Tuesday, 12 November 2013

வறுமையும் வாழ்வும்


மண்ணில் பிறந்தவன் மண்ணில் வாழ்ந்து மண்ணிலே மடிகின்றான். ஆனால் இக்குழந்தை வறுமைப் பிடியில் சிக்குண்டு மண்ணோடு மண்ணாக வாழ்கின்றான். இந்தக் குழந்தை இப்படித் தூங்க மானுடராக வாழும் நாமும் காரணம் என நினைக்கும் போது நெஞ்சம் துவள்கிறது. 
“கொடிது கொடிது வறுமை கொடிது
அதனிலும் கொடிது இளமையில் வறுமை”

இது ஔவையார் கண்ட முடிவு. அவர் அப்படிக் கூறக்காரணம் என்ன? அதனை நீதி நூல் எனப்போற்றப்படும் நாலடியார் எடுத்துச்சொல்லும். நுட்பமான அறிவற்று இருப்பதே வறுமையாகும். நல்ல கல்வியறிவைப் பெற்றிருப்பதே மிகப்பெரும் செல்வமாகும். 
“நுண்ணுணர்வு இன்மை வறுமை அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்”                 - (நாலடியார்: 251: 1 - 2)
மனிதர்களாகிய எமக்குச் செல்வம் என்பது அறிவு. வறுமை என்பது அறிவில்லாத் தன்மை. நாம் நினைப்பது போல் பொருளும் பொருள் இன்மையும் அல்ல என்கின்றது நாலடியார். இளமையில் பெற்ற அறிவே என்றும் நிலைத்து அழியாது நிற்கும். ஆதலால் இளமையிலே அறிவுக்கு வறுமை வரலாமா?

மனித வாழ்க்கை என்றும் வசந்தமாக இருப்பதில்லை. மாடமாளிகை கூட கோபுரம் என வாழ்ந்த அரசனும் ஆண்டியாகி வறியவனாய் மாறலாம். உலகிலுள்ள இன்பங்களை எல்லாம் மகிழ்வோடு சுவைத்து வாழ்வதற்கு வேண்டிய பொருள் இல்லா நிலையை வறுமை என்கிறோமா? இல்லவே இல்லை. பொருள் இல்லா நிலைமை ஏழ்மையாகும். ஏழ்மையும் வறுமையும் ஒன்றல்ல. வறுமை என்றால் என்ன? வறுமை என்பது ஒரு சிறு துன்பமல்ல. துன்பங்கள் யாவும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும் மிகப்பெருந்துன்பமே வறுமையாகும். அதாவது துன்பங்களாலும் துயரங்களாலும் வரும் வெறுமையை வறுமை எனலாம்.

தனி மனிதனுக்கு வரும் வறுமை அவனது சோம்பலால், விடாமுயற்ச்சி இன்மையால், நோய்களால் எனப்பல காரணங்களால் வரும். ஆனால் இயற்கையின் சீற்றத்தாலும், அரச பயங்கரவாதத்தாலும், போர்களாலும் ஏற்படும் வறுமை மனித சமுதாயத்தையே சீரழிக்கின்றது. மனித இனம் காலங்காலமக இயற்கையுடன் போராடிப் போராடி அதனை மெல்ல மெல்ல வெற்றி கொண்டு வாழப்பழகிவிட்டது. ஆனால் மனித இனத்தை மனிதனே சீரழிக்கும் சிறுமையில் இருந்து வெற்றி பெறமுடியாது திண்டாடுகிறது. இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் உலகெங்கும் வறுமை தாண்டவமாட அதுவே காரணமாகும். 
வறுமையால் மண்ணுடன் உப்பைச் சேர்த்த ரொட்டி [ஹெயிடி - Haiti]

பொருள் வைத்திருப்போரே வறுமை எனும் பெரும் துன்பத்தால் துடிக்கும் போது, இருக்க இடம் இல்லாமல், உடுக்க உடையில்லாமல், படுக்கப் பாயில்லாமல், குடிக்க நீரில்லாமல், உண்ண எந்த வகை உணவும் இல்லாமல் மண்ணையும் சாம்பலையும் உண்போராய், மழையும் வெய்யிலும் வாட்ட, நோய்க்கு மருந்தில்லாமல், உண்ணக் கையில்லாமல், நடக்கக் காலில்லாமல் பார்க்க விழியே இல்லாது அரசபயங்கர வாதங்களால் வறுமை ஆக்கப்பட்டு இருப்போர் நிலையை நாம் கொஞ்சம்  நினைத்துப் பார்க்க வேண்டும். 

உலக வல்லரசுகளுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் இருக்கும் பேராசையும் போராசையும் சேர்ந்து மனிதகுலத்தை வறுமை பிழிந்து எடுக்கிறது. பேராசையால் பதுக்கும் செல்வமும், போராசையால் கொட்டிச் சிதறடிக்கப்படும் நாடுகளும், பொருள்களும், இயற்கை வளங்களும் இருந்தாலே போதும் வறுமை என்ற சொல்லை வறுமை அடையச் செய்யலாம். ஆனால் அவர்களின் தன்னலமும் ஆணவமும் அவற்றுக்கு இடங்கொடுக்குமா? இந்த ஆணவப் பூனைகளுக்கு மணிகட்டுவது யார்?

உண்மையான வறுமையின் பலபடி நிலைகளை சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பலரும் எமக்காகச் சொல்லோவியமாய் வரைந்து வைத்துள்ளார்கள். 

கணவன் எப்போது பொருளோடு வருவார் என்று
“நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்கும் மனைவி”
வீட்டுக்கூரை இற்றுப்போய் மழை பொழிய சுவர் நனைகிறது. நனையும் சுவரிலிருந்து பல்லி கனைக்கிறது. பல்லி எந்தத் திசையில் இருந்து கனைக்கிறது. அவர் பொருளுடன் வருவார் என்று பல்லி சொல்கிறதா? எனப் பல்லிச் சாத்திரம் பார்த்துக்கொண்டு நனையும் சுவரையுடைய வீட்டில் மனைவி காத்திருக்கிறாள்.  

பொருள்தேட மதுரைக்குச் சென்ற கணவனோ
“எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் [காற்றால்] மெலிந்து
கையது கொண்டு மெய்யது [உடலைப்] பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் [பெட்டிக்குள்] இருக்கும் பாம்பென உயிர்க்கும் [மூச்சுவிடும்]
ஏழையாளனாய்”
இருக்கிறார். சத்திமுற்றப்புலவர் தமது வறுமையை சொல்லோவியமாக வடித்த பாடல் இது.


வறுமையால் உரித்த உடும்பு போன்ற உடலாக மாறினோர்

இந்தப் படத்தில் உள்ளோர் போல் ‘உடும்பின் தோலை உரித்தது போல விலாஎலும்பு எழும்பித் தெரியும் சுற்றதாரின் கடும்பசியைத் தீர்த்து வைப்பாரைக் காணாமல்’ இருப்போரை கோவூர்க்கிழார் என்னும் சங்ககாலப் புலவர் காட்டுகிறார்.

“உடும்புஉரித்து அன்ன என்புஎழு மருங்கின்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது”          - (புறம்: 68: 1 - 2)

வறுமையின் பிடியில் சிக்குண்டு வாழ்ந்தோர்கள் இப்படி உடும்பின் தோலை உரித்தது போன்ற தோற்றதுடன் மட்டுமா வாழ்ந்தார்கள்? வறியவர்களின் உடை எப்படி இருந்தது பார்ப்போமா? ஈரும் பேனும் இருந்து அரசாட்சி செய்ய, வேர்வையால் நனைந்து நனைந்து இற்றுப்போய், அதனை வேறு நூலால் தைத்து தைத்து அவையும் அறுந்து தொங்கும் கந்தையுடன் இருந்ததை முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவர் சொல்கிறார். 

“ஈரும் பேனும் இருந்து இறைகூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த
துன்னல் சிதார்”                                         - (பொருநர் ஆற்றுப்படை: 79 - 81)

வறுமையில் வாடுவோருக்கும் தன்மானம் என்பது உண்டு. அதனை பொருள் படைத்தோர் நினைத்துப் பார்ப்பதே இல்லை. ஊர் ஊராகச் சென்று பாடல் பாடி பரிசுபெற்று வாழும் பாணர்கள் சங்ககாலத்தில் வாழ்ந்தார்கள். எனினும் அவர்களுக்கு என்று சொந்த ஊர்களும் வீடுகளும் இருந்தன. அவர்கள் பலவகை இசைக்கருவிகளை வாசித்தார்கள். அவற்றில் ஒன்று கிணை என்று அழைக்கப்பட்டது. அது ஒருவகை தாள இசைக்கருவியாகும். கிணையை வாசிக்கும் இளம் பெண்ணை கிணைமகள் என்று அழைத்தனர். சங்ககாலப் புலவரான நல்லூர் நத்தத்தனார் தமக்கு வந்த வறுமையை தனது சுற்றத்தவளாகிய கிணைமகளின் செயலோடு படம் பிடித்து எமக்காகத் தந்திருக்கிறார்.


