Friday 10 January 2014

புத்தியில்லாப் பாம்பு

பிறைக்கொழுந்து - இளம்பிறை

பக்தி இலக்கியப் பாடல்களில் நகைச்சுவை உடைய பாடல்களும் இருக்கின்றன. கீழே உள்ள பக்தி இலக்கியப் பாடலும் நகைச்சுவை உடையதே. அதனை வாசித்துப் பாருங்கள். அப்பாடலின் கருத்து புரிகிறதா? அல்லது அப்பாடல் எதனைச் சொல்கிறது என்பதாவது தெரிகிறதா?

“திருமார்பில் ஏனச்செழு மருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
இது மதி என்று ஒன்றாகத் தேறாது
அதுமதி ஒன்றுஇல்லா அரா”                     - (ப.திருமுறை: 11)

இந்தப் பாடலை முதன்முதலாக படிப்போருக்கு அது எதனைச் சொல்கிறது என்பது புரியாது.

பண்டைத் தமிழ்ப் பெண்களிலே தமிழை நன்கு கற்று, பக்தி சொட்டச்சொட்ட பாடல் புனைந்து பக்திநெறிக்கு வித்திட்டவர் இயற்றிய பாடல் இது. அவர் இறைவனின் திருவுருவை அணுவணுவாகக் கண்டு களித்து அதனைத் தன் பாடல்களில் எழுதியவர். அவரின் பாடல்களில் அவரது உள்ளன்பின் பலபடிநிலைகளைக் காணலாம். அவற்றில் இறைவன் மேல் அவர் கொண்ட அன்பும் ஆசையும் பக்தியும் பெருமையும் மட்டுமல்லாமல் புத்திமதியும், கிண்டலும் கூட மிளிர்கின்றன. அவர் வேறு யாருமல்ல பக்தி இலக்கியங்களின் தாயாய், கலையரசியாய் விளங்கிய காரைக்கால் அம்மையாரே.

இறைவன் அணிந்திருக்கும் அணிகலங்களைப் பார்த்து ஓர் ஓவியனாய்க் கவிஞனாய் நின்று இப்பாடலை வடித்திருக்கிறார். சிவன் கழுத்தில் அணிந்திருக்கும் பாம்பு எவ்வளவு மூடப்பாம்பு [முட்டாள் பாம்பு] என்பதை மிக அழகாகச் சொல்கிறார். மீண்டும் அப்பாடலைப் பார்ப்போமா?

“திருமார்பில் [அழகிய மார்பில்] ஏனச்செழு [கொழுத்த பன்றி]                                                      மருப்பைப் [கொம்பைப்] பார்க்கும்
பெருமான் [சிவபெருமான்] பிறைக்கொழுந்தை [இளம்பிறையை]                                                நோக்கும் [பார்க்கும்] - ஒருநாள் 
இதுமதி [இதுதான் சந்திரன்] என்று ஒன்றாகத் [உறுதியாகத்]                                                     தேறாது [அறியாது]
அதுமதி [அது புத்தி] ஒன்றுஇல்லா [ஒன்றும் இல்லாத] அரா [பாம்பு]  

சிவன் கழுத்தில் பாம்பு அணிந்திருக்கிறார் அல்லவா? அந்தப் பாம்பு, சிவனின் கழுத்திலிருந்து கீழே பார்க்கும் போது இறைவனின் அழகிய மார்பில் அணிந்திருக்கும் பன்றியின் கொம்பைப் பார்க்கும். மேலே பார்க்கும் போது சிவபெருமான் தலையில் அணிந்திருக்கும் இளம்பிறையைப் பார்க்கும். பன்றியின் கொம்பும் இளம்பிறையும் தோற்றத்தில் ஒரேமாதிரி இருப்பதால் இப்படி கீழேயும் மேலேயும் பார்த்து, ஒருநாளாவது இதுதான் இளம்பிறைச்சந்திரன் என்பதை அதனால் உறுதியாக அறிந்து கொள்ள முடியாது. மேலே தலையில் அணிந்திருப்பது சந்திரனா! கீழே மார்பில் அனிந்திருப்பது சந்திரனா! என்று அது தடுமாறுகிறதாம். ஏனெனில் அது புத்தி ஒன்றும் இல்லாத பாம்பு, என்று கூறி காரைக்கால் அம்மையார் சிரித்துள்ளார்.

[Photo source: Wikipedia] ஏனச்செழு மருப்பு - கொழுத்த பன்றியின் கொம்பு

இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment