ஒளிஒருவருக்கு உள்ள வெறுக்கை இளிஒருவருக்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்” - 971
பொருள்:
மற்றாவர்களால் செய்யமுடியாததைச் செய்வேன் என்று எண்ணும் எண்ணத்தைக் கொடுக்குகின்ற ஊக்கமாகிய செல்வமே ஒருவனுக்கு பெருமையத்தரும். அப்படிச்செய்வதைவிட்டு எப்படியும் உயிர்வாழ்ந்தால் போதும் என எண்ணுதல் இழிவைத்தரும்.
விளக்கம்:
நாம் யார் என்பதை நம்மை அறியாதோருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது நமது புகழால் ஏற்படும் பெருமையாகும். ஆதலால் பெருமைக்கு ஒளியென்ற பெயரும் உண்டு. நாம் செய்து முடிக்க நினைத்த ஒன்றை உள்ளத்துள் மீண்டும் மீண்டும் நினைப்பதால் ஊக்கத்தை உள்ளம் என்பர். மிகப்பெருஞ்செல்வம் வெறுக்கை என்று கூறப்படும். எனவே திருவள்ளுவர் ஊக்கமிகுதியாகிய பெருஞ்செல்வத்தை உள்ள வெறுக்கை என்று குறிப்பிடுகிறார். ஊக்கமெனும் மிகப்பெருஞ் செல்வத்தை உடையவனே புகழால் ஏற்படும் பெருமையை அடைவான். எதனையும் செய்யாது ஊக்கமில்லாமல் வாழ்வோம் என இருத்தல் இழிவாகும்.
நான் இங்கு வந்த காலத்தில் என்னைப் பார்த்து நீங்க பாக்கியா? என்று கேட்பார்கள். நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவள் இல்லை ஶ்ரீலங்கன் என்று சொல்வேன். அது எங்கே இருக்கிறது என்று வினவுவார்கள்? ஏனெனில் ஶ்ரீலங்கா என்ற பெயரே 1972ல் தானே ஏற்பட்டது. அத்துடன் உலகவரைபடத்தில் ஓர் எறும்புபோல் இருக்கும் இலங்கையை அந்நாளில் அறிந்திருந்தோர் எத்தனை பேர்? வயதான சிலருக்கு சிலோன் என்றால் புரியும். அப்படிப்பட்ட நிலையில் நாம் ஶ்ரீலங்காவையும் யாழ்ப்பாணத்தையும் கிளிநொச்சியையும் எடுத்துச்சொல்ல என்ன பாடுபட்டோம் என்பது அன்று இருந்தோருக்குத் தெரியும்.
ஆனால் இன்று அந்த நிலையிலா நாம் இருக்கிறோம்? இன்று ஶ்ரீலங்காவின் பெயர் உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒளிவீச யார் காரணம்? ஈழத்தமிழன் என்று ஓர் இனம் உண்டு. அது பண்டைக்காலம் தொட்டு ஈழத்திருநாட்டில் வாழ்ந்து வருகிறது. அந்த ஈழத்தமிழினம் அறிவும் ஆற்றலும் எதற்கும் அஞ்சா மாவீரமும் உடையது என்று உலகுக்கு எடுத்துக்காட்டியது யார்? ஊக்கமிகுதியாகிய பெருஞ்செல்வத்தை தமதாக்கி, ஈழத்தமிழினம் என்னும் பெருமையோடு வாழ்ந்தால் வாழ்வோம் அன்றேல் இறந்து மடிவோம் என்று களமாடி நின்ற மாவீரர்கள் அல்லவா?
“ஒளிஒருவருக்கு உள்ள வெறுக்கை இளிஒருவருக்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்”
என்னும் இந்த வள்ளுவன் குறளுக்கு இலக்கணமாய் ஈழத்தமிழரின் பெருமையை உலகெங்கும் ஒளிரவைத்த எம் மாவீரரைப் போற்றுவோம். ஒளி ஏற்றுவோம்.
No comments:
Post a Comment