Sunday 27 November 2011

மாவீரம் தந்த இதயச்சுமை - பகுதி 1


பண்டைத் தமிழர் தமது வாழ்வியலை அகம் புறம் என இரண்டாகப் பிரித்து தமது இரு கண்ணாகப் போற்றினர். காதல் இன்பத்தால் ஏற்படும் உள்ளத்து உணர்வுகளையும் அவற்றால் ஏற்பட்ட எல்லா விளைவுகளையும் அகம் என்றனர். வெளியே நடக்கும் அரசியல் மாற்றங்களையும் ஒரு  நாட்டின் பொருளாதார நிலைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் வலிமை சேர்த்த போரையும் வீரத்தையும் அவற்றால் ஏற்பட்ட விளைவுகளையும் புறம் என்றனர். அகமும் புறமும் சேர்ந்ததே மனிதவாழ்வு  என்பது பண்டைத்தமிழர் கண்ட முடிபாகும்.

அதனை சங்க இலக்கியங்கள் சங்கத்தமிழர் வாழ்வியல் மூலமாக எமக்குக் காட்டுகின்றன. நான் இங்கே அன்றைய தமிழரை பண்டைத்தமிழர் என்றும் சங்கத்தமிழர் என்றும் சொல்வதை நீங்கள் கொஞ்சம் உங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். சங்கத்தமிழருக்கு முன்வாழ்ந்த தமிழரை பண்டைத்தமிழராய் சுட்டுகிறேன். ஏனெனில் தொல்காப்பியமும் புறநானூறு, பதிற்றுப்பத்து, மலைபடுகடாம் போன்ற சங்கநூல்களின் சில பாடல்களும் சங்கத்தமிழருக்கு முன் வாழ்ந்த பண்டைத்தமிழரின் வரலாற்றையும் கூறுகின்றன. அவற்றால் இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த பழந்தமிழரின் மாவீரத்தை நாம் அறியலாம்.
அவர்களின் அகவாழ்வு எப்படி அன்பும் அறமும் பண்பும் உடையதாய் இருந்ததோ அதுபோல் புறவாழ்வும் அன்பும் அறமும் பண்பும் உடையதாய் இருந்தது. வீரம் நிறைந்த புறவாழ்வை மறம் என அழைத்தனர். அன்பே அவர்களது மறமாண்பைப் போற்றி வளர்த்தது. அதனை 
“அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை" 

என திருக்குறளும் எடுத்துச் சொல்லும். வள்ளுவர் இக்குறளில், 'உண்மையை அறியாதோர் அறத்திற்குமட்டுமே அன்பு துணை செய்யும் என்பர். ஆனால் மறமாகிய வீரம் செறிந்த செயல்களைச் செய்யவும் அன்பே துணை செய்கின்றது' என்கிறர். 
அன்பு எப்படி மறத்திற்கு துணை செய்யும் என நினைக்கிறீர்களா? நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் வெளியே சென்றிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்களின் அன்பு மனைவி போட்டிருந்த நகைகளைக் கண்ட மாற்றார் சிலர் மனைவியை அடித்து நகைகளைப் பறிக்கிறார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவர்களை எதிர்த்து நொறுக்கியிருப்பீர்கள். உங்களுக்குள் மறைந்து இருந்த அந்த வீரம் வெளிப்படக் காரணம் என்ன? உங்கள் மனைவி மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பே. 
அந்த அன்பு தன்இனம், தன்மொழி, தன்நாடு, தன்தேசமென விரியும். அப்படி விரிந்த அன்புடன் தன்இனத்திற்காக தன்நாட்டிற்காக மறச்செயல் செய்தோரை மறவர் என்றனர். பொது நலனுக்காக வீரம் கொப்பளிக்க நின்ற அந்த மறவர் தம்முயிரை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. மானம் பெரிதென நினைந்து வீரம் விளைந்த நெஞ்சும் தீரம் தினவெடுக்கும் தோளுமாக மறத்தமிழன் புறப்பட்டான். மறக்குடி தோன்றிற்று. மறக்குடிப் பெண்டிர் தம் குழந்தைகளை மானமுள்ள மறவராக வளர்ப்பதையே தம் கடமையாகக் கருதினர். 
காவற்பெண்டு என்பவர் சங்ககாலத்தில் வாழ்ந்த பெண்பாற் புலவராவார். அவரும் ஒரு மறக்குடிப் பெண்ணே. அவருக்கு ஒரே ஒரு மகன். மகனின் போராற்றலில் மறமாண்பில் அவருக்கிருந்த பெருமிதத்தையும் தமிழினத்தின் மானவீரத்தையும் புறநானூற்றிலுள்ள அவரது ஒரே பாடல் சொல்கிறது. அப்பாடலை  அவர் வடித்து இரண்டாயிர வருடங்கள் உருண்டோடிய போதும் இன்றும் என்றும் அவரது சொல்லாட்சி மறம் மேலிட ஒவ்வொரு தமிழ்த்தாய்க்கும் விம்மிதம் தரும். காவற்பெண்டிடம் உன்மகன் எங்கே எனக்கேட்க  அதற்கு அவர் சொன்ன பதிலாக அப்புறப்பாடல் அமைந்துள்ளது.
“சிற்றில் நற்றூண் பற்றி, ‘நின்மகன்
யாண்டுளனோ என வினவுதி; என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே,
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!”      
                                                                 - (புறம்: 86)
சிறுவீட்டின் அழகிய தூணைப் பற்றிப்பிடித்து நின்று ‘உன்மகன் எங்கே உள்ளான்’ என்று கேட்கிறாய், என்மகன் எங்கே இருக்கிறான் என்பதை அறியேன். புலி கிடந்து சென்ற கற்குகை போல, அவனைப்பெற்ற வயிறு இதோ இருக்கிறது. அவன் போர்க் களத்திலே தான் தோன்றுவான்' எனக் காவற்பெண்டு சொல்கிறார். 

மகனின் வீரத்தில் எவ்வளவு நம்பிக்கை இருந்தால் அந்தத் தாயால் இப்படி பேசியிருக்கமுடியும்? புலி பசித்தால் குகையில் கிடவாது. அது வேட்டையாடப் புறப்பட்டுவிடும். பசி தீர்ந்த பின்னரே அது குகையைத் தேடிவரும். காவற்பெண்டின் மகனுக்கு இருந்த பசி போர்ப்பசி. போர்ப்பசி எடுத்தவன் போர்க்களத்தில் தானே இருப்பான். வீட்டிலா இருப்பான்? அவனது பசி தீர்ந்த பின்னரே அங்கு வருவான் என்பதையும் உவமையால் சொல்கிறார். ஆண்மகனின் சிங்கம் போன்ற போராற்றலுக்கு, இப்பாடலை எடுத்துக் காட்டுவர். 
இரண்டாயிர ஆண்டுகளுக்குப் பின்பும் காவற்பெண்டு போன்ற எத்தனை மறக்குடிப் பெண்களை நம் தாயகமும் தந்தது என்பதற்கு எமது வீரம் விளைந்த நிலமே சாட்சி. நம் விடியலுக்காக நடந்த களவேள்வியிலே ஆயுதமேந்தியறியாத ஆடவரும் பெண்டிரும் பாலகரும் ஏன் நோயுற்றோரும் கூட குண்டுகளால் சிதைக்கப்பட்டனர். வைத்தியசாலைகள் கல்விக்கூடங்கள் சிதறடிக்கப்பட்டன. வந்தாரை வாழ்வித்த வன்னி மண்ணுக்கு வானமே கூரையானது. அங்கு ஊறுகின்ற கிணற்றிலும் உதிரம் ஊறியது. ஆறு குளம் அதிலும் உதிரம் ஆடியது. சேறு சகதி எதிலும் சடலம் நாறியது.  

அதனால் ஈழமே ஈடழிந்து ஈமவனம் ஆனது. இரண்டாம் உலகமகாயுத்தத்தின் பின் 1948ல் இயற்றப்பட்ட மனித உரிமைச் சட்டத்தில் உள்ள மிகமுக்கிய அடிப்படை உரிமையான நீரின் உரிமையும் மறுக்கப்பட்டது.  இந்த அவலம் எப்போது நடந்தது? நாகரீகம் மிக்க மனிதர்களாக தம்மையே நினைத்துக்கொள்ளும் இந்த உலகில் 21ம் நூற்றாண்டில் நடந்தது. 
ஆனால் இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மறப்போரிலும் அறத்தையே பேணி மனித உரிமைக்கு வழிகாட்டியதை நெட்டிமையார் என்னும் சங்ககாலப் பெண்புலவர் புறநானூற்றில் வரலாற்றுப்பதிவாக பதித்து வைத்துள்ளார்.
"ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் 
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈந்த
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே!                
                                                                    - (புறம்: 9)

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பகைவர் நாட்டினுள் படையுடன் புகுந்ததும் முதலில் போர் நடைபெறப்போகும் இடத்திலுள்ள பசுக்கள், பசுக்களைப் பார்க்கும் பார்ப்பனர், பெண்கள், நோயுற்றோர், புதல்வரைப் பெறாதோர் யாவரும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள், எமது அம்புகளை விரைவாகச் செலுத்துவோம் எனப் பறையறைவித்து எல்லோரையும் அவ்விடத்தில் இருந்து அகற்றிய பின்பே போர் செய்தான். 

ஆனால் தன் நாட்டின் உள்ளே தன் நாட்டு மக்களையே அது பாதுகாப்பு வளையம் எனக்கூறி அங்கு போகவைத்து குண்டுமழை பொழிந்து  கொன்றொழிப்பது இந்த நூற்றாண்டுப் வழக்கம். முதுகுடுமிப் பெருவழுதி அறத்தொடு நின்று மறப்போர் செய்தான். அதுவே தமிழர் பழக்கம். அதுவே மனிதப்பண்பு. மாவீரம் விளைந்த நெஞ்சிலேயே அது இருக்கும். அம்மாவீரன் பகைவரிடத்திலும் அறநெறி காத்ததால் பஃறுளி ஆற்றின் மணலிலும் அதிகநாள் அவனது செங்கோல் நிலைத்திருக்க நெட்டிமையார் வாழ்த்தியுள்ளார். 

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளிக்கும் நடந்த போரில் இருவரும் இறந்தழிந்தனர்.
"அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம் மாய்ந்தனரே”                                                                  
                                                                    - (புறம்:62: 7-8)
என அந்த அவலத்தைச் சொல்லுமிடத்தில், 
"வருதார் தாங்கி, அமர்மிகல் யாவது?           
                                                   - (புறம்:62: 1)
போரிட்டு ஒருவரை ஒருவர் வெல்வோம் என நினைப்பது எவ்வளவு பேதமை, எனத்தொடங்கும் சங்கப்புலவரான கழாத் தலையர், அவ்வரசர்களின் அறத்தையும் மறத்தையும் கூறியதோடு நிற்காது அவர்கள் மானவீரத்தை மாவீரத்தை பொலிக நும் புகழே! என்று வாழ்த்துவதையும் அப்பாடல் சொல்கிறது. போர்களால் வந்த மனித அவலம் சங்கால அறிஞர் நெஞ்சை எப்படி உலுக்கியதோ அப்படியே உண்மையான மாவீரம் பெருமிதம் கொள்ளவைத்ததையும்  சங்கஇலக்கியம் காட்டுகிறது. 

இவ்வாறு  அன்றைய தமிழர் தம்குலமானம் காக்கச்செய்த மறப்போர்களையும் அறத்துடன் நின்றே செய்ததாக சங்கநூல்கள் சொல்லும்.  'அறன் எனப்பட்டதே இன்பம்' என்பதை உணர்ந்ததால் அறத்தை பகைவர்க்கும் செய்தனர். மாவீரத்தை நம் தமிழ் மூதாதையர் எப்படி போற்றினர் என்பதைத் தொடர்ந்து காண்போம். 
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment