Sunday, 27 November 2011

வாயிருந்தும் தமிழே படித்து ஆளுறாதவர்

சமணர்கள் - உத்தமபாளயம்

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் படிக்கவந்த பெற்றோர்களில் பலர் தம் பிள்ளைக்ளுக்கு  தமிழ் சொல்லிக் கொடுக்கவில்லை. அதற்கான வாய்ப்பும் அன்று இருக்கவில்லை. அப்படி தமிழ்படிக்க வாய்ப்புக் கிடைக்காதோரும் இப்போது பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களில் தமிழ்பேசத் தெரிந்தாலும் எழுத வாசிக்கத் தெரியாதோரும் தமக்கு முறையாகத் தமிழைக் கற்பிக்கவில்லை என பெற்றோரையே குறை சொல்கிறார்கள். இவர்களைப் போல திருநாவுக்கரசு நாயனாரும் வாயிருந்தும் தமிழைப்படித்து ஆளாக முடியாது தன்னை அழித்துவிட்டதாக குறைசொல்கிறார். பெற்றோரை அல்ல சமணரைக் குறை சொல்கிறார்.

அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பதற்கமைய அரசனான மகேந்திரவர்மன் சமண சமயத்தைத் தழுவியதால் அவனின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த திருநாவுக்கரசு நாயனாரால்  சமணசமயத்தைத் தழுவி சமணநூல்களையே படிக்க முடிந்தது. எம்பிள்ளைகளைப் போல் அவராலும் தாய்மொழியாம் தமிழைப்படிக்க முடியவில்லை. அன்றைய தமிழகத்தின் வடக்கே மகேந்திரவர்மனும் தெற்கே நின்றசீர்நெடுமாறனும் சமணர் கைப்பாவைகளாய் இருந்தனர். இந்த நிலையிலேயே திருநாவுக்கரசர், அவரது தமக்கை திலகவதியார் போன்றோர் மெல்லவிழித்தனர்.  இன்றைய நம் இளம் சந்ததியினரைப் போல் தமிழர் நிலையை எண்ணிக்கலங்கினர். வயதைப் பொருட்படுத்தாமல் தமிழை மிக ஆர்வத்துடன் கற்றனர். மெல்ல எழுந்தது பக்திப்புயல். அது சமணசமய அழிவுக்கு காரணமானது. சமணர் தமிழைப் படிக்கவிடாது அழித்தைத் திருநாவுக்கரசு நாயனாரே தமது தேவாரத்தில் பதிவு செய்துள்ளார்.

"வாயிருந்துந் தமிழே படித்து ஆளுறா
ஆயிரம் சமணும் அழிவாக்கினான்
பாயிரும் புனல் ஆறை வடதளி
மேயவன் என வல்வினை வீடுமே"            - (பன்னிரு: 5: 58: 9) 

பன்னிரு திருமுறைகளிலே நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளாக 4000த்திற்கும் மேற்பட்ட தேவாரங்களைத்  தமிழில் இயற்றிய பேரருளாளரின் நெஞ்சின் குமுறல் இது. அவர் ஒரு சமணர் மேலோ, இரண்டு சமணர் மேலோ பழி போடவில்லை. ஆயிரம் சமணும் என ஒட்டுமொத்த  சமணரையும் சுட்டுகிறார்.  திருநாவுக்கரசு நாயனார் இத்தேவாரத்தில் 'வாயிருந்துந் தமிழே படித்து ஆளுறாதவர்' என தன்னைத் தானே கூறுகிறார். அன்றைய சமணர்களால் எத்தகைய பாதிப்பும் அழிவும் ஏற்பட்டிருந்தால் இத்தகைய ஒரு நெஞ்சைப் பிழியும் ஒரு வரலாற்றுப்பதிவை அவர் பதிந்திருப்பார்.

வருங்காலத்தில் நம் பிள்ளைகளும் திருநாவுக்கரசரைப் போல் தம்மை நாம் அழித்ததாக குறைசொல்லாதிருக்க வேண்டுமா? அதற்கு ஒரேவழி அவர்களுக்குத் தமிழைக் கற்பிப்பதே. உத்தமபாளையத்தில் உள்ள சமணப்பள்ளியில் செதுக்கப்பட்டிருக்கும் சமணமுனிவர்களின் புடைப்புச் சிற்பங்களே மேலுள்ள படத்தில் தெரிகின்றன.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment