Saturday 5 November 2011

குறள் அமுது - (7)


குறள்:
ஓட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று. - 967

பொருள்:
தன் பகைவன் பின்னே சென்று ஒருவன் உயிர் வாழ்தலைவிட அப்பொழுதே இறந்தான் எனச் சொல்லப்படுதல் நன்றாகும்.

விளக்கம்:
இத்திருக்குறள் மானம் எனும் அதிகாரத்தில் ஏழாவது குறளாக இருக்கிறது. ஒன்றோடு ஒன்றைப் பொருந்தச் சேர்தல் ஒட்டுதலாகும். ஒருவரோடு ஒருவர் மனதால் ஒட்டி உறவாட முடியாதோர் ஒட்டார். உண்மையான அன்பு எனும் நெஞ்சப்பிணிப்பு இல்லாதோரும் ஒட்டாதோரே. எமது பகைவரும் எம்மை இகழ்வோரும் எம்மோடு அவர்களது மனதால் ஒட்டி உறவாடாது உதட்டளவில் பேசிப் பழகுவதால் அவர்களை ஒட்டார் என்பர். இக்குறளில் கெட்டான் எனும் சொல் இறந்துபோதல் என்ற கருத்தையே தருகிறது. எமது பகைவரின் பின் சென்று அவர்கள் தரும் பொருள்களைப் பெற்று உண்டு எமது உடம்பை வளர்த்து உயிர் வாழவேண்டிய நிலை ஏற்பட்டால் அவ்விடத்திலேயே இறந்து போதல் மிகவும் நன்றாகும். 
பகைவனிடம் கையேந்தி அடிவணங்கி அடிமையாய் உயிர் வாழ்வதற்கு  நம் வாழ்வென்ன தெய்வ மருந்தா? அப்படி வாழ்ந்தாலும் எவ்வளவு காலம் நம்மால் உயிர்வாழ முடியும்? என்றோ ஒரு நாள் நாம் இறப்பது உறுதி. எப்படியாவது உயிர்வாழ்ந்து இன்பம் காணவேண்டும் என்பது உடல் பெற்ற ஒவ்வோர் உயிரின் நோக்கமாக இருக்கலாம். அந்நோக்கம் எல்லா மனிதர்க்கும் பொருந்தாது. மானமுள்ள மனிதரால் மதிப்பிழந்து உயிர்வாழ முடியாது. அவர்களின் மான உணர்ச்சியே அவர்களை அணுஅணுவாகக் கொல்லும். 
பிறரால் நாம் மிகவும் இழி நிலைக்கு தள்ளப்படாமல் எம்மைக் காக்கும் ஓர் உணர்ச்சியே மானமாகும். நாம் பிழைசெய்யாமல் தண்டனை பெறும்போது வெளிப்படும் தன்மானத்தைவிட தன்னலம் அற்று தன்னினம் தன்குடி தன்நாடு என பிறர்நலம் பேணும் இடத்தில்  உண்டாகும் இனமானமே இக்குறளில் பேசப்படுகின்றது. என்னைவிட என் இனம் சிறந்தது. என்னினம் தமிழினம். தொன்மையான இனங்களில் தமிழினமும் ஒன்று. என்னால் என்னினத்திற்கு களங்கம் ஏற்படலாமா? என உண்டாகும் மான உணர்ச்சியே இனமானமாகும். இனமானம் பெரிதென எண்ணுவோன் தமது பகைவர் பின்னே சென்று இரந்துண்டு வாழ்வதைவிட இராவணன் போல் அங்கேயே இறந்தான் எனப்பேசப்படுவது நல்லது.

No comments:

Post a Comment