Sunday 12 January 2014

குறள் அமுது - (85)



குறள்:
“காமக்கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு”                           - 1251

பொருள்:
நாணம் என்கிற தாழ்ப்பாள் போட்டு பூட்டி வைத்திருக்கும் மன உறுதி எனும் கதவை காமமாகிய கோடாரி உடைத்துவிடுகிறது.

விளக்கம்:
'நிறையழிதல்' என்னும் அதிகாரத்தில் உள்ள முதலாவது திருக்குறள் இது. கோடாரியைக் கணிச்சி என்பர். நம் நாட்டு மரங்களிலே மிக வைரமான மரம் கருங்காலி. அந்தக் கருங்காலி மரத்தைக்கூட மிக இலகுவாகக் கோடாரியால் வெட்டிவிடலாம். ஆனால் சிறு கத்தியால் அரிந்து வெட்டக்கூடிய வாழையை கோடாரியால் வெட்டமுடியாது. அதனை ஔவையார் தனிப்பாடல் ஒன்றில்

கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி
சிறுகதலித் தண்டுக்கு நாணும்”
என மிக அழகாகப் பாடி வைத்திருக்கிறார். மரம் எவ்வளவுக்கு எவ்வளவு வைரமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அதனைக் கோடாரி கொண்டு வெட்ட முடியும். 

ஒழுக்கம் நிறைந்தவராய் வாழ்ந்தால் மனிதவாழ்வு சிறப்படைவதைக் கண்ட நம் முன்னோர் மனித ஒழுக்கத்தை நிறை என்றனர். ஒழுக்கமாகிய நிறை என்னும் கதவு மிகவும் வைரமானது. அந்த வைரமான கதவு நாணம் என்னும் தாழ்பாள் போட்டுப் பூட்டியிருக்கிறது. அப்படிப் பூட்டியிருக்கும் உறுதியான கதவை உடைத்தால் உள்ளே செல்லலாம். கதவை உடைக்க கோடாரி வேண்டும். 

ஒழுக்கக் கேடுகளுக்கு காரணமாக இருப்பது காமவெறி. காமம் ஆகிய கோடாரி, உரமேறிய ஒழுக்கம் நிறைந்த கதவை உடைத்து சுக்கு நூறாக்கிச் சிதைக்கும். காமம் வேறு, காதல் வேறு. இத்திருக்குறளில் திருவள்ளுவர் காமத்தைக் கோடாரியுடன் ஒப்பிடுகிறார். ஏனெனில் வைரமான மரத்தைக் கோடாரி எப்படிச் சின்னா பின்னம் ஆக்குமோ அப்படி காமமும் மனித வாழ்வை சீரழிக்கும். இன்பத்தைக்  காமவெறியுடன் அநுபவிக்காமல் காதலுடன் அநுபவிங்கள் என்பதே வள்ளுவர் நோக்கமாகும். அவரே இன்னொரு திருக்குறளில் "மலரின் மெல்லிது காமம்" என்கிறார். காதலுடன் காமம் சேரும் போது அது மலரைவிட மென்மையாக இருக்கும் என்பது வள்ளுவன் கண்ட முடிவாகும். காரணம் காதல் கதலிவாழைத் தண்டு போன்றது. அது காமத்தை குழையச் செய்கிறது.

ஒழுக்கம் எனும் நிறையாகிய [மன உறுதி] கதவை நாணம் என்று சொல்லப்படும் தாழ்பாள் போட்டுப் பூட்டி வைத்தாலும் காமம் என்னும் கோடாரி அதனை உடைத்து சிதறடிக்கும். ஆதலால் காமத்தில் மூழ்காது காதலில் மூழ்குங்கள்.

No comments:

Post a Comment