Tuesday 28 January 2014

பிறவாமை காக்கும் பிரான்

[காரைக்கால் அம்மையார், Banteay Srei Sivan Temple - Cambodia] 
19.11.2012 அன்று அங்கு [Banteay Srei] சென்ற பொழுது 

ஒளியும் இருளும், பகலும் இரவும் போன்றதே பிறப்பும் இறப்பும். இரவும் பகலும் எப்படி மீண்டும் மீண்டும் வருகின்றதோ அப்படி இறப்பும் பிறப்பும் சுழலும் சக்கரம் போல் மீண்டும் மீண்டும் வரும் என்பது நம் முன்னோர் கண்ட முடிவாகும். பிறக்கும் போது நாம் எதனையும் கொண்டு வந்ததும் இல்லை, இறக்கும் போது எதனையும் எடுத்துச் செல்வதும் இல்லை. இருப்பினும் 
“பிறக்கும் பொழுது கொடு வந்ததில்லை பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடு போவதில்லை இடைநடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்கும் குலாருக்கு என் சொல்லுவேன் கச்சிஏகம்பனே”         
                                                        - (பட்டினத்தார் பாடல்)
எனப் பட்டினத்தார் சொன்னது போல் எம்மிடம் இருப்பதை யாருக்கும் கொடுக்காது பொருளுக்கும் பகட்டுக்கும் மயங்கிப் பேயாய் அலைகின்றோம். 

அப்படி மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் களைத்த ஆன்மா [உயிர்], மீண்டும் பிறவா நிலையைத் தேடும். மீண்டும் பிறவாத நிலையை பிறவாமை என்பர். பக்தி எனும் பரவச நிலையை உலகிற்குத் தெள்ளு தமிழில் முதன்முதல் எடுத்துச் சொன்னவர் காரைக்கால் அம்மையாரே ஆவார். அவரின் புகழைக் கூறவந்த சேக்கிழாரும் 
“இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போது உன்னடியின் கீழ் இருக்க என்றார்”            
                                                         - (பெரியபுராணம்: 24: 60)
என்று பெரிய புராணத்தில் பாடியுள்ளார். இறப்பு என்பது இன்பம். அது துன்பத்தை தருவதில்லை. அதனாலேயே பிறவாமை வேண்டும் என்று கேட்கிறார். இறவாமையைக் [இறக்காது வாழ்தல்] கேட்கவில்லை. ஏனெனில் பிறவாமையே பேரின்பம் ஆகிய பெரும் பேற்றை நல்கும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? பிறப்பே பெரும் துன்பம். மனிதப் பிறப்பெடுத்து வாழும் வாழ்க்கையில் அன்பு, பாசம், ஆசை, பேராசை இவற்றுள் மூழ்கி அல்லற்படுவதற்கு [துன்பம்] எது காரணம்? எம் மனமே காரணம். அதாவது எமது எண்ணமே காரணமாகும். 

மனித மனம் ஒரு தோணி போன்றது. அந்தத்தோணியிலே நாம் எமது பொறாமை, வஞ்சனை, கோபம், ஆணவம் போன்ற பல மூட்டைகளைக் கட்டி அடிக்கி வைத்திருக்கிறோம். வாழ்க்கையாகிய கடலில் மனம் என்ற தோணியை நம் அறிவாகிய துடுப்பால் செலுத்திச் செல்லும் போது மதன் என்று சொல்லப்படும்  செருக்கு, அறியாமை, அழகு, காமம் ஆகிய பாறைகள் தாக்கி, இறக்கும் போது என்ன நடக்கும் என்பதை அறிய முடியாது தடுமாறுகிறோம். எனவே இறக்கும் சமயத்திலாவது யாராலும் அறியமுடியாத இறைவனாகிய உனை நினைக்கின்ற உணர்வை ஆயினும் எனக்குத் தந்தருள்வாய். 
மனம் எனும் தோணிபற்றி
          மதிஎனும் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை ஏற்றிச்
          செறிகடல் ஓடும் போது
மதனெனும் பாறை தாக்கி
           மறியும்போது அறிய வொண்ணா
உனைஎனும் உணர்வை நல்காய்
           ஒற்றியூர் உடைய கோவே”            
                                                         - (ப.திருமுறை: 4: 46: 2)
வாழும் போது வாழ்க்கையின்பத்துள் மூழ்கி இறை உணர்வை மறந்தாலும் இறக்கும் போதாவது உன் நினைவைத் தா அது பேரின்பத்திற்கான வழியை காட்டும்.

‘பிறவாமை வேண்டும்’ என்று காரைக்கால் அம்மையார் கேட்டதாக சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார் அல்லவா? அதனை காரைக்கால் அம்மையார் தாம்பாடிய திருஇரட்டைமணிமாலையில்
“ஈசன் அவன் அல்லாலில்லை யென நினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத்து என்றும்
பிறவாமை காக்கும் பிரான்                            
                                                      - (திருஇரட்டைமணிமாலை: 25)
என அவரே கூறியுள்ளார்.

காரைக்கால் அம்மையார் இப்பாடலில் ‘ஈசனை அல்லாமல் வேறு ஒன்றும் இல்லை என்று நினைத்து, நம் சிறுமைகளை எண்ணி மனம் கூசிக் குறுகி நின்று, மனமாகிய வீட்டில் ஈசனை வைத்து இறைவனின் பெருமைகளைப் பேசி மறவாது வாழ்வோரை மீண்டும் பிறவாமல் காக்கும் பெருமான்’ என்கிறார். அம்மையாரின் புகழ் கம்போடியாவுக்கும் பரவி 
‘......................................................நான் மகிழ்ந்து பாடி 
அறவா நீ ஆடும் போது உன்னடியின் கீழ் இருக்க என்றார்’ 
என சேக்கிழார் பாடியதற்கு அமைய, கம்போடியாவில்  அந்நாளில் பண்டைச்சேரி [Banteay Srei] என அழைக்கப்பட்ட இடத்தில் உள்ள கோயிற் கோபுரத்தில் இறைவன் ஆடுவதையும், காரைக்கால் அம்மையார் பாடுவதையும் புடைப்புச்சிலையாய் வடித்து வைத்துள்ளனர். அதனை மேலே உள்ள படத்தில் காண்க. 

பிறவாமை வேண்டுமாயின் ஈசனை என்றும் மறவாதிருக்க வேண்டும்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment