட்டி மயானத்தில் இடமுன் மதிசூடும் பெம்மானை நம் சிந்தையில் சூடுவோம்.
No comments:
Post a Comment