Tuesday 8 November 2011

பக்திச்சிமிழ் [3]

செறிவுகண்டு நின்திருவடி அடைந்தேன்
- சாலினி - 

நம் ஒவ்வொருவருக்கும் ஏதோவொருவகையில் யாரோ ஒருவர் வழிகாட்டியாய், முன்னோடியாய் இருப்பார். நாம் அவரைபோல வரவேண்டும், இவரைப்போல வாழவேண்டும் எனச் சிலர் நினைப்பர். அவரிடம் சென்றவருக்கு அவர் என்னென்ன கொடுத்தார் தெரியுமா? நாமும் சென்றால் நமக்கும் கிடைக்கும் எனவும் சிலர் எண்ணுவர். அது மனித இயல்பு. அந்த இயல்பு அன்றும் இன்றும் என்றும் ஒன்றேதான். அது மாறுவதில்லை. அவ்வியல்பு சுந்தரமூர்த்தி நாயனாரிடமும் இருந்திருக்கிறது.

பன்னிருதிருமுறையில் ஏழாம் திருமுறையைப் பாடியவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் இளவரசராக வளர்ந்தவர்.  அவரது திருமணத்தின் போது இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டவர். அதுவும் இறைவன் முதியவர் வேடத்தில் வந்து சுந்தரரைத் திருமணம் செய்யவிடாது தடுத்து, வழக்காடி தனக்கு அடிமையாகக் கூட்டிச் சென்றவர். எந்த மனிதரும் அடிமையாக வாழ விரும்புவரா? அதிலும் இளவரசராக அரசவாழ்க்கையில் திளைத்தவரால் எப்படி அடிமை வாழ்வு வாழமுடியும்? சுந்தரரும் வெறுப்போடுதான் முதியவர் பின்னே சென்றார். கோயிலினுள் சென்ற பின்பே முதியவர் யார் என்ற உண்மை சுந்தரருக்கு தெரிந்தது.

தெரிந்ததும் ஆனந்தத்தால் சுந்தரரின் கண்கள் பனித்தன. காரணம் என்ன? இறைவனே வந்து தன்னை ஆட்கொண்டார் என்ற காரணத்தால் கண்கள் பனித்தன என நினைக்கிறீர்களா? அதைவிடச் சிறப்பான பல காரணங்களை சுந்தரரே கூறியுள்ளார். அதில் ஒன்றை நீங்களே பாருங்கள்.

"எறியுமாகடல் இலங்கையர் கோனைத்
          துலங்க மால்வரைக்கீழ் அடர்த்திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசைகேட்டுக்
          கோலவாளொடு நாளது கொடுத்த
செறிவுகண்டு நின்திருவடி அடைந்தேன்"         -(பன்னிருதிருமுறை: 7: 55: 9)

இலங்கையர் கோனான இராவணனின் பாடலின் இன்னிசையைக் கேட்டு அவனுக்கு அழகியவாளும் ஆயுளும் இறைவன் அருள் செய்த திறத்தைப் பார்த்தே அடிமையாக உன் திருவடியடைந்தேன் என்கிறார்.   சுந்தரருக்கு முதியவர் யார் என்ற உண்மை தெரிந்ததும் 'ஓ! இராவணனின் இன்னிசைக்கு மயங்கி அள்ளிக் கொடுத்தவர் தானே! நான் பாடினாலும் கொட்டித்தருவார் என நினைத்துக் கொண்டார். அதனையே சாட்டாக வைத்து இறைவனிடம் சுந்தரர் எதைப் பெற்றார் என்பதைப் பின்னர் பார்ப்போம். சுந்தரருக்கு இராவணன் வழிகாட்டியாய் இருக்க எமக்கு மட்டும் ஏன் கெட்டவன் ஆனான்?

மேலேயுள்ள பேலூர் கோயில் சிற்பத்தில் இராவணன் கைலாய மலையைத் தூக்குவதையும்,  இறைவன் கொடுத்த சந்திரகாசம் என்ற வாளை இராவணன் கையில் வைத்திருப்பதையும் சிற்பி செதுக்கியுள்ளான். கைலை மலை உச்சியில் சிவனும் பார்வதியும் இருப்பதையும் பாருங்கள்.

No comments:

Post a Comment