Wednesday 1 January 2014

பண்டைத் தமிழரின் வானவியல் அறிவு

தையா? சித்திரையா? 


புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களாகிய நாம் ஆங்கிலப் புதுவருடத்தை உலகநாடுகள் யாவிலுமிருந்து மிக்க மகிழ்வுடன் கொண்டாடுகிறோம். ஆனால் தமிழர்களாகிய எமது புதுவருடம் தைப்பொங்கல் நாளில் பிறக்கிறதா? அன்றேல் சித்திரையில் பிறக்கிறதா? எனத் தட்டுத் தடுமாறிக்கொண்டு இருக்கிறோம். உலகிற்கு உயர்ந்த நாகரீகத்தை பலவகையிலும் கற்றுக்கொடுத்த தமிழினம் தமது புதுவருடம் இந்த நாளில் தான் என்று எடுத்துச் சொல்ல முடியாதிருப்பது நன்றா? எனவே நம் முன்னோர் எப்போது? எப்படி? எவ்விதமான அறிவைக் கொண்டு தமிழரின் புதுவருடத்தைக் கணித்தனர் எனப்பார்ப்போமா?

உலக இயற்கையின் படைப்பிலே இளவேனிற்காலத்தின் தொடக்கத்திலேயே மரஞ்செடி கொடிகள் பூத்துக் குலுங்கத் தொடங்குகின்றன. ஏனைய மிருகங்களும் பறைவைகளும் தம் துணையைத் தேடத் தொடங்குவதும் இளவேனிற் காலத்தில் நடைபெறுகின்றன. பறவைகள் அழகழகாகத் தத்தமது கூடுகளைக் கட்டுவதும் இளவேனிற் காலத்திலேயே. உலகின் புதுவரவுக்கான ஏற்பாடுகளை இயற்கை இளவேனிற் காலத்தில் படைத்துக் கொள்வதை நம்முன்னோர் கண்டனர். எனவே இளவேனிற்காலத்தின் தொடக்க நாளை புதுவருட நாளாகக் கணித்துக் கொண்டனர்.

இளவேனிற்காலம் எப்போது தொடங்கும்? தை மாதத்திலா? சித்திரை மாதத்திலா? அதனை எப்படி அறிவது? இரவும் பகலும் சமமாக இருக்கும் நாளிலேயே இளவேனிற்காலம் தொடங்கும். இயற்கை பொலிவு பெறத் தொடங்குவதும் அப்போது தானே! இந்த இரவும் பகலும் சமமாக வரும் நாள் வருடத்தில் இருமுறை வரும்.

நீங்கள் கையில் ஒரு தோடம்பழத்தை வைத்திருக்கிறீர்கள். அதுவே பூமி என நினையுங்கள். தோடம்பழத்தின் கீழ் முனையில் மெல்லிய நேரான தடியைக் குத்தி மேல் முனையால் இழுத்துக் கொண்டால் பழத்தின் மேலும் கீழும் இருக்கும் தடியை உலகின் நடுவரையாகாக் கூறலாம். உலகின் நடுவரையை சூரியச் சுற்றின் நீள்வட்டப் பாதை மேலும் கீழும் தொடும் இடத்தில் இரவு பகல் சமமாக வரும். அது இப்பொழுது மேற்புள்ளியில் பங்குனி 20லும் கீழ் புள்ளியில் புரட்டாதி 22லும் வருகிறது. சித்திரையை வருடப்பிறப்பாகக் கணித்த போது இரவும் பகலும் சமமாக வரும் நாள் சித்திரையில் இருந்தது.


இரவு பகல் சமமாக வருதல் [Equinox]

பண்டைய தமிழரின் வானவியல் கணிதத்தில் இன்று நாம் இராசி என்று சொல்வதை ஓரை என்றனர். இந்த ஓரை என்ற தமிழ்ச்சொல்லே கிரேக்கர்களால் ஹோரா [Hora] என நேரத்தைக் குறிக்கப் பயன்படுகிறது. ஒரு வட்டத்தை அல்லது மண்டிலத்தை பன்னிரண்டு பிரிவுகளாக வகுத்தனர். மண்டிலம் என்பது மீண்டும் மீண்டும் சுழன்று வருவது எனப்பொருள் தரும். மண்டிலத்தை பன்னிரண்டால் பிரித்து வந்த ஒவ்வொரு பிரிவும் ஓரை என அழைக்கப்பட்டது. இரவு பகல் சமமாக இருக்கும் நாளில் சூரியன் புகும் ஓரை மேழகம் என அழைக்கப்பட்டது. மேழகம் என்றால் செம்மறி ஆடு.

மேழகத் தகரொடு சிவல் விளையாடக்”                

                                         - (பட்டினப்பாலை: 77)

தமிழுக்கே உரிய ‘ழ’கரம் மேழகம் என்ற சொல்லில் இருப்பதைப் பாருங்கள். அதுவே மேழம் ஆகி, வடமொழி சென்று மேஷம் ஆகியது. அதனை நாம் இன்று மேடம் என்கிறோம். 

ஒவ்வொரு ஓரையும் 30 பாகை உடையதாக சோதிடம் கூறும். ஆனால் வானவியல் கணக்கு அப்படியல்ல. அது ஓரைக்கு ஓரை மாறுபடும். சூரியவீதிச் சுற்றில் பூமி ஒரு பாகை கடப்பதை நாம் ஒரு நாள் என்கிறோம். ஒவ்வொரு ஓரையிலும் சூரியன் நிற்கும் காலத்தை நாம் மாதம் என்கிறோம் எனக் கொள்ளலாம்.  சூரியவீதிச் சுற்று வட்டப்பாதையில் இல்லாது நீள்வட்டப்பாதையில் செல்வதால் ஒரு வருடத்தில் 365¼ நாட்கள் எடுக்கின்றன. இது சூரிய ஆண்டு என அழைக்கப்படும். 

பூமி ஒருமுறை சுற்றிவருவதற்கு ஏறக்குறைய சூரிய ஆண்டுக்கணக்கில் 366 நாட்களும், சந்திர ஆண்டுக்கணக்கில் 354 நாட்களும் வரும். சந்திர ஆண்டைக் கைக்கொண்ட வடவர்களுக்கு [ஆரியர்களுக்கு] ஓர் ஆண்டில் பன்னிரண்டு நாட்கள் குறைந்தன. சூரிய ஆண்டைக் கடைப்பிடித்த தென்னவர்க்கும் [தமிழர்க்கும்], சந்திர ஆண்டைக் கடைப்பிடித்த வடவர்கட்கும் ஐந்து ஆண்டுகளின் பின்னர் ஆக மொத்தம் அறுபது நாட்கள் வேறுபட்டன. இன்னொரு வகையில் சொல்வதானால் ஐந்து ஆண்டுகளின் பின்னர் சூரியஆண்டைவிட சந்திர ஆண்டு இரண்டு மாதங்களால் குறையுந்தானே! அதனால் வடவரின் பருவகால நிலைகள் மாற்றம் அடைந்தன. அவர்களால் சரியான நேரத்தில் பயிர் செய்ய முடியவில்லை. அதனை சதபதப்பிரமாணம் என்ற நூல் அழகாக எடுத்துச் சொல்கிறது.

“தேவர்கள் விதைக்கும் பருவமென நினைத்த பருவகாலத்தில்
அசுரர்கள் பயிர்களை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்”
இவ்வாறு அசுரர் மேல் அவர்கள் வெறுப்பை அள்ளிக் கொட்டியிருந்தாலும் எமக்கு இது ஒரு வரலாற்றுப் பதிவாகும். 

அசுரரகள் யார்? வடமொழியில் ஒரு சொல்லின் முன் ‘அ’ வந்தால் அது அச்சொல்லின் எதிர்ச்சொல்லாய் வரும்.   தேவர்கள் தம்மை சுரர் என்று அழைத்துக் கொண்டனர். சுரபானம் என்ற மதுவைத் தேவர்கள் விரும்பிக் குடித்ததால் அவர்களுக்கு சுரர் என்று பெயர். அதைக் குடியாதோர் அசுரர். அந்த சுரபான மதுவைக் குடியாத அசுரையே இன்று நாம் திராவிடர் என்கிறோம். ஆரியர் இந்தியாவுக்குள் வந்த போது திராவிடராய் இருந்தோர் தமிழர்களே. எனவே சதபதப்பிரமாணம் தமிழர்களையே அசுரர் எனச்சொல்கிறது.

பண்டைய தமிழ் அரசர்கள் காலக்கணக்கர்களைக் கொண்டு சூரியமண்டலத்தின் நிலைக்கு ஏற்ப ஆண்டின் தொடக்க நாளை மாற்றினர். அதனால் பருவகாலங்கள் அவற்றுக்கு உரிய நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் வந்தன. ஆனால் பிற்காலத் தமிழர்களும் இன்றைய தமிழராகிய நாமும் அதனைச் செய்யவில்லை. அத்துடன் எமது முந்தையோரின் அறிவைக் குழிதோண்டிப் புதைத்து விட்டோம். அதனாலேயே காலமற்ற காலத்தில் மரங்கள் பூக்கின்றன. இலைகள் உதிர்கின்றன. விலங்குகளும் பறவைகளும் துணை தேடுகின்றன. 

இரவும் பகலும் சமமாக வரும் நாளில் இருந்து இளவேனிற்காலம் தொடங்கும் என்று முன்னே சொன்னேன் அல்லவா? அது இப்போது பங்குனி 20ல் [March 20th] வருகிறது. எமது புதுவருடமாகிய சித்திரை 14ம் நாளில் இருந்து பங்குனி 20ம் நாள் வரை  எண்ணினால் 24 நாட்கள் வரும். ஆதலால் இப்போது பருவகாலங்கள் 24 நாட்கள் முன்பே வந்துவிடுகின்றன. 

வான்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டம் நகர்ந்து செல்லும் போது அவை 1 பாகை நிலை மாற 72 வருடங்கள் எடுக்கும். ஒரு வட்டத்தில் 360 பாகை இருப்பது போல் ஒருவருடத்தில் 365 நாட்கள் இருப்பதால் 1 பாகையால் நிலைமாறுவதை அண்ணளவாக ஒரு நாளாகாக் கொள்ளலாம். அதாவது 1 பாகையால் நட்சத்திரக் கூட்டம் விலக, பருவகால வட்டம் ஒரு நாளால் பின்னோக்கிச்  செல்கிறது எனக்கொள்ளலாம். எனவே சித்திரை 14ல் இருந்து பங்குனி 20 வரையுள்ள 24 நாட்களை 72 வருடங்களால் பெருக்கினால் 1728 வருடங்கள் ஆகும்

[Photo Source: NASA]

இப்போது 2013 முடிவடைந்து உள்ளதால் 2013ல் இருந்து 1728 வருடங்களைக் கழித்தால் 285 வரும். எனவே நாம் கொண்டாடும் தமிழர் புத்தாண்டாகிய சித்திரை 13ம் 14ம் நாள் என்பதை கி பி 285ல் கணித்திருக்கவேண்டும். இது ஒரு அண்ணளவான கணிப்பு. ஆனால் காலக்கணிதம் என்ற நூலும் இக்கணிப்பு சதவாகனர் காலத்தில் நடந்தது எனக்கூறுகிறது. அவர்கள் காலமும் கி பி 285ஐ அண்மித்ததே. இக் கணக்குப்படிப் பார்த்தால் நாம் எமது புதுவருடத்தை பங்குனி 20ல் கொண்டாட வேண்டும். அத்துடன் எமது ஆறு பருவகாலங்களையும் நகர்த்த வேண்டும். 

அப்படிச் செய்வதால் பருவகாலங்கள் முன்போல அந்தந்தக் காலங்களிலே மாற்றம் இன்றிவரும். நட்சத்திரக் கூட்டங்களின் நகர்வுக்குத்தக நமது நாள் கணக்கை நகர்த்துவதால் சோதிடக் கணிப்புக்கும் நட்சத்திரங்கள் நிலைமாறாது இருக்கும். இதுவே பழந்தமிழர் எமக்கு விட்டுச் சென்றுள்ள வானவியல் அறிவுச் செல்வமாகும்.  ஒவ்வொரு வருடமும் நேரத்தை இருமுறை மாற்றிக் கொள்ளும் எமக்கு 72 வருடங்களுக்கு ஒருக்கால் ஒரு நாளை மாற்ற முடியாதா என்ன? அல்லது இன்றைய விஞ்ஞான அறிவைக்கொண்டு மிகத்துள்ளியமாக ஒவ்வொரு ஆண்டுமே அதனை சரிசெய்து கொள்ளலாம்.

நம் முன்னோர் இயற்கையோடு இசைந்து வாழ்ந்ததால் சூரியமண்டலத்து இயல்பை அறிந்து புதுவருட நாளைக் கணித்துத் தந்தும் நாம் எமது அறியாமையால் அவற்றை மறந்து தட்டுத் தடுமாறுகிறோம். விண்வெளியில் உள்ள நாண்மீன் - நாள் மீன்  [நட்சத்திரம்], கோண்மீன் - கோள் மீன் [கோள்கள்] என்பன மேழ ஓரையைத் [மேட இராசியை] தொடக்கமாகாக் கொண்டே சுற்றுகின்றன என்பதும் பழந்தமிழரின் வானவியல் அறிவுகாட்டும் உண்மையாகும்.
“நீனிற விசும்பின் வல்னேர்பு திரிதரும்
நாண்மீன் விராய கோண்மீன் போல்”            
                                               - (பட்டினப்பாலை: 68 - 69)
இதிலே நீலனிற வான்வெளியில் வலம் வந்து திரிகின்ற நட்சத்திரமாகிய சூரியனுடன் சேர்ந்து சுழலும் கோள்கள் போல எனப் பட்டினப்பாலை என்னும் சங்க இலக்கியம் ஒரு காட்சியைக் காட்டுகிறது. சூரியனும் ஒரு நட்சத்திரம் என்ற உண்மை இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே பண்டைத் தமிழர்களுக்கு தெரிந்திருக்கிறது.

இப்படி வானவியலிலும் அறிவியலிலும் சிறந்து விளங்கிய நம்முன்னோர் இளவேனிற்காலத்தின் தொடக்க நாளை தமிழர்தம் புதுவருடமாகக் கணித்து உலகிற்கு வழிகாட்டிகளாக விளங்கி இருக்கிறார்கள். நாம் அவர்களின் அரிய பெரிய கண்டுபிடிப்புகளை பொருட்படுத்துவதில்லை. இந்த நிலை மாறவேண்டும். சித்திரை 14ல் கொண்டாடிய வருடப்பிறப்பை பங்குனி 20ற்கு நகர்த்தியது சூரியனின் சுழற்சி தானே!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment