Tuesday 8 November 2011

எம் சுவாசக்காற்று - பகுதி 1


தமிழர்களாகிய நாம் எமது வருங்காலச் சந்ததியினர்க்காக சிந்தித்துச் செயல்படுத்த வேண்டியவை நிறையவே இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானதும் முதலில் செய்யவேண்டியதும் என்ன எனில், உலகம் தழுவி வாழும் தமிழர்களாகிய நாம் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு அல்லவா?' ஓரறிவுள்ள அடம்பன் கொடியே திரண்டு மிடுக்காகக் காட்சி தரும் போது, ஆறறிவுள்ள மனிதராய் உலகெங்கும் வாழும் பத்துக்கோடித் தமிழரும் இணைந்து மிடுக்குடன் இருக்க முடியாதா? என்ன? அப்படி இணைவதாலேயே இன்றைய நிலையில் இருந்து எம் தாய்மொழியாம் தமிழ்மொழியை, மேன்மையடையச் செய்ய முடியும். 
புலம்பெயர்ந்து வாழும் எம்மில் பலர் தமிழை, நமது எண்ணங்களையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ளும் மொழியென எண்ணிப் புறக்கணிக்கிறோம். ‘எமது கருத்துப் பரிமாறுதலுக்கு தமிழ் தேவையில்லை. நாம் வாழும் நாட்டின் மொழியே போதுமானது.  நாம் வாழும் நாட்டுமொழி தானே எமக்குச் சோறு போடுகின்றது. தமிழா எமக்குச் சோறு போடுகிறது?.’ எனக் கேள்வி எழுப்புகிறோம். எம்மைப் பொறுத்தவரை நாம் கேட்கும் கேள்வி சரியாக இருக்கலாம். ஆனால் எம்மில் பலருக்குத் தமிழே சோறு போடுகின்றது என்பதே மறுக்க முடியாத உண்மை. அதுபோல் தமிழை வைத்துத் தொழில் செய்வோரும் செல்வத்தில் கொழிக்கிறார்கள் என்பதும் உண்மையே.

உதாரணத்திற்கு தமிழ் சினிமா எடுப்போர், தமிழ் தொலைக்காட்சி நடத்துவோர், தமிழரின் உணவகம், நகை, துணி, பலசரக்கு எனக்கடை வைத்திருப்போர், தமிழருக்கு சாத்திரம் கூறி பில்லி, சூனியம் எடுப்போர், தமிழ்க்கோயில் அறக்காவலர்கள், தமிழருக்கு சட்ட ஆலோசனை வழங்குவோர், தமிழரின் இன்ப துன்ப நிகழ்வுகளில் மந்திரம் சொல்லிப் பூசை செய்வோர், தொலைபேசி அட்டை விற்பனையாளர்கள், தமிழ்க்கலைகள் வளர்க்கும் கலைஞர் எனத்தமிழால் வாழ்வோரைப் பெரிய பட்டியலிட்டுக் காட்டமுடியும். இவர்களுக்கும், இவர்களிடம் தொழில் செய்யும் எல்லா இனத்தோருக்கும் தமிழே சோறு போடுகின்றது என்பது எப்படி உண்மையோ, அப்படி தமிழால் வாழ்பவர்களில் சிலர் தமிழைப் புறக்கணிப்பதும் உண்மையே.
நான் இங்கு எல்லோரையும் கூறவில்லை. எவருடனும் எனக்குப் பகையுமில்லை. தமிழராகிய எமக்காகக் கூறுகிறேன். எனவே தமிழால் பயன் பெறுவோர் தமிழின் வளர்ச்சியில் கொஞ்சம் பங்குதர முன்வரவேண்டும். ‘மரம் இருந்தால் தானே காய் பறிக்க முடியும்’ என்பதை மனதில் கொண்டு தமிழராய்ப் பிறந்த நாம்  ஒவ்வொருவரும் செயற்படவேண்டும். இன்று இருக்கும் மொழிகளிலே தமிழ்மொழியே இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக மானுடரால் தொடர்ந்து பேசப்பட்டுவரும் ஒரு மொழி என்பதை மறந்து விடாதீர்கள்.

தமிழரென்று சொல்லி வாழும் எமக்குத் தமிழ்மொழி வேண்டுமா? அன்றேல் தமிழுக்கு நாம் வேண்டுமா? வீரமாமுனிவரும், போப்பையரும் தமிழராய்ப் பிறந்தா தமிழைப் படித்தனர். இவர்களைப் போல் தமிழர் அல்லாத எத்தனை பேர் தமிழை ஆழமாக ஆராய்ந்து படிக்கிறார்கள். ஆனால் தமிழராய்ப் பிறந்த நாமே, தமிழின் மேன்மையை தேவையை உணர்வதில்லை. புலம்பெயர்ந்து வாழும் நாம் பரதம் என்றும், வீணை என்றும், குழல் என்றும், இசை என்றும் எத்தனை கலை அரங்கேற்றங்களைச் செய்து முடித்துள்ளோம். அப்படி அரங்கேறியவர்களில் தமிழ்மொழியிலேயே பாடல்களைப் படித்து, புரிந்து கொண்டோர்  எத்தனை பேர்? 
பிள்ளைகளுக்குக் கலைகளை கற்பிப்பதற்காக ஆறேழு வருடங்களுக்கு மேலாக அலைந்த நம்மில் எத்தனை பேர் தமிழைக்கற்பிக்க அலைந்தோம்? எத்தனை பேர் தமிழை அரங்கேற்றம் செய்தோம்? தமிழை அரங்கேற்றுவதா எனச்சிரிக்கவேண்டாம். தமிழ் என்றாலே இயல் இசை நாடகம் மூன்றும் சேர்ந்த முத்தமிழ் என்று தானே பொருள். இசையும் பரதமும் பழகும் பிள்ளைகளுக்கு இயற்றமிழையும் கற்பித்து அரங்கேற்றுவதில் என்ன தவறு? அப்படி அரங்கேற விரும்பும் பிள்ளைகள் யாராயினும் தமிழ்மொழியைத் தமிழில் படித்துப் புரிந்து, தெளிவாகப் பேசி அரங்கேற வேண்டும். அரங்கேற்ற நாகரீகத்தில் வாழும் எமக்கு இது மிகமிக இன்றியமையாததாகும்.
ஏனெனில் தமிழ் என்பது மனிதப் புரிந்துணர்வுகளைப் பரிமாரிக்கொள்ளும் மொழிமட்டுமல்ல, அதற்கும் மேலே தமிழுக்கு என்றோர் மிகஅற்புதமான உயர்ந்த இடம் இருக்கிறது.  தமிழ்மொழியானது தமிழர் நாகரீகத்தை, பண்பாட்டை நெறிப்படுத்தியதோடு, மனித நாகரீக வளர்ச்சியின் தொன்மையிலும் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது. பண்டை நாளிலிருந்தே தமிழ்மொழி உலக பொருளாதாரத்தில், உலக அரசியலில், உலக கலைகளில், உலக தொழில்நுட்பங்களில் வழங்கிய பங்கை உலக மொழிகளில் விரவிக் கிடக்கும் தமிழ்ச்சொற்களே பறைசாற்றுகின்றன.
மொழிகளில் உள்ள ஒலிகளின் தன்மை எழுப்பப்படும் விதத்தால் வேறுபடுவது போல் எழுதப்படும் விதத்தாலும் வேறுபடுகின்றது. உலகமொழிகள் யாவும் அவற்றின் ஆதிமொழியிடம் கடன் வாங்கிய சொற்களை சொல்லும் முறையில் உருத்திரிந்து சொன்னாலும், அவற்றின் கருத்துக்களை பெரும்பாலும் உருத்திரிக்காது அப்படியே வைத்திருக்கின்றன. இந்த அடிப்படையில் உலகமொழிகள் தமிழ்மொழியிடமிருந்து கடன் பெற்ற சொற்களை  மொழியியலாலர்கள் பட்டியலிட்டுள்ளனர். உலகமொழிகளிலே தமிழே மிகக்கூடுதலான காரணப்பெயர் கொண்ட சொற்களை வைத்திருக்கின்றது. 

உதாரணமாகத் தமிழர் கல்லை ஒன்றுடன் ஒன்று தேய்த்து வந்த நெருப்பை ‘தேயு‘ என்றனர். அந்நெருப்பு தீப்பொறியாய் பறந்தது. இன்றும் நாம் எதனையும் தேய்ப்பதற்கு ‘அதைத் தேயு’ என்றே மற்றவர்க்குச் சொல்கிறோம். மரத்தை ஒன்றுடன் ஒன்று தேய்த்து வந்த நெருப்பை ‘தீ’ என்றனர். மரத்தைத் தேய்த்து வந்த தீ மெல்ல மூண்டெரிந்தது. தீயைப்போல தேயு உடனே பற்றி எரியவில்லை. தேய்த்த மரத்துண்டை தீக்கடைக்கோல் என்றனர். தீக்கடைக்கோலை ஞெலிகோல் எனவும் அழைத்தனர். கடையப்பட்ட மூங்கில் துண்டே ஞெலி. நம்மில் பலரும் வடமொழிச்சொல் என நினைக்கும் தேயு வடமொழிச் சொல் அல்ல அது தமிழ்ச்சொல்லே. வடமொழியில் நெருப்புவரத் தேய்க்கும் மரத்தை ‘அரணி’ என்பர். அரணியால் அவர்கள் பெற்றது அக்னியாகும். 

தீ என்ற தமிழ் சொல்லில் இருந்து தெய்வம் என்ற சொல் உண்டானது. தீயைக்கண்டு பயந்தமனிதன் அதனை வழிபடத்தொடங்கினான். ஏனெனில் அவனுக்கு அழிவுகளை ஏற்படுத்திய தீயே எதிரிகளிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் குளிரிலிருந்தும் அவனைக் காத்தது. மானுடனின் பேச்சில் தே - தீ - தேயு - தேய் - தேய்வம் - தெய்வம் ஆனது. 

ஈழத்தமிழரின் அன்றைய கட்டுமரம் (1880)
பண்டைத் தமிழர் மரத்துடன் மரத்தைக்கட்டி தாம் உருவாக்கிய பொருளை ‘கட்டுமரம்’ என அழைத்தனர். தமிழ்ச்சொல்லாகிய கட்டுமரம்  என்னும் சொல் ஆங்கிலத்திலும் மற்றைய மொழிகளிலும் இருப்பது கடலில் பயணம் செய்யும் தொழில்நுட்பத்தை தமிழே உலகிற்கு வழங்கியதோடு உலக ஒருங்கிணைப்பிற்கும் தமிழே வித்திட்டது என்பதையும் இடித்துச் சொல்கிறது. உலக பொருளாதார வளர்ச்சியில் கட்டுமர வளர்ச்சி ஆற்றிவரும் பங்களிப்பு யாவரும் அறிந்ததே. 

உலகின் இன்றைய கட்டுமரம் 

தமிழ் மொழியிடமிருந்தே கட்டுமரம், தேயு போன்ற தமிழின் காரணப் பெயர்களைக் கொண்ட சொற்களை உலகமொழிகள் கடன்பெற்று வைத்துள்ளன. மானுடரின் நாகரீக வளர்ச்சியில் தமிழ்மொழியும் தமிழரும் ஆற்றிய பங்கினை எடுத்துக்காட்டவே கட்டுமரம், தேயு என்ற இரு சொற்களையும் இங்கு குறிப்பிட்டேன்.

சங்கத்தமிழர் கட்டுமரம், மரக்கலம், கப்பல் போன்றவற்றைக் கடல்மரம் எனவும் அழைத்துள்ளனர். அதனை நற்றிணையில் சங்ககாலப் புலவரான கொற்றனார்                                  
“கால் ஏமுற்ற பைதரு காலைக்             
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன்வீழ்பு                   
பலர்கொள் பலகை  போல”           
                                   -(நற்றிணை: 30:7-9)  
எனக்கூறுகிறார். சுழன்றடிக்கும் சூறாவளியால் மரக்கலம் கவிழ்ந்து போக, அதனுடன் சேர்ந்து கடலினுள் வீழுந்த பலரும் பற்றிப்பிடிக்கும் பலகையைப் போல எனும் இடத்தில் Titanic படத்தில் நீங்கள் பார்த்தது போன்றதொரு காட்சியைக் காட்டுகிறார். கொற்றனார் இப்பாடல்களின் வரிகளால் இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே சங்கத்தமிழர் பல பேர் செல்லக்கூடிய மரக்கலங்களை கடலில் செலுத்தினர் எனும் வரலாற்றுச் செய்தியை எமக்குத் தந்துள்ளார். 
தமிழினம் காடுவாழ் சமூகமாக இருந்து நாடுவாழ் சமூகமாக மாறிய போதே நிலத்தை நானிலமாக, ஐந்திணையாக, அறுதிணையாக வகுத்து உலகச்சுற்றுச் சூழலுக்கு தன் கடமையைச் செய்திருக்கிறது. நிலத்தின் இயல்பைக் கொண்டு அதனை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, அளக்கர் என ஆறு வகையாகப் பிரித்து அந்தந்த நிலங்களில் வாழும் தாவரங்களின் பெயராலேயே அந்நிலங்களை அழைத்தனர்.
வெள்ளெருக்கு [அளகம்]
பண்டைத் தமிழர் பார்வையில் முல்லைக் கொடி படர்ந்த காட்டு நிலம்  முல்லை நிலமானது. குறிஞ்சிச் செடி வளர்ந்த மலை குறிஞ்சி நிலமாயிற்று. மருதமரம் வளர்ந்த ஆற்றோர நிலங்கள் மருதநில வயல்களாயின. நெய்தல் பூத்த ஆற்றுக்கழிமுகப் பகுதி நெய்தல் நிலமானது. வறண்ட பூமியாய் முல்லைநிலம் மாறிய பின்னும் அங்கு நின்ற பாலைமரத்தால் அந்நிலம் பாலைநிலமாயிற்று. அளக்கர் என்பது கடலாகும். கடல் சூழ்ந்த நிலம் அளக்கர் நிலமானது. அளகம் என்பது வெள்ளெருக்கஞ் செடி. அதனை அளக்கம் எனவும் சொல்வர். தீவுகளில் எருக்கஞ் செடியைக் காணலாம்.
நம் முன்னோர் இயற்கை தனக்குள் தானே ஏற்படுத்திக்கொள்ளும் மிகச்சிறிய வேறுபாட்டையும் சுற்றுச்சூழலில் நடக்கும் ஒவ்வொரு மாற்றத்தையும், எவ்வளவு கூர்ந்து பார்த்திருந்தால் இவ்வளவு நேர்த்தியாக நிலத்தை பிரித்திருக்க முடியும்? இன்று மனித நாகரீகத்தின் உச்சியில் வாழ்வதாக நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நிலத்தின் தன்மையையும் அதில் ஏற்படும் சிறுசிறு மாறுபாடுகளையும் மிகநுணுக்கமாகப் பார்க்கிறோம்? அவர்கள் நிலத்தை மட்டுமல்ல நிலத்தில் வாழும் உயிரினங்கள் யாவற்றையுமே நன்கு ஆராய்ந்து பார்த்துப் பிரித்து பெயரிட்டிருக்கின்றனர்.

 கூரன்பன்றி (mouse deer)
பண்டைத்தமிழரால் ‘கூரன்பன்றி’ என அழைக்கப்பட்ட விலங்கு இன்றும் நம் நாட்டுக் காடுகளிலுள்ள ஆற்றோர மரப்பொந்துகளில் வாழ்கிறது. தமிழ்நாட்டில் கூரன்பன்னி எனவும் கூறுவர். இவ்விலங்கினம் நீர்வாழ் உயிரினங்களை வேட்டையாடி உண்டு வாழும். கூர என்றால் குளிர்மை. குளிர்மையை விரும்பும் பன்றி என்ற கருத்தில் நம் முன்னோர் கூரன்பன்றி என்ற காரணப்பெயரால் அழைத்துள்ளனர். இந்த விலங்கினம் தோன்றி பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றது என உயிரியலாளர்கள் கருதுகின்றனர். இதை mouse deer என ஆங்கிலத்தில் சொல்வர். இது பார்ப்பதற்கு மான் போலத்  தோன்றுவதால் மான் இனத்தைச் சேர்ந்தது என்று கருதி உலகமொழிகளில் இதற்குப் பெயரிட்டு அழைகின்றனர். 
ஆனால் இன்றைய விஞ்ஞான உயிரியல் ஆய்வு, இவ்விலங்கினம் மானினத்தைச் சேர்ந்தது இல்லை என்றும் பன்றி இனத்தைச் சேர்ந்தது என்றும் சொல்கின்றது. இதனையே எமது பண்டைத் தமிழ் முன்னோர் குளிர்மையை விரும்பும் பன்றியினம் என்பதை அறிந்து கூரன்பன்றி என்றனர். மற்றைய உலகமொழி பேசுபவர்களால் அறியமுடியாத உண்மையை நம் தமிழ் மூதாதையர் எப்படி அறிந்தனர்?  பார்த்தீர்களா அவர்களது ஆய்வுத் திறமையை! தமிழர்களாகிய எமது அறியாமையால் கூரன்பன்றியையும் கூரன்பன்றி என்ற தமிழ்ச்சொல்லையும் இழக்கின்றோம். தமிழெனும் எம் சுவாசக்காற்று நின்றபின் மிச்சமாய் என்ன இருக்கும்? சிந்தியுங்கள். தொடர்ந்து சுவாசிப்போம். 
இனிதே,
தமிழரசி

3 comments:

  1. நன்று. பாராட்டுகள். சில இடங்களில் ஒற்றுப்பிழைகள் உள்ளன. அவற்றைத்தவிர்க்கவும். உதாரணம் வேண்டா! எடுத்துக்காட்டு போதுமே!அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

    ReplyDelete
  2. வாழ்க நீவீர்

    ReplyDelete