Friday, 15 November 2013

பெண்கனி நின்றாள் - 1

ஶ்ரீரங்கம்

எவரோடும் ஒப்பிட்டு உவமை கூறமுடியாத ஓவியக் கலைஞன் நான்முகன். எத்தனை கோடி வகை வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன. அத்தனையையும் படைத்தவன் நான்முகன். அவனால் படைக்கப்பட்டவள் சீதை. அவளின் அழகை எடுத்துச் சொல்லமுடியாது. சடப்பொருட்களான குன்றும் கல்லும் புல்லும் பார்த்து மகிழ்ந்து உருக நின்றாளாம்.

“சொல்லும் தன்மைத்து அன்று அது குன்றும் சுவரும் திண்
கல்லும் புல்லும் கண்டு உருக பெண்கனி நின்றாள்
அதைக் கம்பன் பார்த்தான். இவளைப் போல ஒரு பெண்ணைப் படைக்க முடியுமென்றால் நான்முகன் இன்னும் பல பெண்களைப் படைத்துத் தரலாமே! என்று கூறுகிறான்.
“……. …… இவள் ஒப்பாள் ஒரு பெண்ணை
தரும்தான் என்றால் நான்முகன் இன்னும் தரலாமே

மிகச்சிறுவயதில் அப்பாடல்களைப் படித்தபோது மலையையும் கல்லையும் உருகவைக்கும் அழகுடன் பெண்கள் இருக்கிறார்களா என எண்ணினேன். உங்களுக்கும் அப்படித் தேன்றும். கம்பன் சொன்ன சீதையின் எழிலிலும் மேலான எழிலுடன் இருக்கும் பெண்களைக் காணவேண்டுமா? அதற்கு ஶ்ரீரங்கம் குழலூதும் பிள்ளை கோயிலுக்குப் போகவேண்டும்.

நான் குழலூதும் பிள்ளை கோயிலில் இருந்த ஒரு சிலையைப் பார்த்த போது ஒரு சிறுபையனும் அச்சிலையைப் பார்த்தான். பார்த்தவன் தன் கரங்களால் கண்ணை மூடிக்கொண்டான். பின்னர் விரலை மெல்ல விரித்து விரல் இடுக்கால் அச்சிலையைப் பார்த்தான். அவனை நான் பார்த்து சிரிப்பதையும் பார்த்தான். அவன் முகம் முழுவதும் வெட்கத்தால் சிவக்க தாயிடம் ஓடி, தாயின் பின்னே மறைந்து நின்று நான் பார்க்கிறேனா என்று என்னைப் பார்த்துப் பின் சிலையைப் பார்த்து வெட்கப்பட்டான். அச்சிறுவனை அப்படி வெட்கப்பட வைத்த சிலையாய் நின்ற பெண்கனியில் ஒருவித ஆடையும் இருக்கவில்லை.

அங்கே திருநாவுக்கரசு நாயனாரின்
“முன்னை அவனுடைய நாமம் கேட்டாள்
          மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
          பெயர்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அத்தனையும் அன்னையையும் அன்றே நீத்தாள்
           அகன்றாள் அகவிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
          தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!

என்ற தேவாரத்துக்கு அமைய தன்னை மறந்தவளாய், தன் பெயரை அறியாதவளாய், அரங்கத்து நாயகனின் அரவணைப்புக்கு ஏங்கித் தவித்து, முகத்திலே நாணம் மின்ன, தலையைக் கொஞ்சம் சரித்து, சிற்ப இலக்கணத்துக்கு மெருகேற்றி ஒரு பெண்கனி நிற்கிறாள். உடலில் ஆடையே இல்லாமல், நிற்கும் இந்தப் பெண்ணின் நாணத்தைக் கல்லில் வடித்த அந்தச் சிற்பி, தன் படைப்பாற்றலால் நான்முகனைத் தோற்கடித்து விட்டான். அந்தப் பெண்கனியின் உடல் முழுதும் நாணம் கனிந்து நிற்கிறதே! கருங்கல்லுக்கே நாணத்தை ஊட்டிய சிற்பியை நான்முகன் வெல்ல முடியுமா?

குழலூதும் பிள்ளை கோயில் என்னும் பெயருக்கு ஏற்ப அங்கு சிலையாய் நிற்கும் பெண்கள் எல்லோரும் கண்ணன் மேல் காதல்கொண்டு கனிந்து உருகுபவராகவே நிற்கின்றனர். எனவே ஆழ்வார்கள் அருளிச் செய்த திருப்பாசுரங்களுக்கு ஏற்றாற் போலவே சிற்பிகள் அந்தப் பெண்கனிகளை சிலைவடித்தனர் போலும்.

கண்ணன் மேல் கொண்ட காதலால் ஆண்டாள் தன்னை மறந்து செய்த செயல்களைப் பார்த்த அவளின் வளர்ப்புத் தந்தையான பெரியாழ்வார்.

“காறை பூணும் காண்ணாடி காணும் கையில் வளைகுலுக்கும்
கூறை உடுத்தும் அயர்க்கும் தங்கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறிநின்று ஆயிரம்பேர்த் தேவன் திறம் பிதற்றும்
மாறில் மாமணி வண்ணன் மேல்இவள் மாலுறு கின்றாளே”     
                                   - (நாலாயிர திவ்வியப்பிரபந்தம்: 293)

என நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தில் பாடி இருக்கிறார். அந்தப் பாசுரத்தின் முதல் இரு அடிகளுக்கும் விளக்கம் தருபவள் போல் ஒரு பெண்கனி நிற்கிறாள். அவளது இடையோ அது இல்லையோ என இடப்பக்கமாக ஒடிந்து இருக்கிறது. இடப்பக்கம் இடை ஒடிவதால் ஒய்யாரமாய் வலப்பக்கம் சரிந்து நின்று, இடக்கையில் இருக்கும் கண்ணாடியில் முகத்தைப் பார்த்து வலக்கையால் நெற்றியில் பொட்டு வைக்கிறாள். முகத்தில் காதல் கதை சொல்ல அவள் நிற்கும் நிலை பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். 

அவளை மட்டுமல்ல அவள் அணிந்திருக்கும் அணிகலங்கள், ஆடைகள், தலையலங்காரம்  எல்லாவற்றையுமே மிகநுட்பமாகச் சிற்பி செதுக்கி வைத்திருக்கிறான். இவ்வளவு அணிகலங்களையும் ஆடையையும் என்றாவது நான்முகன் படைத்தானா? ஆதலால் பெண்கனிகளைப் படைப்பதில் நான்முகனைவிட சிற்பிகள் படைப்பாற்றல் மிக்கவர்களே!  கண்ணாடி காணும் அந்தப் பெண்கனியை மேலே உள்ள படத்தில் பாருங்கள். அவளின் மூக்கை உடைத்தவர்களை என்னென்று சொல்வது?
இனிதே,
தமிழரசி.

சொல் விளக்கம்:
நாமம் - பெயர்
வண்ணம் - அழகு / குணம் / சிறப்பு 
பிச்சியானாள் - பித்துப்பிடித்தவளானாள் 
அத்தன் - தந்தை 
அன்னை - தாய் 
அகவிடத்தார் - தன்வீட்டார் 
ஆசாரம் - வழக்கம் 
தலைப்பட்டாள் - தொடங்கினாள்
தாள் - அடி 
 காறை - கழுத்தில் அணியும் அணிகலன் 
 அயர்க்கும் - காதலால் உண்டாகும் மனக்கவர்ச்சி 
 கொவ்வை - கொவ்வைப் பழம் 
 செவ்வாய் - சிவந்த உதடு
 திருத்தும் - சரி செய்தல் 
 மாறில் - பகையில்லாத [மாறு - பகை]
 மாலுருதல் - மையல் கொள்ளல்

No comments:

Post a Comment