சங்ககாலத் தமிழர் வாசித்த கிணை எனும் இசைக்கருவி

திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது 
புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சிதல் அரித்த
பூழி பூத்த புழற்காள் ஆம்பி
ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம்”                                            - (சிறுபாணாற்றுப்படை: 130 - 140) 

நல்லந்துவனார் தனது சுற்றத்தாருடன் இருந்த வீட்டின் சமையல் அறை. அங்கே நெருப்பைப் பல நாளாகக் காணாத அடுப்படியில் திறாவாத கண்ணுடன் சாய்ந்த செவியோடுள்ள குட்டிகளை ஈன்ற நாய் படுத்துக் கிடக்கிறது. நாய்க்குட்டிகள் தாய்நாயின் கறவாத பால் முலையை இழுத்து பால் குடிக்க முயற்சி செய்கின்றன. தாய்நாய் குட்டிகளை ஈன்ற வேதனையோடு, உணவில்லாது பசியும் வாட்ட, பால் சுரக்காத முலையில் குட்டிகள் பால் குடிக்க முயல்வதால் ஏற்படும் வலியை பொறுக்க முடியாது ஈனக்குரலில் குரைக்கிறது. மரத்துடன் சேர்ந்த பழைய சுவரை கரையான் கூட்டம் புற்றெடுத்து அரித்துக் கொட்டிக்கிடக்கும் புழுதியில் காளன்கள் பூத்துக்கிடக்கின்றன. காளான் முளைக்கும் வரையும் நெருப்பைக் காணாத அடுப்படி அது. அந்தளவு வறுமை இருக்கும் இடத்தில் தாங்கமுடியாத பசி வாட்ட உடல்வற்றி இடைமெலிந்த கிணைமகள் குப்பையில் முளைக்கும் வேளைக்கீரையை பெரிய நகத்தால் கிள்ளிக்கொண்டு வந்தாள். உப்புக்கும் வழியில்லாததால் உப்பில்லாமல் சமைத்தாள். குப்பையில் முளைக்கும் கீரையை உப்பில்லாமல் சமைத்து உண்பதை ‘வறுமை வருவது உலகஇயல்பு’ என்று அறியாத மடையைர்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக வீட்டின் தலைவாயிலை அடைத்து அந்த வறுமையிலும் சுற்றத்தாருடன் சேர்ந்து உண்டனர். மனித உயிரை அழிக்கும் பசி வருத்தம் உண்டாக வறுமையே காரணமாகும்.

பொருளோடு வாழ்ந்த மனிதன் வறுமை அடைந்தால் அவன் நிலைமை எப்படி இருக்கும் பார்ப்போமா?
உலகம் போற்ற பேரறிஞனாய் சபைகளில் முழங்கித் திரிந்தவன், வறுமை வந்ததும் அத்தைகைய சபைக்கு செல்லவும் வெட்கப்படுவான். கருத்துகள் சொல்லவும் நாணப்படுவான். மாவீரனின் வீரம் குறைந்து போகும். விருந்தினரைக் கண்டால் எதை உண்ணக் கொடுப்பது என்ற உள்ளக்குமுறலில் மனம் வெதும்புவான். மனைவி கேட்பதை எப்படிக் கொடுப்பது என்று மனைவிக்கே பயப்படும் நிலை உருவாகும். கெட்டவர்களுடன் கூட்டுச்சேர வைக்கும். மாமேதையாய் இருந்தவனின் அறிவும் குறைய உலகமெலாம் அவனைப் பழிக்குமாம். 
“தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்
வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும்
பூங்கொடி மனியாட்கு அஞ்சும் புல்லருக்கு இணக்கம் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிக்கும் தானே          - (விவேக சிந்தாமணி)

பொருள் வைத்திருந்தவகள் வறுமையில் வாடும் போது அங்கே விருந்தினர் வந்தால் அவர்கள் நிலை எப்படி இருக்கும்? அந்த நிலை தனக்கு வந்ததை மிக அழகாகச் சொல்கிறார் பெருங்குன்றூர் கிழார் என்னும் சங்ககாலப் புலவர்.

“உள்ளிய
விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்
பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
அறிவுகெட நின்ற நல்கூர்மையே”                  - (புறம்: 266: 10 - 13) 

‘என்னை நினைத்து வந்த விருந்தினரைக் கண்டு அவர்களுக்கு விருந்து கொடுக்க வழியின்றி ஒளித்து வாழ்கிறேன். அத்தகைய நன்மையற்ற வாழ்க்கையை உடைய ஐம்பொறிகளால் ஆன உடம்பில் தோன்றி என் அறிவு அழிந்து போகக் காரணமாய் வறுமை நிற்கிறது’ என்கிறார்.

சங்ககாலப் புலவர்களையே அறிவுகெட வைத்த வறுமையும் வாழ்வும் என்றென்றும் ஒன்றைவிட்டு ஒன்று நீங்காதவையே. இருப்பினும் மானுடக் குழந்தைகளை இருபத்தி ஓராம் நூற்றாண்டிலும் வறுமையில் வாடவிடுவது தகுமா?
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment