Thursday 3 October 2013

குறள் அமுது - (76)

குறள்:
“குடிதழீக் கோல்ஓச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு”                                   - 544

பொருள்:
தனது குடிமக்களை அரவணைத்து நீதிசெலுத்தும் தலைவனின் கீழ் இவ்வுலகமே சேர்ந்து நிற்கும்.

விளக்கம்:
மன்னர் ஆட்சி முடிந்து மக்கள் ஆட்சி நடப்பதால் நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தாமே. நாட்டைக் காக்கும் தலைவனுக்கு கூறப்பட்டவை வீட்டைக் காப்போருக்கும் பொருந்தும். பல்லாயிர வீடுகள் சேர்ந்தது தானே நாடு. ஒரு வீட்டின் தலமைப் பொறுப்பை ஏற்றுள்ள எவரும் அன்புள்ளவராக, இன்மொழி பேசுபவராக, தன் குடும்பத்தை கல்வியில் சிறந்து விளங்கச் செய்பவராக, மற்றவர் தயவை எதிர்பாராது பொருளாதாரத்தில் தன்நிறைவு அடையும் வழிவகைகளைச் செய்பவராக, நோய் நொடி இல்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்து, சுற்றாத்தாரையும் நண்பர்களையும் அரவணைத்து நீதியுடன் நடப்பாரேயானால் அவரின் சொற்கீழ் அந்தச் சுற்றமே சூழ்ந்து நிற்கும்.

ஒரு நாட்டின் தலைவன் நீதியை நிலை நாட்ட நிதியை - செல்வத்தைப் பெருக்க வேண்டும். நிதி பெருக பொருளாதார மேம்பாடுகளைச் செய்தல் வேண்டும். பொருளாதாரத்தை விருத்தி செய்ய நீர் நிலைகளை உண்டாக்கி விவசாயம், நெசவு போன்றவற்றை நன்கு ஊக்குவித்து, கனிம வளங்களைப் பெருக்கி, தொழிற்துறைகளை வளரச் செய்யவேண்டும். 

நிதி நீண்டால் அதாவது பெருகினால் நீதியான வழிகளில் செலவு செய்யப்படவேண்டும். அதற்கு சாதி, மத, நிற பேதமில்லாது, யாவருக்கும் கல்வியும் தொழில் வாய்ப்பும் கிடைக்க வழி செய்ய வேண்டும். நாட்டில் களவு, கொலை, பகை, குறும்பு என்பன இல்லாது பசிக்கொடுமை, நோய், வறுமை  என்பவற்றை நீக்கி, எல்லோரையும் இன்பமாக வாழ வழிவகுத்து, நீதி தவறாது நடக்கும் தலைவனின் கீழ் இந்த உலகமே சேர்ந்து நிற்கும்.

அத்தகைய ஒரு மாபெரும் தலைவனை தமிழருக்காக திருவள்ளுவரே வரவேற்றிருப்பதை இக்குறள் காட்டுகிறது.      

No comments:

Post a Comment