Sunday, 3 November 2013

பெற்றபிள்ளையைக் கொடுப்பார்களா?



இளவரசன் ஒருவன் காட்டிற்கு வேட்டை ஆடச் சென்றான். மான் வேட்டைக்குச் சென்றவனுக்கு  முன்னே, மான் போல் துள்ளிக்குதித்து ஓடிய மான் விழியாளைக் கண்டான். காதல் கொண்டான். அவள் மேல் கொண்ட காதலை அந்நாட்டு அரசனான தன் தந்தைக்குச் சொன்னான்.  தனது நாட்டின் வெங்கை மாநகரத் தலைவனின் மகள் அவளென்பதை ஒற்றர்களால் அரசன் அறிந்து கொண்டான். அவளை இளவரசனுக்கு மணம் பேசி, அவளின் தந்தைக்குத் தூது அனுப்பினான். தூதுவன் சென்று அவளின் தந்தையிடம் தூதோலையைக் கொடுத்தான்.
அந்நாட்டு அரசன் தன் மகளை இளவரசனுக்குத் திருமணம் செய்யக் கேட்டு அனுப்பிய தூதோலையை வாசித்த வெங்கை மாநகரத் தலைவன் சினந்து கொதித்து எழுந்தான். ‘எவனாவது அரசர்களுக்கு பெண்கொடுப்பானா? அரசர்களை மணந்த பெண்களின் நிலை என்னாயிற்று? தன் மனைவியை விற்றவன் யார்? அரிச்சந்திரன். [ ஓர் அரசன் அல்லவா?], பாதி உடையுடன் [கலை] காட்டில் [வனத்தில்] மனைவியை அழவிட்டவன் யார்? நளமகாராசன். [அவனும் ஓர் அரசன் தானே!], தனது மனைவியை அசோகவனச் சிறையில் இருக்கவிட்டவன் யார்? [இராமன் தசரதமகாராசன் மகன் அல்லவா?], மனைவியின் உடையை மற்றவர்கள் உரிவதைப் பார்த்து விழித்துக் கொண்டிருந்தவர்கள் யார்? [பஞ்சபாண்டவர்கள் அரசர்கள் தாமே!]. அப்படியிருக்க இனிமேலும் தமக்கு மனைவி வேண்டுமென்று அரசர்கள் பெண்களைத் திருமணம் செய்தல் முறையாகுமோ! காறித் துப்பெடா! திருணம் என்று சொன்ன அந்த வாயைக் கிழித்து, ஓலையைக் காற்றில் பறக்கவிடடா.

நாங்கள் யார் தெரியுமா? வெங்கை மாநகர் வேடர்கள் நாம்.கடவுளாகிய சிவபெருமானே எங்களிடம் வந்து மகிழ்வோடு எங்களின் எச்சில் உணவை [கண்ணப்ப நாயனார் சுவைபார்த்துக் கொடுத்த எச்சில் உணவை] உண்டபின்னர், அவர் வெற்றெடுத்த முருகனுக்கு போனால் போகுது பாவம் என்று நாங்க வளர்த்த பெண்ணைக் [வள்ளியைக்] கொடுத்தோம். அப்படிப்பட்ட நாம் பெற்றெடுத்த பிள்ளையைக் கொடுப்போமா? உனக்கென்ன பேயா பிடித்திருக்கிறது?’ எனத் தூதுவனை வேடுவதலைவன் துரத்தினான் என சிவப்பிரகாச சுவாமிகள் பாடியிருக்கிறார். 
விற்றதார் கலை பாதியோடு 
          வனத்திலே அழவிட்டதார்
வெஞ்சிறை புக விட்டதார் 
           துகில் உரியவிட்டு விழித்ததார்
உற்றதாரமும் வேண்டும் என்றினி 
            மன்னர் பெண்கொளல் ஒண்ணுமோ!
உமியடா! மணமென்ற வாய்கிழித்து
           ஓலை காற்றில் உருட்டடா!
வெற்றியாகிய முத்தி தந்தருள்
           வெங்கை மாநகர் வேடர்யாம்
விமலரானவர் எமையடுத்து இனிது
            எங்கண் மிச்சில் மிசைந்தபின்
பெற்றவேலர் தமக்கு யாமொரு
           பெண் வளர்ப்பினில் ஈந்தனம்
பெற்றபிள்ளை கொடுப்பரோ! ஈதென்
           பேய் பிடித்திடு தூதரே!!                            - (திருவெங்கைக் கலம்பகம்: 101)
இப்பாடலைப் நன்றாகச் சுவைத்துப் படித்த பின்னர் எவராவது அரசர்கட்கும் கடவுளர்க்கும் தாம் பெற்றபிள்ளையைக் கொடுப்பரோ! 
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment