Wednesday 6 November 2013

புங்குடுதீவு மக்கள் வளர்த்த கொட்டி!

புங்குடுதீவு மக்கள் வளர்த்த கொட்டி இப்போது மீன் தொட்டியில்
கிழங்கோ! கிழங்கு!!
தமிழ் இலக்கிய உலகில் உலாவரும் யாவரும் அறிந்த பெரும் புலவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர். அவரின் மகன் அம்பிகாபதியையும் பலரும் அறிவர். அவன் சோழ அரசனின் மகள் அமராவதியைக் காதலித்தான். அவன் தனது காதலியைப்  பார்த்துப் பாடிய 
இட்ட அடி நோவ எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய”
என்ற ஈரடியும் யாவரும் அறிந்ததே. இந்த ஈரடியைத் தொடர்ந்து கம்பன் “கொட்டிக் கிழங்கோ! கிழங்கு!!” என்று பாடினானே, அந்தக் கொட்டிக் கிழங்கை தமிழர்களாகிய நம்மில் எத்தனை பேர் இன்று அறிவோம்?

மேலை நாட்டார் எமக்கு அறிமுகம் செய்துவைத்த உருளைக்கிழங்கு, பீட்ரூட்கிழங்கு என எத்தனையோ வகையான கிழங்குகளை உண்ணும் நாம், நம் முன்னோர் உண்ட கொட்டிக் கிழங்கை அறியமாட்டோம். அது கொடியா? செடியா? என்பதும் எமக்குத் தெரியாது. நாம் ஏன் இப்படி நம் முன்னோரின் உணவுகளைப் புறக்கணித்தோம்? நம் அறிவீனமா? எமது சோம்பலா? நம் தமிழ் முன்னோர் ஏதும் அறியாதவர்கள் என்ற எண்ணமா? பிறநாட்டார் மோகமா? எது காரணம்? இதற்கான பதில் யாருக்காவது தெரியுமா? நம்மை நாம் புறக்கணிப்பதே அதற்குக் காரணம். 

கொட்டிக்கிழங்கு எங்கு வளரும் என்பதை எம் தமிழ் மூதாட்டியான ஔவையார் சொல்லிச் சென்றுள்ளார். ஔவையார் பாடிய நூல்களில் ஒன்று மூதுரை. அதில் நமது உறவினர்களில் யார் யார் உண்மையான உறவினர்கள் என்பதைக் கண்டறிவது எப்படி என்பதைக் கூறுமிடத்தில் கொட்டியையும் கூறுகிறார்.
“அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு”                                     - (மூதுரை - 17)

நீர் அற்ற குளத்திலிருந்து [அற்ற குளத்தின்] பறந்து செல்கின்ற [அறு -நீங்கிப்போகும்] நீர்ப்பறவை போல் 
வறுமை வந்த போது [உற்றூழி] தீர்வார் [நீங்குவோர்] உறவு அல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
நீங்காமல் [ஒட்டி] துன்பதை அனுபவிப்பார் [உறுவார்] உறவினராவர்[உறவு]”  

‘குளத்தில் நீர் இருந்த போது நீரில் நீந்தி, மூழ்கி, ஆடிப்பறந்து மகிழ்ந்து வாழ்ந்த பறவைகள் யாவும் குளத்து நீர் வற்றி இல்லாமல் போனதும் பறந்து போய்விடும். அதுபோல துன்பம் வந்த போது நம்மைவிட்டு நீங்கிப் போவோர்கள் உறவினராகமாட்டார்களாம். அதே குளத்தில் வளர்ந்த கொட்டியும், ஆம்பலும், நெய்தலும் தண்ணீர் உயர்ந்திருக்கும் போது உயர்ந்தும், குறைந்து இருக்கும் போது தாழ்ந்தும், நீர் அற்று வறண்டு போனாலும் தாமும் வறண்டு கிடந்து, மீண்டும் மழை பொழிந்து குளம் நிறம்ப துளிர்த்து வளர்வது போல நமது இன்பத்திலும் துன்பத்திலும் ஒட்டி உறவாடுபவர்களே உண்மையான உறவினர்கள் ஆவர்’ என்கிறார்.

கொட்டி - Aponogeton natans [Photo source: Wikipedia]

ஔவையார் கூறிய கொட்டி, ஆம்பல், நெய்தல் மூன்றும் நீர்த்தாவரங்கள். இந்தக் கொட்டியே கொட்டிக்கிழங்கைத் தருவது. யாரும் நடாமலே நீர் நிலைகளில், வயல் வெளிகளில் தானாகவே வளரும். அப்படித் தானாக வளர்ந்து கொட்டிக்கிடந்ததால் அதற்கு கொட்டி என்று பெயர். மேலேயுள்ள படத்தைப் பாருங்கள் கொட்டி என்ற பெயருக்கு எற்றவாறு கொட்டிக் கிடக்கிறதே! நெற்பயிரிடையே களைகளாக கொட்டிக்கிழங்கு வளர்ந்திருப்பதை எங்கள் காணியிலும் [அநுராதபுரத்தில்] தஞ்சாவூரிலும் கண்டிருக்கிறேன். 

நீர்ச்சால் [Photo: source: Agroecology Lab]

அந்நாளில் யாழ்தீவகப்பகுதி மக்கள் வெங்காயக் கூடை போன்று ஆனால் மெல்லியதாகப் பின்னிய முளைக்கூடைகளில் கொட்டியைப் போட்டுக் கட்டி நீர் இறைக்கும் சால்களில் போட்டுவிடுவார்களாம். அது நீர்ச்சாலில் கிடந்து ஊறி முளைக்கும். முளைக்கும் கிழங்கை எடுத்து நீர்ச்சாலில் குளங்குட்டைகளில் நட்டு வளர்த்து, உண்பதர்க்குத் தேவையான கொட்டிக்கிழங்கை எடுப்பார்களாம். தனது சிறுவயதில் கொட்டிக்கிழங்கு இட்ட முளைக்கூடையை எடுத்துச் சென்று நீர்ச்சாலில் போட்டுவைத்ததாக என் தந்தை [பண்டிதர் மு ஆறுமுகன்] சொல்லக் கேட்டிருக்கிறேன். முதலாம் இரண்டாம் உலகப்போரின் போது  தீவுப்பகுதி மக்களின் உணவாகவும் கொட்டிக்கிழங்கு இருந்ததாம். ஆனால் இந்நாளில் வயல்களில் அது தானாக முளைத்தாலும் களையெனக் கூறிப் பிடுங்கி எறிகிறோம். இதுவே மேல்நாட்டு மோகம் தந்த வளர்ச்சி.

இயற்கைத் தேர்வாய், இலங்கையிலும் தமிழர் வாழிடமான தென் இந்தியாவிலும்  வளர்ந்த கொட்டியை  பண்டை நாட்களில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மேலும் கிழக்காக அமெரிக்காவுக்கும் தமிழன் கொண்டு சென்றான். கொட்டிக்கிழங்கு நீர்நிலைகளில் வளரும் ஒருவகைப் பாசியை வளரவிடாது. அதனால் மலேரியா நோயைத் தரும் நுளம்புகள் குளங்குட்டைகளில் முட்டை இடாது என்பதையும் நம்முன்னோர் அறிந்திருந்தனர். நாமோ கொட்டியை மறந்து கொட்டும் நுளம்பால் டெங்குக்காய்சலில் அவதிப்படுகின்றோம்.

aquariumplants.com என்ற வலைத் தளத்தில் சென்று பாருங்கள் கொட்டிக் கிழங்கின் பிறப்பிடம் நம் இலங்கை என்பதை அறிவீர்கள். மேல் நாட்டார் கொட்டியை எடுத்து வந்து நன்னீர் மீன் தொட்டிகளிலும், செயற்கை நீர்நிலைகளிலும், நீர்வாழ் உயிரினங்களின் காட்சிச் சாலைகளிலும் வளர்க்கிறார்கள். ஏனெனில் நீர்வாழ் உயிரினங்களுக்குத் தேவையான ஒட்சிசனைக் கொடுப்பதோடு தொட்டியில் வளரும் பாசியையும் அகற்றும் என்பதையும் அவர்கள் அறிவார்கள். நம்மில் எத்தனை பேர் அது கொட்டிக்கிழங்கு என்று தெரியாமலே மீன் தொட்டிகளில் கொட்டியை வளர்க்கிறோம்? அதனால் இன்றைய தமிழர்களாகிய நாம் 'கொட்டிக்கிழங்கா? அது என்ன கொட்டைக் கிழங்கா?' எனக்கேள்வி கேட்கிறோம். 


கொட்டி, கருங்கொட்டி, பேய்க்கொட்டி, காறற்கொட்டி, வன்கொட்டி, தாடுவன்கொட்டி, தண்டற்கொட்டி, குளக்கொட்டி எனக் கொட்டிக்கிழங்கில் முப்பதிற்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. இக்கிழக்கு இயற்கையாகவே கொஞ்சம் இனிப்புத் தன்மையுடையது. இக்கிழங்கை மரவள்ளிக்கிழங்கு போல் அவித்தும், கறியாக சமைத்தும் உண்பர். கொட்டிக்கிழங்கைக் காயவைத்து மாவாக்கி, அந்த மாவில் கூழ், கஞ்சி, களி போன்றவை செய்தும் உண்பர். என் தந்தையுடன் தஞ்சாவூர் [1972] சென்ற போது திரு இராஜன் அவர்கள் வீட்டில் நானும் கொட்டிக் கிழங்குக் களி உண்டிருக்கிறேன். சுவையாக இருந்தது. கிரந்தி, கரப்பான், வெள்ளைபடுதல் போன்ற நோய்களை நீக்கும் மருந்தாக கொட்டிக்கிழங்கின் மாவைச் சூரணமாக்கிக் கொடுப்பர். எனவே நம் முன்னோர் கொட்டிக்கிழங்கை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தினர் என்பதை இதனால் அறியலாம்.
கொட்டி

இவ்வளவு நன்மை தரும் கொட்டிக்கிழங்கை நாம் மறந்தாலும் தமிழ் புலவோரும் மருத்துவரும் எம் சந்ததியினருக்காக அவற்றைக் கட்டிக் காத்து வைத்துள்ளனர்.  அறிஞர் நாவில் சுவைத்த கொட்டிக் கிழங்காதலால் கம்பனுக்காக சரஸ்வதியும் கொட்டிக் கிழங்கு சுமந்தாளோ! 

மூன்றாம் குலோத்துங்க சோழனின் அரண்மனை. அங்கே பலநாட்டு அரசர்களுக்கும் புலவர்களுக்கும் மாபெரும் விருந்து கொடுத்தான் சோழன். சோழனின் மகள் அமராவதியும் விருந்துக்கு வந்திருந்தாள். அந்த விருந்தில் கலந்துகொள்ள சோழ அரச அவைப்புவரான கம்பரும் அவர் மகன் அம்பிகாபதியும் சென்றனர். சென்றவர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். அம்பிகாபதியை அமராவதி கண்டாள். அவனுக்கு உணவு பறிமாறுவதற்காக உணவு வைத்திருந்த வட்டிலை கையில் எடுத்தாள். இடை அசைய மெல்ல நடந்தாள். [உணவுப் பொருட்கள் வைக்கும் வட்டமான பாத்திரம் வட்டில் என்று அழைக்கப்பட்டது. அதனைத் தேவைக்கு ஏற்ப பொன், வெள்ளி, மண், மரநார், ஓலை, பிரம்பு போன்றவற்றால் செய்தனர்.]  

கொட்டிக்கிழங்கு 

கவிஞனான அம்பிகாபதி தன் காதலி வட்டிலைச் சுமந்து நடந்து வருவதைக் கண்டான். காதல் மயக்கத்தில் அங்கே கூடியிருந்த விருந்தினரையும் மறந்தான்.
“இட்டஅடி நோவ எடுத்தஅடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய” 
எனப் பாடினான். அவன் யாரைப் பார்த்துப் பாடுகிறான் என்பதை உணர்ந்த கம்பர் அவனின் பாட்டின் இடையே புகுந்து
                                                 - கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில்
வழங்கோசை வையம் பெறும்”
என்று பாடினார். கம்பர் இடையே புகுந்து பாடியதும் அம்பிகாபதி தன் தவறை உணர்ந்து அமைதியானான். 

‘வைத்தஅடி நோக [இட்டஅடி நோவ] நடக்கத் தூக்கியஅடி [எடுத்தஅடி] கொப்பளிக்க
வட்டில் சுமந்து இடை அசைய [மருங்கசைய] - கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று சொல்பவளது [கூறுவாள்] நாவில்
வருமோசை [வழங்கோசை] உலகிற்கு [வையம்] ஈடாகும் [பெறும்]’

ஆனால் குலோத்துங்க சோழனோ கம்பரைப் பார்த்து ‘இந்த விருந்து மண்டபத்தில் வட்டில் சுமந்து கொட்டிக்கிழங்கு விற்பது யார்?’ என்று கேட்டான். கம்பனும் ‘அதோ கேட்கிறதே கொட்டிக் கிழங்கோ! கிழங்கு!’ என்று கூறுவது என்றான். கம்பன் சொன்னது போலவே பக்கத்துத் தெருவில் ஒருத்தி 'கொட்டிக் கிழங்கோ! கிழங்கு!' என்று கூறுவது எல்லோருக்கும் கேட்டது. கம்பனுக்காகச் சரஸ்வதி வட்டிலில் கொட்டிக் கிழங்கு சுமந்து விற்றாள் என்பர். இலக்கியச் சுவை மிக்கதும் நமது முன்னோர் சுவைத்ததுமான கொட்டிக் கிழங்கை புங்குடுதீவு மக்கள் எப்போ சுவைக்கப் போகிறோம்?
இனிதே, 
தமிழரசி.

4 comments:

  1. அட இலக்கியத்தில் படித்தது இவ்வளவு காலத்திற்குப்பின் தெளிவாகத் தெரிந்தது... நன்றி.

    ReplyDelete
  2. naan indru kuuda kotti kizhangu unden :)

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி. தமிழ்நாட்டிலா?

      Delete