Friday 24 January 2014

தத்தரே பித்தரே!

கந்தளாய்க் குளம்

கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன் திரிகோணமலையின் கந்தளாய்க் குளத்தில் மீன்பிடிக்கச் சில மீனவர்கள் சிறுதோணியில் சென்றனர். மீன் பிடிக்கச் செல்வோர் தமது உடல் அலுப்புத் தெரியாது இருக்க மெட்டுக் கட்டிப் பாடிச் செல்வது வழக்கம்.  சிறுதோணியில் சென்ற மீனவர்களூம்
‘ஏலேலோ ஏலேலோ ஏலேலங்கடி ஏலேலோஒ’ என மெட்டுக் கட்டிப் பாடிப்பாடி குளத்தில் வலைவீசி மீன்பிடித்தனர். வலையில் ஆமை, மீன், நண்டு, தவளை எல்லாம் அகப்பட்டுக் கொண்டது. 

அந்த வலையில் அகப்பட்ட ஒரு தவளை, வலையில் அகப்பட்டதை நினைத்துப் பெரிதாகச் சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தது. வலைக்குள் இருந்த உயிரினங்களைப் பார்த்து இந்த வலையிலிருந்து நாம் தப்பிச்செல்ல வழி தேடவேண்டும் என்று சொன்னது. அதற்கு ஆமை “உனக்கு என்ன பித்தா பிடித்திருக்கு, எனக்கு ஆயிரம் புத்தி இருக்கிறது அதைக் கொண்டு தப்பிக்கொள்வேன்” என்றது. மீனும் “எனக்கு நூறு புத்தி இருக்கிறது நானும் தப்பிக் கொள்வேன்” என்றது. நண்டும் தனக்கு பத்துப்புத்தி இருக்கிறது அதைப்பயன்படுத்தித் தப்பிக்கொள்வேன் என்றது. 

அவற்றைக் கேட்ட தவளை, ‘அடக்கடவுளே! ஆயிரம் புத்தியுள்ள ஆமை, நூறு புத்தியுடைய மீன், பத்துப்புத்தி கொண்ட நண்டு எல்லாவற்றையும் படைத்த நீ என்னை மட்டும் ஏன் ஒரு புத்தியுடன் படைத்தாய்’ என்று அழுதது. அழுகொண்டே தப்புவதற்கு ஏதும் வழி கிடைக்காதா என்று வலையின் இடுக்கில் தலையையும் கால்களையும் நுழைத்துப் பார்த்தது. அதன் முன்னங்கால் ஒன்றும் பின்னங்கால்களும் வலையில்  சிக்கிக் கொண்டதே அல்லாமல் தப்பிச் செல்ல வழி கிடைக்கவில்லை.

வலையை வீசியவர்கள் வலையை இழுத்து தோணிக்குள் போட்டார்கள். வலைக்குள்  பிடிபட்டிருந்த ஆமையைத் தூக்கி மல்லாத்தி வைத்து, அது ஓடாதிருக்க ஒரு கல்லை அதன் நெஞ்சில் பாரமாக வைத்தனர். மீனைப் பிடித்து ஈர்க்கினால் அதன் கண்ணுக்குள் குத்திக் கோர்த்தனர். நண்டை எடுத்து தோணிக்குள் விட்டனர். அது தோணிக்குள் நடக்கும் போது 'கடக்கட முடக்கர' என்ற சத்தம் கேட்டது. வலையில் சிக்கி இருந்த தவளையை விடுவித்து, ‘தத்திப் போ பித்தரே [அறியாமையுடையது]!’ எனவிட்டனர். அப்போது ஆமையையும், மீனையும், நண்டையும் பார்த்து அந்தத் தவளை

“ஆயிரம் புத்தரே மல்லாத்தரே கல்லேத்தரே
           நூறு புத்தரே கண்ணுக்கக் கோர்த்தரே
பத்துப் புத்தரே கடக்கட முடக்கரே
          ஒரு புத்தரே தத்தரே பித்தரே!
                                                              -நாட்டுப்பாடல் (கந்தளாய் - திரிகோணமலை)
                                                              -(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
எனப் பாடியபடி குளத்தினுள் தத்திச்சென்றதாக, அந்நாளில் கந்தளாயில் வாழ்ந்த மீனவர்கள் பாடிய நாட்டுப் பாடல் இது.

திரிகோணமலையில் பிறந்த தருமு சிவராம் என்பவர் [பிரமிள்] இந்த நாட்டுப் பாடலின் மூன்றாவது வரியைத் தவிர்த்து, மற்ற மூன்று வரிகளையும் தனது கவிதையில் சேர்த்திருக்கிறார். அவர் திரிகோணமலையைப் பிறப்பிடமாகாக் கொண்டவர் ஆதலால் அவருக்கு இந்த ஈழத்து நாட்டுப்பாடல் தெரிந்திருந்ததால் அதனைச் சேர்த்துக் கவிதை புனைந்திருக்கிறார். பிரமிள் சிறந்த எழுத்தாளராக தமிழ்நாட்டினரால் பாராட்டுப் பெற்றவர். உங்களுக்காக அவரது அந்தத் தவளைக் கவிதை இதோ:
‘தனக்குப் புத்தி நூறு என்றது மீன் -
பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில்
தனக்குப் புத்தி ஆயிரம் என்றது ஆமை -
மல்லாத்தி ஏற்றினேன் கல்லை
‘எனக்கு புத்தி ஒன்றே’ என்றது தவளை
எட்டிப் பிடித்தேன் -
பிடிக்குத் தப்பித் தத்தித் தப்பிப்
போகுது தவளைக் கவிதை -
நூறு புத்தரே! கோர்த்தரே!
ஆயிரம் புத்தரே! மல்லாத்தரே! கல்லேத்தரே!
ஒரு புத்தரே! தத்தரே! பித்தரே!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment