Sunday 20 November 2011

புரியாத புதிர்



இன்றைய உலகில் வாழும் மனிதர்களாகிய நாம் அரிகத்தோ, நேசி, நன்னி, ஸ்பாசொபோ, தாங்ஸ் என ஒருவர்க்கு ஒருவர் உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் நன்றி கூறுகிறோம். உதட்டளவில் நன்றி சொல்கின்றவர்களும் கடமைக்காக நன்றி சொல்கின்றவர்களும் இருக்கிறார்கள். அப்படி போலியாக நன்றி சொல்பவரின் நடிப்பை குரலின் தன்மையும் கண்ணிலுள்ள கருமணியின் சுருக்கமும் காட்டிக்கொடுக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அவர்கள் கூறும் நன்றியைக் கேட்பதால் கேட்பவர் மனம் மகிழ்ச்சி அடையாமல் வேதனைப்படும். இது சிலவேளைகளில் உறவை வளர்ப்பதற்குப் பதிலாக பிரித்துவிடும். இத்தகைய நன்றி கூறுதல் தேவைதானா?

நன்றியை ஆழ்மனதில் இருந்து உள்ளன்போடு கூறுகின்றவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு உள்ளன்போடு கூறப்படும் நன்றி மனிதஉறவை வலுப்படுத்தும். இது சமுதாய கட்டமைப்பிற்கும் உலக ஒருங்கிணைப்பிற்கும் உதவுகின்றது. அதில் எந்தவொரு கருத்து வேற்றுமைக்கும்  இடமில்லை. ஆனால் நாம் நம் நன்றியை மடல்களாகவும் பரிசுப்பொருட்களாகவும் கொடுப்பதுடன் எமது கடமை முடிந்ததென்று அவர்களைக் கண்டும் காணாதவர்களாக இருக்கின்றோம். இதுவே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. 

எமது சங்கத்தமிழ் முன்னோர்களோ ஒருவர் செய்த நன்மைக்கு அதாவது நன்றிக்கு கட்டாயம் உதவி செய்து தீரவேண்டும் என்ற பண்போடு வாழ்ந்தார்கள்.  திருவள்ளுவரும் செய்ந்நன்றியறிதல் என்ற அதிகாரத்தில் மட்டுமல்லாமல் நடுவுநிலைமை, பண்புடைமை, குற்றங்கடிதல், வினைத்தூய்மை  போன்ற அதிகாரங்களில் கூட நன்றியை (நன்மையை) சிறப்பித்துக் கூறியுள்ளார். 

நன்றி என்ற சொல்லை நம் பண்டைத்தமிழர் நன்மை என்ற கருத்தில் உபயோகித்துள்ளனர். ஔவையார் "நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி என்று தரும்கொல் எனவேண்டா" எனக் கூறிய இடத்தில் ஒருவர்க்கு நாம் ஒரு நன்மை செய்தால் அந்த நன்மை எப்போது எமக்குத் திரும்பக்கிடைக்கும் என்று யோசிக்கவேண்டாம் எனக்கூறுகிறார். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இதில் நாம் இன்று கூறும் வாய் வார்த்தையையா ஔவையார் நன்றி என்றார்? அப்படிக் கூறியிருப்பின் 'நன்றி ஒருவர்க்கு செய்தக்கால்' எனக்கூறியிருக்கமாட்டார். 'நன்றி ஒருவர்க்கு சொன்னாக்கால்' என்றே கூறியிருப்பார். 

இது மட்டும் எனக்குப் புரியாத புதிரில்லை. இதற்கு மேலேயும் இருக்கின்றது? இது எனது அறியாமையா? அன்றேல் இன்றைய தமிழர்களாகிய நாம் 'நன்றி' என்ற சொல்லின் உண்மைத் தன்மையை பிறமொழி மோகத்தில் தொலைத்துவிட்டோமா? எம்நாட்டில் ஒட்டவந்தவர் மேல் எமக்கு ஏற்பட்ட மோகத்தால் கடந்த சில நூற்றாண்டுகளில் நாம் தொலைத்தவை எண்ணிலடங்கா. 'இரண்டாயிரத்து நானூறூ ஆண்டுகளின் முன்னர் "தமிழ்கூறு நல்லுலகம்" என்று பனம்பாரனார் கூறினார். இவர் தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் எழுதியவர். அவர் காலத்திற்கு முன்பிருந்தே நம் தமிழினம் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்தது. தனக்கென ஒரு நாகரீகத்தை உருவாக்கி அதனை உலகுக்கு அளித்தது. அதனாற்றான் தொல்பொருள் ஆய்வுகளில் தமிழனின் தொன்மங்கள் உலகெங்கும் கிடைக்கின்றன' என மார்தட்டிச் சொல்லும் எம்மைப்பார்த்து எம் இளம் சந்ததியினர் சிரிக்காது இருக்க வேண்டும். 

அதற்கு நாம் செய்யத்தக்கது என்ன? நாமும் எமது முன்னோரும் எவற்றை எப்படித் தொலைத்தோம் என்ற தரவையாவது எமது சந்ததியினருக்கு வைத்துச் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். அகஆதாரங்களையும் புறஆதாரங்களையும் கொண்டு இதனை நாம் காட்டலாம். பண்டைய நூல்கள் சொல்லும் ஆதாரங்கள் அகஆதாரங்களாகும். கல்வெட்டு தொல்பொருள் போன்றவற்றால் கிடைக்கும் ஆதாரங்கள் புறஆதாரங்களாகும். என்னுள் நன்றியைப் பற்றிய புதிரைப்போட்டவர் திருவள்ளுவரே. ஆதலால் அவர் திருக்குறளில் கூறியுள்ள அகஆதாரங்களைக் கொண்டு நன்றி என்ற சொல்லின் புரியாத புதிரைப் புரிந்துகொள்வோம்.

திருவள்ளுவர் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தில் 
"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்"
என்கிறார். ஒருவன் அடையக்கூடிய நன்மைகளுக்கு அவனின் நல்லொழுக்கமே வித்தாகுமாம். 
"கொடுவாக வையாது உலகம் நடுவாக 
நன்றிக்கண் தங்கினான் தாழ்வு"           - (குறள்:117)
என நன்றியை நடுவுநிலைமை அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். நடுவுநிலைமையோடு நன்மைகள் செய்து வாழ்ந்தவர் வறுமை அடைந்தாலும் உலகம் அதனை தாழ்வாக நினைக்காதாம். இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் பயன்தரும் சொற்களைப் பேசுவதால் மகிழ்வைத்தரும் நன்மைகள் உண்டாகும் என்பதை "நயன்ஈன்று நன்றி பயக்கும்" எனச்சொல்கிறார். 

தூது என்ற அதிகாரத்தில் கூட மாற்றான் மனம் மகிழுமாறு எடுத்துக்கூறி நன்மை உண்டாக்குவதாக தூது இருக்க வேண்டும் என்பதை 
"நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது" என்கிறார். 

குற்றம் கடிதல் எனும் அதிகாரத்தில் எக்காலத்திலும் தன்னை உயர்வாக மதிக்கக்கூடாது, நன்மை தராத செயல்களைச் செய்யவும் கூடாது என்பதை
"வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை"                           -(குறள்: 439)  
எனக்கூறியவர், வினைத்தூய்மை அதிகாரத்திலும்
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை"                              -(குறள்: 652)
என புகழும் நன்மையும் தராத செயல்களை என்றும் செய்யாது விட்டுவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

எமக்குத் தேவைப்பட்ட  நேரத்தில் ஒருவர் செய்த நன்மை சிறிதாக இருந்தாலும் தினையளவு நன்மையாக இருந்தாலும் அந்த நன்மையை மறப்பது நன்றல்ல. ஒருவர் செய்த நன்மையை மறந்தவர்க்கு உய்வே கிடையாது. என்றெல்லாம் 'செய்நன்றிஅறிதல்'  அதிகாரத்தில் கூறுகிறார். நன்மையைக் கொடுக்காத செல்வத்தைப்பற்றி 'நன்றியில்செல்வம்' எனும் அதிகாரத்தில் சொல்கிறார். மேலே நன்றி எனச் சொன்ன இடங்களில் எல்லாம் நன்மை என்ற கருத்திலேயே திருவள்ளுவர் கூறுகிறார்.

அவர் பண்புடமை என்னும் அதிகாரத்தில் பிறரது இயல்பை அறிந்து நடக்கும் தன்மையைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் யாருடைய பண்பை உலகம் பெரிதாகப் பாராட்டும் என்பதை
"நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு"                     - (குறள்: 994)
என்று கூறுமிடத்தில் நன்றியை அறமாகக்  காட்டுகிறார். அதாவது எல்லோரும் பயனடையக் கூடியவாறு நீதியுடன் அறத்தை செய்பவர் பண்பையே உலகம் பாராட்டுமாம். 

திருவள்ளூவர் நன்றியை நல்லது, நன்மை, அறம் போன்ற கருத்துக்களிலேயே கையாண்டுள்ளார். ஆனால் நாமோ ஒருவர் செய்த உதவிக்கு நன்றி கூறுகிறோம். அல்லது நமது நன்றியைத் தெரிவிப்பதற்காக பொருட்களைக் கொடுக்கிறோம். இந்நிலை ஏன் வந்தது என்பது எனக்குப் புரியவில்லை? உதவிசெய்தவர்க்கு நன்றி சொல்வதே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. ஆனால் திருவள்ளுவரோ எமக்கு முற்றிலும் முரணாக நிற்கிறார். 

தந்தையும் மகனும் ஒருவர்க்கொருவர் என்ன செய்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு நாடகக்காட்சியாகக் புதல்வரைப் பெறுதல் எனும் அதிகாரத்தில் காட்டுகிறார். நீங்களும் பாருங்கள். முதற்காட்சியில் ஒரு தந்தை தான் பெற்ற மகனை படிக்கவைத்து கற்றவர் அவையில் முன்வரிசையில் இருக்கக்கூடிய தகுதியை உண்டாக்க நன்றி(நன்மை) செய்கின்றான்.
"தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்"                        - (குறள்: 67)

அடுத்த காட்சியில் தந்தை செய்த நன்றியைப் பெற்றுக்கொண்ட மகனின் பெருமையை, புகழை மற்றவர்கள் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்தவர்கள் இப்படிபட்ட பெருமைகளையுடைய மகனைப் பெற இவனுடைய தந்தை என்ன தவம் செய்தானோ! எனப் புகழ்கிறார்கள். மற்றோர் சொல்லும் அச்சொல்லைக் கேட்டு தந்தை மனம்மகிழும்படி மகன் உதவி செய்கின்றான்.
"மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்"     - (குறள்: 70)
தந்தை செய்த நன்றிக்கு மற்றவர்கள் புகழும்படி வாழ்வதே மகன் தந்தைக்குச் செய்யும் உதவியாகும்.

இதனால் நான் அறிந்து கொண்டது முதலில் செய்யப்படுவது நன்றி, அதற்கு நாம் செய்யும் கைமாறே உதவியாகும். அதனாலேயே 'அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்' என்றும் 'நன்றிக்கடன் தீர்த்தேன்' எனவும் சொல்லும் வழக்கமும் ஏற்பட்டிருக்கிறது. நன்றி என்பது செய்யப்படுவதே அல்லாமல் சொல்லப்படுதல்ல. உதவியும் செய்வதே அல்லாமல் சொல்வதல்ல. நம் முன்னோர்  நம்மைவிட பண்பாட்டில் நன்கு பண்பட்டிருந்தனர். சொல்வதைவிட செய்வதே பெரிதென எண்ணினர்.

அதனாலேயே ஒருவர் எதுவித நன்றியும் (நன்மையும்) செய்யாதிருக்க மற்றவர் செய்யும் உதவியை திருவள்ளுவர்
"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது"                     - (குறள்: 101)
எனக்கூறியதோடு 
"உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து"        - (குறள்: 105)
என்பதில் ஒருவர் செய்த உதவியை அளவிடமுடியாதாம். அது உதவியைப் பெற்றுக்கொள்பவரின் மனதின் தன்மைக்கு ஏற்ற அளவில் இருக்குமாம் என்கிறார்.

கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். ஒருவர் செய்த நன்மைக்கு (நன்றிக்கு) நன்றிக்கடனாக உதவிசெய்தல் சிறந்ததா?  அல்லது நன்றி கூறுதல் சிறந்ததா? இதில் எதனை மிகவும் பண்பட்ட மனிதர்கள் செய்வார்கள்? நம் முன்னோர் எம்மைவிட எவ்வளவு பண்பட்டவராய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும். இவ்வாறு மிகஉன்னத நிலையிலிருந்த எமது பண்டைத்தமிழர் பண்பாட்டைத் தொலைத்துவிட்டு மற்றவர்கள் போல் வாய்வார்த்தையில் நன்றி சொல்கிறோம் இல்லையே என அங்கலாய்த்துக் கொண்டும், மேடைகளிலே ஒரு பெரிய பட்டியலை வைத்துக்கொண்டு அரைமணி நேரத்திற்கு மேலாக நன்றி கூறிக்கொண்டே இருக்கிறோம். இது ஏன்? இதுவும் எனக்குப் புரியாத புதிரே! 

நன்றி என்பது ஒருமையில் சொல்லப்படும் சொல். அதற்கு பன்மை கிடையாது. நன்றி என்பதுடன் 'கள்' விகுதி சேர்த்து ஏன் பன்மையில் சொல்கிறோம்? என்பதும் எனக்குப் புரியாத புதிரே! நன்றி சொல்லவேண்டும் என்றால் பல்லாண்டு! பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு! பலகோடி நூறாயிரத்தாண்டு! என வாழ்த்துவது போல்  பலநன்றி, பல்லாயிர நன்றி, பலகோடி நன்றி என்றோ நன்றிபலகோடி என்றோ சொல்லி மகிழலாம். Thank என்பதை நன்றி என்றும்  Thanks என்பதற்கு நன்றிகள் என்றும் யாரோ சொல்லத் தொடங்க நாமும் தொடர்கதையாகத் தொடர்கிறோம். யாரோ விட்ட பிழையை நாம் ஆண்டாண்டு காலமாகத் தொடர்வது ஏனோ??
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment