Tuesday, 7 January 2014

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு

இரட்டைத் தாழ்!

பாண்டிய மன்னனின் மகளைக் குலோத்துங்க சோழனுக்கு பெண்கேட்டு வந்த ஒட்டக்கூத்தருக்கும், பாண்டியமன்னன் மகளின் குருவான புகழேந்திப்புலவருக்கும் தந்தம் நாட்டுப்பற்றால் மோதல் ஏற்பட்டது. இருவரும் புலவர்கள் ஆதலால் கவிதைத் திறத்தால் மோதிக்கொண்டனர். புலவர்கள் இருவரும்  தத்தம் அரசுகளைப் புகழ்ந்து பாடியதை பாண்டிய மன்னன் இரசித்துக் கேட்டான். எனினும் அந்நாளில் தமிழகத்தை ஆண்ட மன்னர்களுக்குள் தன் மகளுக்கு ஏற்ற கணவனாக வரும் தகுதி குலோத்துங்க சோழனுக்கு இருந்ததை பாண்டிய மன்னன் அறிந்திருந்ததாலும், அரசியல் காரணங்களுகக்காகவும் அத்திருமணத்திற்கு உடன்பட்டான். திருமணம் முடித்து குலோத்துங்கனுடன் சென்ற பாண்டிய மன்னின் மகள் தனது குருவான புகழேந்தியாரையும் தன்னுடன் சோழ நாட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

மகாபாரதத்தில் வரும் கிளைக்கதையான நளன் சரிதத்தை நளவெண்பாவாகப் பாடியவர் இந்தப் புகழேந்திப் புலவரே! அதனாலேயே அவர் ‘வெண்பாவுக்கோர் புகழேந்தி’ என்ற பாராட்டைப் பெற்றவர். அவரின் வெண்பாத் தமிழையும் தமிழ் இசையில் அவருக்கு இருந்த ஈடுபாட்டையும் அறிய  நளவெண்பாவில் ஒரு பாடலைப் பார்ப்போம். தமயந்தியின் சுயம்வர மண்டபம். அவளை மணம் செய்ய விரும்பிய மன்னர்கள் மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார்கள். தமயந்தி தன் கணவனைத் தேர்ந்தெடுப்பதற்காக கையில் மலர்மாலையை ஏந்தியபடி தோழியுடன் மெல்ல நடந்து வருகிறாள். தோழி ஒவ்வொரு மன்னரையும் காட்டி அவர்களைப் பற்றிச் சொல்கிறாள். அவந்தி நாட்டு அரசனைக் காட்டி 

“வண்ணக் குவளைமலர் வௌவி வண்டுஎடுத்த
பண்ணில் செவிவைத்துப் பைங்குவளை - உண்ணாது
அரும்கடா நிற்கும் அவந்திநாடு ஆளும்
இரும்கடா யானை இவன்”

‘எருமைக்கடா ஒன்று அழகிய குவளை மலரை உண்பதற்காகக் கவ்வ, அந்த மலரில் தேன் அருந்திக் கொண்டிருந்த வண்டுகள் எழுந்து பறந்து ரீங்காரம் செய்யும். அவற்றின் ரீங்காரம், பண்ணின் இசையாக எருமைக் கடாவின் செவியில் கேட்க, அந்த இசைமயக்கத்தில் குவளை மலரை உண்ணாது அது நிற்குமாம். அப்படிப்பட்ட அவந்தி நாட்டை ஆளும் இவன் வலிமைமிக்க ஆண்யானையைப் போன்றவன்’ என்று தோழி சொல்கிறாள். 

புகழேந்திப் புலவரின் இப்படியான தமிழோடு பழகித்திரிந்த பாண்டியனின் மகள் அவரைப் பிரிந்து செல்வாளா? எனவே புகழேந்தியாரைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள். அவளுடன் சென்று சிறிது காலம் இருந்த புகழேந்திப் புலவர், பாண்டிய மன்னனைப் காண்பதற்காக பாண்டிய நாட்டிற்கு வந்தார். பின்னர் பாண்டியனிடம் விடைபெற்று சோழ அரண்மனைக்கு செல்லும் வழியில் சில குண்டர்கள் அவரை அடித்துக் கண்ணையும் கைகால்களையும் கட்டி இழுத்துச் சென்றனர். அவர் கண்திறந்து பார்த்த போது தான் பாதாளச் சிறையில் இருப்பதைக் கண்டார். ஒருவாறு தன்னிலையை ஊகித்து அறிந்து கொண்டார்.

பாண்டிநாடு சென்ற தன் குரு மீண்டும் வராததைக் கண்ட குலோத்துங்க சோழனின் மனைவி    [பாண்டியனின் மகள்] தனது தந்தைக்கு புகழேந்தியாரை அனுப்பும்படி தூது அனுப்பினாள். புகழேந்தியார் பாண்டிய நாட்டில் இருந்து சோழ நாட்டிற்கு வந்துவிட்டார் என்ற செய்தியும் அவளுக்குக் கிடைத்தது. அவருக்கு என்ன நடந்தது என்று கவலைப்பட்ட அவளும் தன் கணவனான குலோத்துங்க சோழனைக் கேட்டாள். ‘அவர் சேர நாட்டிற்கோ, பல்லவ நாட்டிற்கோ சென்றிருக்கலாம், வாருவார்’ என்றான். தனக்கோ, தந்தைக்கோ சொல்லாமல் அவர் எங்கும் சென்றதில்லையே என்று அவள் தன் ஒற்றர்களை அனுப்பித் தேடத் தொடங்கினாள்.

ஒட்டக்கூத்தர் குலோத்துங்க் சோழனின் குருவாதலால் சோழ நாட்டினர் அவர் சொன்ன சொல்லைக் கேட்டனர். தமிழ்க் கவிதையைப் பிழையாகச் சொல்லும் புலவோரைப் பாதாளச்சிறையில் அடைத்து வைத்து, புலவர்களின் தலைமயிரை ஒன்றோடொன்று முடிந்து வெட்டுது அவரின் வழக்கம். ஒட்டக்கூத்தர் பாண்டியன் அரண்மைக்குப் பெண்கேட்டு சென்றபோது அவரின் பாடலைப் புகழேந்தியார் வெட்டிப் பாடினார்.  அதனால் ஒட்டக்கூத்தருக்குப் புகழேந்தியாரைப் பிடிக்கவில்லை. எனவே தனது குண்டர்களைக் கொண்டு புகழேந்தியாரைப் பிடித்து வந்து பாதாளச்சிறையில் இருக்கும் கவிதை இயற்றத் தெரியாத புலவர்களுடன் அடைத்து வைத்தார்.

கவிதை இயற்றத் தெரியாதவர்களின் தலையை மட்டுமே ஒட்டக்கூத்தர் வெட்டுவார். ஆதலால்  பாதாளச்சிறையில் அடைத்து வைத்திருந்தாலும் தனது தலையை அவரால் வெட்டமுடியாது என்பது புகழேந்தியாருக்குத் தெரியும். எனவே சிறையில் அடைபட்டிருந்த புலவர்களுக்கு கவிதை இயற்றச் சொல்லிக் கொடுத்தார். அங்கிருந்தோர் யாவருமே கவிஞர்களாயினர். 

பாதாளச்சிறையில் இருப்போர் கவிஞர் ஆகும் செய்தி ஒற்றர்கள் மூலம் குலோத்துங்க சோழனின் மனைவிக்கு எட்டியது. சிறைக்கைதிகளுக்கு யார் கவிதை இயற்றக் கற்றுக் கொடுக்கிறார் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். எந்தக் குற்றமும் செய்யாத தனது குருவை ஒட்டக்கூத்தர் அடைத்து வைத்திருப்பதும் தெரியாது, குலோத்துங்க சோழன் இருக்கின்றானா? அவன் சோழ நாட்டை அரசாட்சி செய்கின்றானா? ஒட்டக்கூத்தர் அரசாள்கிறாரா? யாரின் ஆட்சியின் கீழ் சோழ நாடு இருக்கிறது? அல்லது புகழேந்தியார் பாதாளச்சிறையில் இருப்பது தெரிந்தும் தெரியாது போல் குலோத்துங்கன் இருக்கிறானா? நினைக்க நினைக்க அவள் நெஞ்சம் வெந்தது.

மாலை நேரமும் வந்தது. புதுமணத் தம்பதியர்கள் அல்லவா அவர்கள். அரச கருமம் நிறைவடைந்ததும் மனைவியை நாடி அந்தப்புரம் வந்தான் குலோத்துங்கன். அந்தப்புர வாயிற்கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது. கெஞ்சிக் கேட்டும் அவள் கதவைத் திறக்கவும் இல்லை. ஏதும் சொல்லவும் இல்லை. பாண்டி நாட்டின் மேலும் தமிழின் மேலும் ஆராத காதல் கொண்டவள் என்பதை அவன் அறிவான். எனவே அவளின் ஊடலைத் [கணவனிடம் ஏற்படும் கோபத்தைத்] தணிப்பதற்காக ஓட்டக்கூத்தரைத் தூதனுப்பினான். ஒட்டக்கூத்தர் அவளின் அந்தப்புர வாசலில் வந்து நின்று
“நானே இனிஉன்னை வேண்டுவதில்லை - நளினமலர்த்
தேனே கபாடந் திறந்திடு திறவாவிடிலோ
வானேறனைய வாள்வீரவிகுலாதிபன் வாசல் வந்தால்
தானே திறக்குநின் கையிதலாகிய தாமரையே”

‘தாமரைமலரின் தேனே! இனியும் நான் உன்னைக் கேட்கத் தேவையில்லை. கதவைத்திறந்து விடு. நீ கதவைத் திறக்காதுவிட்டால், வானளாவிய புகழ்மிக்க ஆண்சிங்கத்தைப் போன்ற வலிமையுள்ள சூரிய குலத்தலைவன் உன் வாசலுக்கு வந்தால் கை இதழாய் இருக்கும் தாமரை தானாகவே கதவைத் திறந்துவிடும்’ என்று பாடினார்.

ஒருவரிடம் நாம் தமிழைப்பற்றிப் பேசும் முன்பு, அவர் யாரிடம் தமிழைக் கற்றார் என்பதை அறிந்து பேசவேண்டும் என்ற பண்பும் ஒட்டக்கூத்தரிடம் அப்போது இருக்கவில்லை. குலோத்துங்க சோழன் போல் அவர் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டும் பொம்மை என்று அவளையும் நினைத்துவிட்டார். ஒட்டக்கூத்தரின் குரலைக் கேட்டதுமே குழோதுங்கனின் மனைவிக்கு கோபம் கூடியது. அதனால் அவர் பாடிய பாடலின் கருத்துக்கள் யாவுமே அவளுக்குப் பிழையாகவே தோன்றின.
1. ‘நானே!’ என்பதில் அவரது அகங்காரம் தலைவிரித்தாடியது.
2. இனி உன்னை வேண்டுவதில்லை - முன்னர் வந்து கேட்டது போல, இனி உன்னை வேண்டுவதில்லை எனக் கூறியது.
3. நளினமலர்த் தேனே! - தாமரைமலரின் தேனை உண்ண அம்மலரில் எத்தனை எத்தனை தேன் வண்டுகள் மொய்க்கின்றன. அவளின் வாசலில் வந்து நின்று அவளை வண்டுகள் மொய்க்கும் தேன் எனலாமா? அவளை ஒட்டக்கூத்தர் என்ன என்று நினைக்கிறார்? பொதுமகள் என நினைக்கிறாரோ?
4. வானேறு அனைய - வெள்ளை எருது போன்ற [வால் + ஏறு = வானேறு; வால் - வெள்ளை] என்று கூறியது.
5. வாள்வீர ரவிகுலாதிபன் வாசல் வந்தால் தானே திறக்கும் - வாள் வீரராயும் சூரியகுலத் தலைவராயும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களில் எவர் வந்தாலும் தானே திறக்குமா கதவு? மீண்டும் இவர் என்ன சொல்கிறார்? பொதுமகள் என்கிறாரா?
6. நின் கையிதலாகிய தாமரையே -  கை இதழாய் இருக்கும் தாமரை எப்படி கதவைத்திறக்கும்? உவமை கூறும் போது தாமரை இதழ்க் கை என்பார்கள். அதாவது தாமரை இதழ் போன்ற மென்மையும் வடிவமும் உடையை கை என்ற கருத்தில் சொல்வர். ஆனால் ஒட்டக்கூத்தரோ அதனை மாற்றிக் கூறியது. அத்துடன் உயர்திணைப் பொருளை அஃறிணைக்கு இட்டுக் கூறுவதில்லை.

பாண்டியன் மகளாய்ப் பிறந்து, சோழ நாட்டின் அரசியாய் இருப்பவளை இவ்வளவு கேவலமாக ஒட்டக்கூத்தர் கவிதை புனைந்ததைக் கேட்டதுமே “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என அவரது காதில் விழும்படி கூறியபடி ஏற்கனவே ஒருமுறை பூட்டியிருந்த கதவின் திறப்பை, கோபத்துடன் மீண்டும் திருகிப் பூட்டினாள் [dubble lock].

ஒட்டக்கூத்தரை தூது அனுப்பிய குலாத்துங்க சோழனும் அவருக்குப் பின்னே வந்து அங்கு நின்றிருந்தான். தன் மனைவி கோபத்துடன் “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என்று கூறி, இரண்டாம் முறையும் பூடைப்  பூட்டியதைக் கேட்டான். தான் வந்த போது ஒருமுறை பூட்டியிருந்த கதவு, ஒட்டக்கூத்தரின் தமிழ்ப் பாடலால் இரண்டாம் முறையும் பூட்டப்பட்டதால் அவளுக்கு தன்மேல் பெரிய கோபம் இல்லை என்பதும், ஒட்டக்கூத்தர் மேலேயே முழுக்கோபமும் இருப்பது புரிந்தது. 

அதற்குக் காரணம் என்ன என ஆராய்ந்த் போது புகழேந்திப் புலவர் பாதாளச்சிறையில் சிறைவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே அவரைச் சிறையில் இருந்து விடுதலை செய்து மன்னிப்புக்கேட்டான். தன்மேல் பாண்டியனின் மகள் ஊடல் கொண்டிருப்பதையும் ஒட்டக்கூத்தரின் பாடலுக்கு இரட்டைத்தாழ் போட்டதையும் கூறி அந்தப்புரத்துக்கு அழைத்து வந்தான்.

புகழேந்தியாரும் பசு கன்றைத் தேடி ஓடுவது போல ஓடி அவளின் அந்தப் புரவாசலுக்கு வந்தார். வந்தவர்
“இழையொன்றிரண்டு வகிர்செய்த நுண்ணிடை யேந்தியபொற்
குழையொன்றிரண்டு  விழியணங்கே கொண்ட கோபந்தணி
மழையொன்றிரண்டுகைப் பாணாபரண நின் வாசல் வந்தால்
பிழையொன்றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே”

‘நூல் இழை ஒன்றை இரண்டாகப் பிளந்து [வகிர்ந்து] எடுத்தது போன்ற நுண்மையான இடையையும், அணிந்திருக்கும் [ஏந்திய - பூண்ட] பொன்னால் ஆன குழை [காதணி] சேர்ந்து விளங்கும் [ஒன்றி - பொருந்தி] இரண்டு கண்களையும் உடைய பெண்ணே [அணங்கே]! நீ கொண்ட கோபத்தைத் தணித்துக்கொள். மழையைப் போன்று இரண்டு கையாலும் அள்ளி வழங்கும் பாணாபரணன் [குலோத்துங்க சோழனின் பெயர்] உன் வாசலுக்கு வந்தால் அவன் செய்த பிழைகளில் ஒன்று இரண்டைப் பொறுப்பது குடிப்பிறந்தோர் [பாண்டி குடியிற் பிறந்தோர்] செயலாகும்’ என்று சொன்னார்.

புகழேந்திப் புலவரின் குரலைக் கேட்டதுமே பசுவின் கமறல் கேட்ட கன்றைப் போல் மகிழ்ந்தாள். பாடல் முழுவதையும் கேட்கும் முன்பே மகிழ்ச்சியால் அவளின் மனக்கதவு திறந்தது. பூட்டிய பூட்டு திறக்காது இருக்குமா! என்ன? மழலைப் பருவம் முதல் அவரின் தமிழோடு விளையாடியவள் அல்லவா?
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment