Wednesday 9 November 2011

குறள் அமுது - (8)


குறள்:
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் - 67

பொருள்:
தந்தை தன் பிள்ளைகளுக்கு செய்யவேண்டிய நன்மை, அவர்களை படிக்கவைத்து அறிஞராக்கி கற்றவர் சபையில் முதன்மை பெறச்செய்வதே.

விளக்கம்:
இத்திருக்குறள் புதல்வரைப் பெறுதல் என்னும் அதிகாரத்தில் வரும் ஏழாவது குறளாகும். நம் தமிழ் மூதாதையர் மற்றவர்க்கு நன்றி கூறாது நன்றி செய்தார்கள் என்பதை இக்குறள் மிகத்தெளிவாகக் காட்டுகிறது. அதனால் நன்றி என்ற சொல்லின் உண்மைக் கருத்தைச் சொல்வதோடு தமிழரது பண்பின் சிறப்பையும் எடுத்துச் சொல்கிறது. 
‘செய்நன்றி அறிதல்’ எனும் அதிகாரத்தில் “காலத்தினால் செய்த நன்றி” எனத் திருவள்ளுவர் கூற, ஔவையாரும் “நன்றி ஒருவர்க்கு செய்தக்கால்” என்று கூறினாரே தவிர சொன்னக்கால் என்று கூறவில்லை. நன்றி செய்யப்படுவதே அல்லாமல் சொல்லப்படுவதல்ல.  இக்குறளில் நன்றி என்ற சொல் நன்மை எனும் கருத்திலேயே வருகின்றது. 
ஒரு பிள்ளையைப் பெற்று வளர்க்க யார் யார் என்னென்ன கடமை செய்ய வேண்டும் என்பதை சங்ககாலப் பெண்புலவரான பொன்முடியார்
ஈன்று புரந்தருதல் என் தலைக்கடனே
         சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே’
எனக் கூறுகிறார்.

பிள்ளையைப் பெற்றெடுத்து நோய் நொடி இல்லாது நல்ல உணவு கொடுத்து வளர்த்தெடுப்பது ஒரு தாயின் கடமை. அப்பிள்ளையை கல்வி கற்கவைத்து சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை. வீரத்தை கொடுப்பவள் தாய். தீரத்தைக் கொடுப்பவன் தந்தை. பெற்றோர் ஓடி ஓடி  உழைத்து பொன்னும் பொருளும் சேர்த்து வைப்பதை விட பிள்ளைகளுக்கு அறிவெனும் விளக்கைக் கொடுத்தால் அது வழிகாட்டும். தமிழர் இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே குழந்தை வளர்ப்பில் மிகத்தெளிவுள்ளவர்களாக அறிவுக்கு முதன்மை கொடுத்து வாழ்ந்துள்ளனர் என்பதை இக்குறள் காட்டுகிறது.
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு துறையில் சிறந்தவராக இருப்பர். தன் பிள்ளைக்கு எது சிறப்பாக வரும் என்பதை அறிந்து வழிகாட்டுவதே தந்தையின் பொறுப்பு. எனவே பல அறிஞர் கூடியிருக்கும் சபையில்  உங்கள் பிள்ளை அறிஞனாக, தலைவனாக முதன்மைபெறக்கூடிய தகுதியை ஏற்படுத்திக் கொடுங்கள். அதுவே தந்தை தன் பிள்ளைக்குச் செய்யும்  நன்மையாகும். 

No comments:

Post a Comment