Friday 4 October 2013

ஐந்துவிதமான பூ என்ன பூ?



நாட்டுப்பாடல்களே தமிழ் இலக்கிய வளத்துக்கு பெரிதும் துணை புரிந்திருக்கின்றன. நாட்டுப்பாடல் வகைகளில் ஒன்றே விடுகதையாகும். விடுகதையை நொடி என்றும் புதிர் போடுதல் என்றும் சொல்வர். எல்லோரும் அறிந்த ஒன்றை, சுற்றி வளைத்து மறைத்துக் கூறி விடை காண வைத்தலே விடுகதைகளின் நோக்கமாகும். மனித சிந்தனைத் திறனை வளர்க்கும் நோக்கத்திலேயே விடுகதைகள் தமிழில் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. அனேகமாக தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு விடுகதைகளைக் கூறி, அவற்றுக்கு விடைகான வைத்து அறிவை வளர்த்திருக்கிறார்கள். பின்னாளில் அதனையும் இலக்கியம் உள்வாங்கிக் கொண்டது.

ஈழத்து வன்னி நிலத்தில் வாழ்ந்த ஒருதாய் மகனைப் பார்த்து
தாய்: எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுத்து
                    வட்டக்குடை பிடித்து வாராராம் 
          வன்னியனார், அவர் யார்?
எனக் கேட்கிறாள். தாயின் கேள்விக்கு பதில் சொல்ல மகன் சிந்திக்க வேண்டும். எட்டுக்காலை நிலத்தில் ஊன்றியும் இரண்டுகாலை தூக்கிக் கொண்டும் நடப்பது எது? வன்னியில் வாழ்வது எது? தேளா? நண்டா? வட்டக் குடை பிடித்து வருவதால் அது நண்டு என்பதை அவனது சிந்தனை அவனுக்கு காட்டிக் கொடுக்கும். வன்னி நிலப்பரப்பு நீர்வளமுள்ளதால் அங்குள்ள ஆறு, குளம், வயல் எங்கும் நண்டுகள் உலாவரும். பிள்ளைகள் அடிக்கடி நண்டைப் பார்ப்பதால் உடனே பதில் சொல்வர். தெரிந்த விடையங்களைப் புரியாத புதிராகக் கேட்டு, விடைகான வைத்து தமது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தமிழ் இலக்கியத்திற்கும் பெண்கள் வளம் சேர்த்தனர். அதனால் நொடி போடுவதிலும் அதனை அவிழ்ப்பதிலும் பெண்கள் சிறந்து விளங்கினர். வன்னியை ஆண்ட அரசன் ஒருவன் போட்ட நொடியை அவிழ்த்த எண்ணெய் வாணிவப் பெண்ணைப் பார்ப்போம்.  
        
மாந்தை மாநகரம் அந்நாளில் செல்வச்செழிப்புடன் இருந்த நகரமாகும்.  அந்த நகரத்திற்கு அருகே விடத்தல் தீவும் இருந்தது. அதிகாலை நேரத்தில் விடத்தத்தீவு வீதியில் ஓர் இளம் பெண் ‘எண்ணெய் வாங்கலையா! எண்ணெய்!’ எனக் கூவிக் கூவி எண்ணெய் விற்றுவந்தாள். அவளும் எண்ணெய்யைப் போல தளதள என மின்னும் அழகுடன் இருந்தாள். அவளின் நடையும் இடையும் பார்ப்போரை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தது. அந்த வீதியால் வந்த மாந்தை அரசன் அவளைப் பார்த்தான். அவளின் அழகு அவனைப் பேசவைத்தது. அவளைப் பார்த்து
அரசன்: எள்ளிலே பிறந்து எள்ளிலே வளர்ந்த
                        எண்ணெய் வாணிவப் பெண்ணே!
              எள்ளிலும் சிறிய இலை என்ன இலை?
என்று நொடி போட்டான்.

அரசனின் நொடியைக் கேட்ட எண்ணெய் வாணிவப் பெண்ணும்
பெண்: பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்து
                      பூலோகம் ஆளும் இராசாவே!
            பூவில் ஐந்து விதமான பூ என்ன பூ?
என்று அரசனின் கேள்விக்கு பதிலாக அவளும் நொடி போட்டாள்.
                                    - நாட்டுப்பாடல் (விடத்தல் தீவு)
                                           - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

அரசன் ‘எள்ளிலும் சிறிய இலை என்ன இலை?’ என்று நேரடியாகக் கேள்வி கேட்டிருக்கலாம். ஆனால் அவனோ, எள்ளுக் குவியலுக்கிடையே பிறந்து வளர்ந்த எண்ணெய் வாணிவப் பெண்ணே! எள்ளைப் பற்றிய பொது அறிவு உனக்கு இருக்கா! என்பது போல புதிர் போட்டான்.

அவளும் அதற்கு நேரடியாக விடை சொல்லி இருக்கலாம். ஆனால் அவளோ, தானும்  அரசனுக்குச்  சளைத்தவள் அல்ல என்பதைக் காட்ட, பூக்களுக்கிடையே பூப்போன்ற மெத்தையில் பிறந்து, வளர்ந்து இந்த பூவுலகை ஆளும் அரசனே! ஐந்து விதமாகக் காட்சிதரும் பூ என்ன பூ? என அரசனின் கேள்விக்கு மீண்டும் புதிர் போட்டாள். 

இப்புதிர்களின் விடை விடத்தல் தீவில் வாழ்ந்த அவளுக்கும், மாந்தையை ஆண்ட அரசனுக்கும் தெரிந்து தானே இருந்திருக்கும்? இப்புதிர்களின் விடை உங்களுக்கு தெரியுமா? கீழேயுள்ள படத்தைப் பார்த்து பதில் சொல்லுங்களேன்.


எள்ளிலும் சிறிய இலை விடத்தல் மர இலையேயாகும். விடத்தல் பூ முதலில் பச்சையாய் அரும்பி, பச்சையும் மஞ்சளுமாய் நிறம் மாறி, பின் பச்சை, மஞ்சள், குங்கும நிறமாய் இருந்து குங்கும நிறம் வெளிர் குங்குமமாய் மாறி, வெள்ளையாகும். ஆக பச்சை, மஞ்சள், குங்குமம், வெளிர் குங்குமம், வெள்ளை என ஐந்து நிறத்தில், ஐந்துவிதமாகக் காட்சி தருவது விடத்தல் பூவே. அரசனின் புதிருக்கும் எண்ணெய் வாணிவப் பெண்ணின் புதிருக்கும் விடை ஒன்றே. புதிர்களின் விடை 'விடத்தல்'
இனிதே,
தமிழரசி.

2 comments:

  1. நான் தேடிக்கொண்டிருந்த தகவல் கிடைத்தது, மகிழ்ச்சி, மாந்தல் நகரமும் விடத்தல் தீவும் தமிழ்நாட்டைச்சேர்ந்ததா ? எந்த பகுதி ? - தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மாந்தையும் விடத்தல் தீவும் இலங்கையின் மன்னார்ப்பகுதியில் உள்ளன. சேர அரசர்கள் மாந்தையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள் என்பதை பண்டைய சேர அரசர்கள் வரலாறும் சங்க இலக்கியமும் காட்டுகின்றன.

      Delete