பண்டைய தமிழகம் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, தொண்டைநாடு, கொங்கு நாடு என ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இன்றைய நிலையில் கொங்கு நாடு - கோவை, நீலகிரி, சேலம், திண்டுக்கல், பெரியார், தர்மபுரி போன்ற மாவட்டங்களின் சில பல பகுதிகளைக் கொண்டதாக இருக்கிறது. அந்த கொங்கு நாட்டைச் சேர்ந்த உமேஷ் மருதாசலம் என்பவர் “மழைப்பொழிவு எங்கள் கொங்குநாட்டில் இல்லை” என்ற தலைப்பில் பாடியிருந்த ‘நொய்யல் ஒப்பாரியை’ தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அதைப்படித்த போது என் மனதில் கம்பனின் ஞாபகம் வந்தது. உமேஷைப் போல கம்பரும் மனம் வெதும்பி ஒப்பாரி வைத்துள்ளார். அந்த ஒப்பாரியோ ‘கொங்கு நாட்டை நினைத்துப் பாராதே’ என்கிறது.
அரசாங்கம் இயற்கையைப் பாதுகாக்காது புறக்கணிப்பதால், நொய்யல் ஆற்றின் இன்றைய நிலையை உமேஷ் ஒப்பாரிவைத்துள்ளார். அந்த ஒப்பாரியைப் பார்க்க விரும்புபவர்கள் இந்த வலைத்தளத்தில் சென்று பாருங்கள்.
கம்பர் சேரநாட்டுக்கு போகும் வழியில் கொங்கு நாட்டிற்குச் சென்றார். நடந்து, களைத்து தண்ணீர்த் தாகத்துடன் சென்றவருக்கு ஒரு வாய் தண்ணீர் குடிக்க முடியவில்லை. தண்ணீர் எல்லாம் சேற்று நாற்றம் வீசியது. நல்ல தண்ணீர் தேடி நடக்கவும் முடியவில்லை. நிலம் எல்லாமே கல்லும் முள்ளுமாக இருந்தது. ஊரெல்லாம் மாட்டுப்பட்டியும், அவற்றுக்கு உணவு போடும் தொட்டியுமாகக் காட்சி கொடுத்தது. அங்கு இருந்தவர்கள் கம்பஞ் சோற்றையே உண்டனர். அவர்களது பெயர்களும் பொம்மன், திம்மன் என இருந்தன. அங்கு இருந்த பெண்களும் நாயும் பேயும் போல் இருந்தனர். கம்பராமாயணத்தில் அவர் பாடிய
“பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பலல்வமனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென”
அவர்கள் இருக்கவில்லைப் போலும்.
நடந்து களைத்து பசியோடு சென்றவருக்கு நல்ல உணவும், தண்ணீரும் கிடைக்கவில்லை. பெண்களும் நாய் போல் வள்ளெனப் பாய்ந்தனர் போலும். அந்த ஆற்றாமையால்
“நீர்எலாஞ் சேற்று நாற்றம்
நிலம்எலாம் கல்லும் முள்ளும்
ஊர்எலாம் பட்டி தொட்டி
உண்பதோ கம்பஞ் சோறு
பேர் எலாம் பொம்மன் திம்மன்
பெண்களோ நாயும் பேயும்
கார் உலாம் கொங்கு நாட்டை
கனவிலும் நினைக்கொ ணாதே”
என மழை மேகம் உலாவருகின்ற கொங்கு நாட்டை கனவிலும் நினைக்க இயலாது என்றார். உலா வரும் மழை மேகமும் மழையைப் பொழியாது என்பதையும் தொட்டுக் காட்டியுள்ளார். கம்பர் எவ்வளவு துன்பப்பட்டிருந்தால் இப்படி ஒப்பாரி பாடியிருப்பார்?
இனிதே,
தமிழரசி.
கார் உலாம் கொங்கு நாட்டை" எனப்புகழ்ந்துமுள்ளாரே. கவனித்தீரா தமிழரசியார்!
ReplyDeleteஅவரின் புகழ்ச்சியே இந்தப்பதிவை நான் எழுதக் காரணம். கம்பரின் "கார் உலாம் கொங்கு நாடு" நம் கவனக்குறைவால் நிலைமாறிப் போகுமோ என்ற நிலையில் இருக்கின்றது. கடந்த மாதம் கொங்குநாட்டின் மேற்கு மலைத்தொடருக்கு அருகே இரண்டு கிழமை நின்றேன். இயற்கை அன்னை கொஞ்சி விளையாடிய நிலமெலாம் துண்டு போடப்பட்டு கட்டிடங்களாகக் காட்சிதருகின்றன. கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் வரும் வழியில் மேற்குமலைத் தொடர்ச்சியின் மலைவளமும் மெல்ல மெருகூட்டப்பெற்று பளிங்குக் கற்களாக மாற்றப்படுவதையும் கண்டேன். கண்கள் பனித்தன.
Delete