Sunday 13 November 2011

குறள் அமுது - (9)


குறள்:  
“தானம்தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
 வானம் வழங்காது எனின்”                            - 19

பொருள்
மழைமேகம் மழையைத் தராவிட்டால் வியப்பு மிக்க இந்த உலகத்தில் தானம் தவம் ஆகிய இரண்டும் நிலைத்து இருக்காது.

விளக்கம்: 
இந்தத் திருக்குறள் வான்சிறப்பு என்ற அதிகாரத்தில் இருக்கிறது. ‘வானம் வழங்காது எனின், தானம் தவமிரண்டும் இந்த வியனுலகத்தில் தங்காது’ எனக்கொண்டால் இந்தத் திருக்குறளை இலகுவாக புரிந்து கொள்ளலாம்.  இங்கே வானம் என்பது மழைமேகத்தைக் குறிக்கின்றது. நாம் எமது விருப்பபடியே தானத்தையும் தவத்தையும் செய்கிறோம். அதற்கும் மழைக்கும் என்ன தொடர்பு? மழையா நீ தானத்தைச் செய், நீ தவத்தை செய் எனச் சொல்கிறது? இல்லையே! அப்படியிருக்க ஏன் திருவள்ளுவர் மழை இல்லாவிட்டால் இந்த உலகத்தில் தானமும் தவமும் தங்கியிருக்காது என்கிறார்?
தானம் தன்நலம் கருதாது பிறர்நலம் பேணுவோர் செய்வது. பிறர் கேட்காமலே தானாக மனம் உவந்து கொடுப்பது தானம் (தான் + அம் = தானம்). தவம் தன்நலமே சிறந்தது என நினைப்போர் செய்வது. தவமும் துறவும் வேறு வேறானவை. தவத்தின் உயர்ந்த படிநிலையே துறவு. தவத்தை பற்றேயில்லாத இறைவன் பற்றை பிடித்துக்கொள்ளும் நிலைக்கும், துறவை பற்றைவிட்ட நிலைக்கும் சொல்லலாம். பொதுவாகப் பார்த்தால் இல்லறவாழ்க்கை  வாழ்பவர்கள் தானம் செய்வர். துறவறவாழ்க்கை வாழ்பவர்கள் தவம் செய்வர். 
முதலில் இந்த இவ்விருவகை வாழ்க்கை வாழ்வோரும் இயல்பாக வாழ வளம்மிக்க நாடு இருக்க வேண்டும். நாட்டிற்கு வளமையைத் தருவது பசுமை. நாடு பசுமையாக இருக்க மழை வேண்டும். மழையிருந்தாலே நாட்டில் வளம் கொழிக்கும். வளம்மிக்க நாட்டில் வாழ்பவரே தாமாக மனமுவந்து தானம் செய்வர். வறட்சியான நாடு வளமற்று இருக்கும். வளமற்ற நாட்டில் எவராவது வளத்தோடு வாழமுடியுமா? யாரால் வள்ளலாக முடியும்? தவம் செய்பவன் தான் விரும்பிய பற்றுக்களை விடுவதற்கு அங்கே என்ன பற்றுக்கள் இருக்கப்போகின்றது? 

எனவே வானம்  மழையைத் தரவில்லை எனில் தானம் தவம் இரண்டும் இந்த விந்தையான உலகில் எப்படி இருக்கமுடியும்? மழையில்லையா! தானமும் தவமும் தங்கி இருக்காது என்கிறது இக்குறள்.

No comments:

Post a Comment