Friday 3 January 2014

சந்தோசம் காண்பதெப்போ?



காதல் வசப்படும் ஆண்களில் பலர் திருமணத்தின் பின்னர் தம் மனைவியைக் கண்டுகொள்வதில்லை. காதலின் போது தேன்கரும்பாய் இனித்தவள் திருமணத்தின் பின்னர் வேப்பங்காயாய் கசப்பாள். இது காலங்காலமாக நடந்துவரும் உண்மையாகும். 

மன்னார் மாவட்டத்திலுள்ள எருக்கலம்பிட்டி என்ற ஊரில் வாழ்ந்த இளைஞன் ஒருவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டான். காதலித்து திருமணம் செய்த போது இனிக்க இனிக்கப் பேசியவன் இப்போது அப்படிப் பேசுவதில்லை. வேலைக்குச் சென்றால் வேளைக்கு வருவதில்லை. காதலி என்றாலும் எத்தனை நாட்களுக்குப் பொறுத்திருக்க முடியும்? அன்றும் அவள் அவனுக்காகப் பார்த்துப்பார்த்துச் சமைத்தாள். அவன் வருவான் வருவான் என வழிமேல் விழிவைத்துக் காத்திருந்து, களைத்துப்போய் பசியோடு கோபமும் சேர மனவருத்தத்துடன் தூங்கிப்போனாள்.

நடு இரவில் அவன் வந்தான். அவன் வந்துவிட்டான் என்பது அவளுக்குத் தெரியும், எனினும் அவள் எழுந்திருக்கவில்லை. அங்கிருந்த அவளது தோழி இருவர் நிலையையும் பார்த்தாள். அதனால் அவளுக்குக் கேட்கும்படி தோழி சொல்கிறாள்.

தோழி: மயனாரும் வந்துவிட்டார்
                     மங்கைமனம் மாறலயோ
           சயனத்தில் நீ இருந்தால் 
                     சந்தோசம் காண்பதெப்போ!
                                                     - நாட்டுப்பாடல் (எருக்கலம்பிட்டி- மன்னார்)
                                                     (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

உன்கணவர் மயன் வந்தும் உன் கோபமடங்கவில்லையா? இப்படி நீ படுத்துக்கிடந்தால் எப்போது தான் இன்பம் காணப்போகிறாய் எனக்கேட்கிறாள்.’ இப்படித் திருமணத்தின் பின்னர் காதலர்களிடையே ஏற்பட்ட மனக்கசப்புக்களை அவர்களின் நண்பர்களே அந்நாளில் தீர்த்து வைத்தனர் என்பதை இந்த நாட்டுப்பாடல் காட்டுகிறது.

சங்க இலக்கிய காலத்திலும் காதலித்த போது தேடித்தேடி ஓடிவந்த காதலன், திருமணத்தின் பின்னர் மாறிவிட்டான். இன்பமும் துன்பமுமாய், முள்ளும் மலருமாய் அவன் அவளுக்கு காட்சி தருகின்றான். அன்று பூப்போல் அவள் நெஞ்சை வருடியவன், இப்போது முள்ளாய்க் குத்துகிறான். அந்த வேதனையை அள்ளூர் நன்முல்லையார் என்னும் பெயருடைய சங்ககாலப் பெண்புலவர் சொல்கிறார். 'என் நெஞ்சம் நோகிறதே! என் நெஞ்சம் நோகிறதே! பயிர்விளையாத நிலத்தில் [புன்புலம்] வளரும் சிறிய இலையுடைய நெருஞ்சி மலர், பின்னர் நெருஞ்சி முள்ளாக மாறுவதுபோல இனிமையானவற்றைச் செய்த நம் காதலன் துன்பத்தைச் செய்வதால் என் நெஞ்சம் நோகிறதே’ என்கிறார்.

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முள் பயந்தாங்கு
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோமென் நெஞ்சே!           - (குறுந்தொகை: 202)

இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment