Sunday, 13 November 2011

எம்சுவாசக்காற்று - பகுதி 2


எமக்குப் பண்டைத் தமிழரின் மிக நுட்பமான ஆய்வுத்திறனை விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகள், கொடிகள், மலைகள், நீர்நிலைகள், நிலங்கள் யாவையும் கொண்டுள்ள காரணப் பெயர்களே எடுத்துக்கூறுகின்றன. 
மனித நாகரீகமே தோன்றாத நிலையில் அதனை தோற்றுவிப்பது வேறு, மனித நாகரீகம் நன்றாக வளர்ச்சியடைந்த நிலையில் அதனை வளர்த்தெடுப்பது வேறு. மனித நாகரீகம் தோன்றாத காலத்தில் மனித நாகரீகத் தோற்றத்திற்கு வித்திட்டதாலேயே இன்று உலகில் பேசப்படும் ஏனைய மொழிகளுக்குக் கிட்டாத  அழியாப் பெருமையை தமிழ்மொழி தனக்கென வைத்திருக்கின்றது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்மொழியைப் பேசும் தமிழராய்ப் பிறந்த நாம் பிறமொழி மோகத்தில் மயங்குவது ஏன்? மனித நாகரீகத் தோற்றத்தில் துணை நின்ற தமிழ்மொழியைப் பேசும் நாம் மனித நாகரீகம் வளர்ச்சியடைந்த நிலையில் அதன் அழிவுக்கு வழிவகுக்கலாமா? 
பண்பாட்டின் தொடக்கம் தென்னிந்தியா என்னும் நூல் (Beginning of civilisation in South India by H.D Sankalia) உலகில் முதன்முதலாகக் கிடைத்த காலத்தால் முந்திய எழுத்து சிந்துவெளி எழுத்தே என்றும் எகிப்திய நாகரீகத்தை விட தமிழர் நாகரீகம் முந்தியது என்றும் கூறுகிறது. சிந்துவெளி நாகரீகம் 3500 வருடப் பழமையானது. சுமேரிய நாகரீகம் 5000 வருடப் பழமையானது. ஆனால் சிந்துவெளி மக்களும், சுமேரீய மக்களும் எழுதிய எழுத்துகளுக்கும் முந்திய எழுத்து வடிவத்தை காலி மாவட்டத்திலுள்ள குகை ஒன்றில் கண்டுபிடித்துள்ளார்கள்.
(source:  Goddesschess.blogspot.com) 


அந்த எழுத்துவடிவம் 10,000 வருடப் பழமையானது என ஶ்ரீலங்கா சன்டே டைம்ஸ் வலைத் தளம் (Sri Lanka Sunday Times online) பங்குனி மாதம் 8ம் திகதி 2008ம் ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தது. எவ்வாறு அந்த எழுத்தின் காலத்தை வரையறை செய்தார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும் பத்தாயிர வருடங்களுக்கு முன் அவ்வெழுத்தை எழுதிய மனிதனும் ஈழநாகரீக வரலாற்றில் மொழி உருவாக்கலின் முன்னோடியே. அவ்வெழுத்து வடிவத்தை பழந்தமிழ் எழுத்து வடிவத்தின் தோற்றுவாயாகவும் கொள்ளலலாம்.

அந்த எழுத்துச் சான்று காலியிலுள்ள ‘யாக்கலமுல்ல’ என்ற பகுதியில் கிடைத்துள்ளது. யாக்கலமுல்ல என்றவுடன் அது தமிழ்ப்பெயரா? இல்லையே! எப்படி பழந்தமிழ் எழுத்து வடிவத்தின் தோற்றுவாயெனக் கொள்ளமுடியும் எனும் ஐயங்கள் உண்டாவது இயல்பே. யாக்கலமுல்ல பண்டைத்தமிழர் வாழ்ந்த இடமா என்பதைப் பார்ப்போம். 

சங்கத்தமிழ் ஆலமரத்தை ‘யா’ என்றும் ‘யாஅம்’ என்றும் அழைப்பதைக் காணலாம். 

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்”                 
                              - (குறுந்தொகை 37:2-3)

என்பது குறுந்தொகைப் பாடல். பெண் யானையின் பசியைப் போக்க, பெரிய துதிக்கையையுடைய ஆண் யானை மென்மையான சின்ன விதையுள்ள ஆலமரத்தை உரிக்குமாம். 

யாப்பது என்றால் பரப்பது என்று பொருள். ஆலமரம் பரந்து வளர்ந்த காரணத்தால் அதற்கு யாமரம் என்று பெயரிட்டனர். தற்கால தமிழர்களாகிய நாம் பண்டைத்தமிழர் யாடு என்றதை ஆடு ஆகவும், யானை என்றதை ஆனை ஆகவும் கூறுகிறோம். இதற்கு புறநானூற்றில் பிசிராந்தையார் 
யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர்'                       
                                 - (புறம் 191:1-2)
எனப் யாண்டு எனச் சொன்னதை நாம் ஆண்டு எனச்சொல்வதையும் இது போல் வேறு பாடல்களையும் சங்கத்தமிழில் இருந்து எடுத்துக்காட்டமுடியும். 
தனித்து உயர்ந்து மலையாக நிற்காது நிலத்தோடு சேர்ந்த பெருங்கற் பகுதிகளை பழந்தமிழர் ‘கல்’ என அழைத்தனர். உதாரணமாக திண்டுக்கல், குருநாகக்கல், செங்கடம்புக்கல் போன்றவற்றைக் கூறலாம். பருத்தயானை போன்ற கல்லாக இருந்த காரணத்தால் குரு + நாகம் + கல் = குருநாகக்கல் (குரு - பருத்த, நாகம் - யானை) என அழைக்கப்பட்ட இடம், குருநாகல் ஆகி சிங்களத்தில் குருநாகல என உருமாறி நிற்கிறது. செங்கடம்பு மரங்கள் நிறைந்து இருந்த காரணத்தால் செங்கடம்புக்கல் என அழைக்கப்பட்ட இடம், செங்கடங்கல் ஆகி சிங்களத்தில் செங்கடகல என உருமாறி நிற்கிறது. திண்டுக்கல் தமிழ்நாட்டில் இருப்பதால் தப்பிவிட்டது. இவைபோலவே யாக்கலமுல்ல என்பதிலுள்ள ‘கல’ எனும் சிங்களச் சொல்லும் ‘கல்’ என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபாகும்.
‘யாக்கலமுல்ல’ என்ற இடத்தின் பெயரிலுள்ள ‘முல்ல’ என்பதும் ‘முல்லை’ எனும் தமிழ்ச் சொல்லில் இருந்து திரிந்த சிங்கள ஒலிவடிவம் ஆகும். அதாவது தமிழில் நாம் ‘முல்லை’ என்பதை சிங்களத்தில் ‘முல்ல’ என்கிறார்கள். பண்டைய தமிழர் நிலத்தின் இயல்பைக் கொண்டு நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்காகப் பிரித்து நானிலம் என்றழைத்தனர். அதில் காடும் காடுசார்ந்த நிலத்தை முல்லை என அழைத்தனர். அதனை
மாயேன் மேய காடுறை உலகமும்”
என முல்லை நிலத்தைக் எடுத்துக்கூறும்  தொல்காப்பியர், அவருக்கு முன்னர் வாழ்ந்த பண்டைத்தமிழர் தாம் வாழ்ந்த நிலத்தை அவற்றின் பண்பைக் கொண்டு பாகுபடுத்தி அழைத்ததையும் 
“முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” 
என்று வரிசைப்படுத்திக் காட்டுகிறார். 

ஆதலால் பண்டையதமிழரால் முல்லை என்று அழைக்கப்பட்ட காட்டு நிலப்பகுதிகளே சிங்களத்தில் முல்ல என சொல்லப்படுகின்றன. இவ்வாறு நிலத்தின் தன்மையைக் கொண்டு அதனை வெவ்வேறு பெயரிட்டழைத்ததை சிங்களத்தில் காட்டுவதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? அன்றேல் பாளி மொழியில் காட்டமுடியுமா? 
எனவே யா, கல், முல்லை என்ற மூன்று தமிழ்ச் சொற்களும்
யா + கல் + முல்லை = யாக்கல்முல்லை எனத் தமிழில் புணரும். பண்டையதமிழர் தாம் வாழ்ந்த இடமான ஆலமரக்கல் அதாவது யாக்கல் இருந்த முல்லைநிலக் காட்டுப்பகுதியை யாக்கல்முல்லை என அழைத்தனர். தமிழர் யாமரமென ஆலமரத்தை அழைத்த சங்ககாலத்தில் சிங்களமக்களோ, சிங்கள மொழியோ, தோன்றவில்லை. எனவே இப்போது யாக்கலமுல்ல என சிங்களத்தில் கூறப்படும் இடம், சங்ககாலப் பழமையானது என்பது தெரிகிறதா? சங்ககாலப் பழமைமிக்க ஊரில் கிடைத்த அவ்வெழுத்துருவை நாம் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். அதனை நம் நாட்டிலுள்ள வரலாற்று ஆய்வாளர்கள் காய்தல் உவத்தல் இன்றிச் செய்ய வேண்டும். அது மானுடரின் மொழிவரலாற்றுக்கு அவர்கள் செய்யவேண்டிய கடமையாகும். 
                                                                                             ஆலமரநிழலில் காலித்துறைமுக அம்பலம்   (Photo source Wikipedia)     
இன்றும் கூட காலி யாக்கலமுல்ல பகுதியில் ஆலமரங்கள் இருக்கின்றன. அந்நாளில் தமிழர் கூடியிருந்து கதைத்த ‘அம்பலம்’ காலித் துறைமுகத்தில் இப்பொழுதும் இருக்கிறது. அந்த அம்பலமும் ஆலமரநிழலின் கீழேயே இருக்கிறது. அந்த இடத்தை சிங்களத்தில் ‘அம்பலம’ என அழைக்கிறார்கள். ‘அம்பலம்’ என்பதும் தமிழ்ச் சொல். பொன்னால் செய்த அம்பலமே சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலம்.  

சொற்பொழிவுகளும் இசை, கூத்து முதலிய கலைகளும் குற்றவாளிகளை அம்பலப்படுதும் வழக்குகளின் தீர்ப்புக்களும் அம்பலங்களில் பலரும் அறிய நடாத்தப்பட்டன. அம்பல் என்ற சொல்லடியாகப் பிறந்ததே அம்பலம். தொல்காப்பியர் 
“அம்பலும் அலரும் களவு வெளிப்படுதலின்” 
என்று பிறர் அறியாது காதலிப்போரது காதல், மற்றவர்களுக்குத் தெரியவருவதை அம்பல் எனவும் அலர் எனவும் கூறுவதாக தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ளார். அதாவது பிறர் அறியாது மறைந்திருந்த விடயத்தை வெளிப்படுத்துவது அம்பலாகும். இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே தாமறிந்த காதலர் செய்திகளைப் பெண்கள் எப்படியெல்லாம் நடித்து அம்பல் தூற்றினார்கள் என்பதை நற்றிணை ஒரு காட்சியாகவே படம்பிடித்து வைத்துள்ளது. 
“சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற”                        
                                    -(நற்றிணை149:1-3)
காதல் செய்யும் கன்னியைப் பற்றிய செய்தியை அத்தெருவில் வாழும் பெண்கள் சிலரும் பலருமாகச் சேர்ந்து சேர்ந்து நின்று ஒருவரை ஒருவர் கடைக்கண்ணால் பார்த்தும், ஆஆ! உண்மையாகவா! அவளா நம்பமுடியவில்லையே! என மூக்கின் நுனியை சுட்டுவிரலால்  வியப்போடு தொட்டு அம்பல் தூற்றினார்களாம். இதனை இன்றைய பாணியில் சொல்வதானால் தெருப்(மறுகு) பெண்கள் சிலரும் பலருமாகக் கூடி கிசு கிசு பரப்பினார்கள் எனச்சொல்லலாம். இரகசியமான செய்தி பலருக்கும் தெரியவந்தால் யார் அதை அம்பலப்படுத்தியது எனக்கேட்கும் வழக்கம் நம்மிடையே இன்றும் இருகிறது.

இலங்கை முழுதும் தமிழர் வாழ்ந்த இடங்களின் ஆதாரச்சுவடுகளை எடுத்துக் காட்டகூடிய நூற்றுக்கணக்கான தமிழின் இடப்பெயர்ச் சொற்கள் சிங்களமாய் மாறியிருக்கின்றன.  ஞானப்பிரகாசசுவாமிகள் ‘நாலாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்கள் முற்றிலும் ஒலிவடிவம் மாறாது சிங்கள மொழியில் இருப்பதாக’ 1940ம் ஆண்டிலேயே குறிப்பிட்டுள்ளார். 
தமிழ்மொழியின் இலக்கணநூலான தொல்காப்பியம் கி மு 3ம் நூற்றாண்டிற்கு முன்பே எழுதப்பட்டது. ஆனால் முதன்முதல் எழுதப்பட்ட சிங்களமொழி இலக்கணநூலான சித்தசங்கராவ’ கி பி 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அதுவும் கி பி 11ம் எழுதப்பட்ட வீரசோழியம்’ எனும் தமிழ் இலக்கணநூலைப் பார்த்தே சித்தசங்கராவ எழுதப்பட்டதாக கலாநிதி சி ஈ கொடகும்பர கூறியுள்ளார். சிங்களமொழிக்கு இலக்கணம் எழுதுவதற்கு 1600 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்மொழிக்கு இலக்கணம் இருக்கின்றது. அப்பொழுதே தமிழ் இலக்கண இலக்கியங்கள் முல்லை, கல், அம்பல், அம்பலம், யா, யாஅம் முதலான சொற்களை பொதிந்து வைத்திருக்கின்றன. தமிழர் என்று சொல்லிக்கொண்டு, தமிழ்ச்சொலா? தமிழர் வாழ்ந்த இடமா? என்றெல்லாம் சிந்தித்துப்பார்க்காது இருப்பது எமது அறியாமை தானே!
எமது வீடுகளில் பிறமொழி அகராதிகள் இருக்கும். அம்மொழிகளில் எமக்கு தெரியாத ஒரு சொல்லை புத்தகங்களில் செய்தித்தாள்களில்  பார்த்தால் தொலைக்காட்சிகளில் கேட்டால் உடனே அகராதியைப் புரட்டிப்பார்த்துத் தெரிந்து கொள்வோம். நம் பிள்ளைகளையும் பார்க்கச் செய்வோம். இப்படி தமிழ்மொழியில் எமக்குத் தெரியாத சொல்லைக் கேட்டாலோ, பார்த்தாலோ நம்மில் எத்தனை பேர் தமிழ் அகராதியையோ, நிகண்டையோ எடுத்துப் பார்க்கிறோம்? பிள்ளைகளை தமிழகராதியை எடுத்துப் பார்க்கும் படி கூறுகிறோம்? எத்தனை தமிழர் தம் வீடுகளில் தமிழ்-தமிழ் அகராதி வைத்திருக்கிறோம்? 
தமிழர்களுக்கு என்ற ஒரு நாடற்ற நிலையில் வாழும் நாம் தமிழின் பழமையையும் பெருமையையும் எம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி கற்பிக்கவேண்டிய பொறுப்பு உடையவர்களாக இருக்கிறோம். அதற்குப் பல காரணங்கள் கூறலாம். முக்கியமாக நம் சொந்தங்கள் உலகெலாம் தழுவி வாழ்வதால் நம் இளம் தலைமுறையினர் ஒவ்வொருவரும் ஒவ்வொருமொழி பேசுபவர்களாக இருக்கின்றனர். அவர்களின் அன்பின் இணைப்புப் பாலமாக எமது தாய்மொழியான தமிழே இருக்கமுடியும். தமிழெனும் எம் சுவாசக்காற்றை இளம் தலைமுறையினர் சுவாசிக்கத் தொடங்கிவிட்டால் அது என்றும்  நிலைத்து நிற்கும். உலகெங்குமே எம் சுவாசக்காற்றை நாம் சுத்தமாக சுவாசிக்க முடியும். எவராலும் அதற்கு தடைபோட முடியாது.  இதனை  தமிழர்களாகிய நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போமா? சிந்தித்தால் மட்டும் போதுமா? செயல்படுவோம். செயல்படுத்துவோம்.
இனிது,
தமிழரசி.

1 comment: