ஶ்ரீரங்கம் குழலூதும் பிள்ளை கோயிலின் கருவறையின் புறச்சுவரில் சிலைகளாய் இருக்கும் பெண்கனிகளில் ஒருத்தி
“சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்
முறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந்
துறையாருங் கடல்தோணி புரத்தீசன் துளங்கும் இளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே”
என்ற திருஞானசம்பந்தரின் தேவாரத்திற்கு ஏற்ப கிளியிடம் கெஞ்சுவதுபோல் நிற்கிறாள்.
வலக்கையில் தாமரைமொட்டைப் பிடித்திருக்கும் அவளின் விரல்களில் கிளி அமர்ந்திருந்து கொஞ்சுகிறது. அவள் கூறுவதை கூர்ந்து கேட்பது போல சிற்பி அக்கிளியை வடித்திருக்கிறான். அவளின் காலருகில் கீழே தொங்கும் சங்கிலியால் ஆன கூட்டினுள் மற்றுபோர் கிளி நிற்கிறது. அக்கிளிகூட மேலே அண்ணாந்து அவளைப் பார்த்தபடி அவள் சொல்வதையெல்லாம் செவிமடுப்பது போல நிற்கிறது. அவள் இருகும் இடமோகுழலூதும் பிள்ளை கோயில். எனவே இளம்பிறையாளன் திருநாமத்தை சொல்லுமாறு கிளியிடம் அவள் கேட்டிருக்க மாட்டாள். ஆயர்பாடியில் கண்ணன் செய்த அற்புதங்களை சொல்லு கிளியே! என்று கேட்டிருப்பாள். அவள் கிளியிடம் எவற்றைக் கேட்டு கெஞ்சினாள் என்பதை
“கல் எடுத்து கல்மாரி காத்தாய் என்றும்
காமருபூங் கச்சியூரகத்தாய் என்றும்
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும்
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்றும்
மல் அடர்த்து மல்லாரை அன்று அட்டாய் என்றும்
மாகீண்ட கைத்தலத்து என்மைந்தா என்றும்
சொல் எடுத்துத் தன்கிளியைச் சொல்லே என்று
துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே!”
- (நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்: 2064)
என்று நாலாயிரத்திவ்வியப் பிரபந்தப் பாடல் எமக்கு எடுத்துரைக்கிறது.
இவளுக்கு அப்பால் இரு இளமங்கையர்கள் வீணை ஏந்தி நிற்கிறார்கள். ஒருத்தியின் இரண்டு கரங்களையும் வீணைத் தண்டையும் மனக்குருடர் யாரோ உடைத்துவிட்டனர். மற்றவள் கரங்களால் வீணையை மார்மேல் தாங்கி இடக்கர விரலால் வீணையை மீட்டுகிறாள். அம்மங்கையின் வலக்கையும் வீணையின் நடுப்பகுதியும் உடைபட்டு இருப்பினும் அந்த அழகுப் பதுமையின் முகத்தில் சிந்தும் உயிர்த்துடிப்பு மீண்டும் மீண்டும் அவள் அழகைப் பருகச் சொல்கின்றது.
அப்பெண்கனி, திருமங்கை ஆழ்வார் பாடிய
“கல் உயர்ந்த நெடுமதிள் சூழ் கச்சிமேய
களிறு என்றும் கடல்கிடந்த கனியே என்றும்
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல் உயர்ந்த நெடு வீணை முலைமேல் தாங்கி
தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு
மெல்விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே
மென்கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே”
- (நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்: 2066)
போல் நிற்கின்றாள்.
அப்பெண்கனிகளின் தலையலங்காரங்களும், நகைகளும், உடைகளும் எப்படியெல்லாம் அன்றைய பெண்கள் ஒப்பனைக் கலையைப் பேணினார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன.
நான்முகனால் சீதையைத் தவிர கம்பன் கேட்டது போல் பல பெண்களைத் தரமுடியவில்லை. ஆனால் குழலூதும்பிள்ளை கோயில் சிற்பியால் சீதையை விட அழகு சிந்தும் பெண்கனிகளைப் படைக்க முடிந்திருக்கிறது. சிற்பியின் சிந்தையின் நிறைவை அப்பெண்கனிகளின் சிலைகளில் காணலாம்.
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
மேலே உள்ள சிற்பத்தின் கொண்டையையும், உச்சி முதல் பாதம்வரை உள்ள நகைகளையும் ஏன் அவள் அணிந்திருக்கும் ஆடையின் விளிம்பு மடிப்புச் சுருக்குகளையும் கழுத்து மாலையில் உள்ள பூக்களையும் இவ்வளவு நேர்தியாக சிற்பி செதுக்கி இருப்பது கலைக்காகவே வாழ்ந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
[ வீணையை முலைமேல் தாங்கல்: பண்டைத் தமிழர் நரம்பிசைக் கருவிகளை வாசிக்கும் போது வெப்பநிலை மாற்றத்தால் அவற்றின் சுருதி மாறாது இருக்க அவற்றை மார்போடு அணைத்து வாசித்தார்கள் என்னும் அறிவியல் கருத்தை சங்க இலக்கியம் காட்டுகிறது.]
No comments:
Post a Comment