Sunday, 24 November 2013

இருந்தும் பயனில்லை!

மனித வாழ்க்கை ஒவ்வொருவொருக்கும் ஒவ்வொரு வகையான பாடங்களை நாளும் நாளும் கற்பித்துக்கொண்டே இருக்கின்றது. அந்தப் பாடங்களை மனிதர்களாகிய நாம் நன்கு புரிந்து கொள்வதில்லை. சிலவேளைகளில் அவற்றை நாம் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் மீண்டும் மீண்டும் நம் வாழ்க்கையில் வரக்கூடும். அப்போதும் எமது அறியாமையினால் மட்டுமல்ல அளவு கடந்த அன்பால் அவற்றை நாம் பொருட்படுத்தாது இருப்போம். ஆனால் மனித வாழ்க்கையில் தாம் கற்ற பாடத்தை மிகத்தெட்டத் தெளிவாகப் பல சான்றோர் எழுதிவைத்துச் சென்றுள்ளனர்.
மனிதர் தம் பிள்ளைகளின் மேல் அளவு கடந்த அன்பைச் செலுத்துகின்றனர். அந்த அன்பின் காரணமாக அவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாததால் அவர்கள் வளர்ந்ததும் பெற்றோரை மதிப்பதில்லை. தாம் மட்டும் ஏதோ வானத்தில் இருந்து வந்தவர்கள் போல வயதான பெற்றோரைச் சுமையாக எண்ணிப் புறக்கணிப்பர். அந்தப் புறக்கணிப்பிலும் பல நிலைகள் இருக்கின்றன. இந்நாளில் mobile phone என்றும் facebook என்றும் email என்றும் skype என்றும் sms என்றும் எத்தனையோ வகையான செய்தித் தொடர்பு இணைப்புகள் எல்லோரிடமும் இருக்கின்றன. கண நேரத்தில் உலகம் முழுவதும் மனிதரோடு மனிதர் தொடர்பு கொள்ள முடியும்.

வயதான பெற்றோர் தமது பிள்ளைகளிடம் இருக்கும் அத்தனை செய்தித் தொடர்பு இணைப்பிலும் ஒரு குறித்த நேரத்துள் தொடர்பு கொண்டாலும் பிள்ளைகள் கண்டு கொள்வதில்லை. அற்றைக் கேட்கவோ பார்க்கவோ தமக்கு நேரமில்லை என்றோ. email பார்ப்பதில்லை என்றோ, sms பார்ப்பதில்லை என்றோ பதில் வரும். ஆனால் இருபத்திநாலு மணி நேரமும் அவற்றுடன் தான் வேலை செய்வர். பெற்றோரின் கண்முன்னே மற்றோரின் அழைப்புக்கு அக்கணமே பதில் கொடுக்கும் பிள்ளைகள் பெற்றோர் அழைப்பை அலட்சியம் செய்வர். அதுவும் பெற்றோர் தமது பிள்ளையை மிகவும் அறிவுள்ள பிள்ளை என்று பாசத்தைக் கொட்டி வளர்த்திருப்பர். அப்படி அறிவான குழந்தைகள் வளர்ந்ததும் பெற்றோர் விபத்துக்கு உள்ளாகி நின்று phone செய்தாலும் எடுக்காது அலட்சியம் செய்தால் அந்தப் பெற்றோரின் மனம் எத்தகைய வேதனையில் துடிதுடிக்கும் என்பதைச் சொல்ல வார்த்தைகளே எந்த மொழியிலும் கிடையாது. அப்படிப்பட்ட பிள்ளைகளை ஆபத்துக்கு உதவாப்பிள்ளை என்று சொல்வர்.

நம் முன்னோரும் ஆபத்துக்கு உதவாப்பிள்ளைகளைக் கண்டிருக்கின்றனர். மனிதரிடமிருந்தும் எதுவித பயனும் கொடாத ஏழு விடயங்களுள் முதலாவதாக ஆபத்துக்கு உதவாப்பிள்ளையைச் விவேகசிந்தாமணி சொல்கிறது.

“ஆபத்துக்கு உதவாப்பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத தீர்த்தம் பயனில்லை ஏழுந்தானே”               - (விவேக சிந்தாமணி)


1.  தன்னைப் பெற்ற தாய் தந்தையருக்கு ஆபத்தான நேரம் உதவாத பிள்ளை இருந்தும் பெற்றோருக்கு அப்பிள்ளையால் பயன்கிடைக்காது.

2.  அன்னம் என்பது இங்கு உணவைச் சுட்டி நிற்கிறது. மிகவும் சுவையாகச் சமைத்து வைத்த உணவை எல்லோருக்கும் கொடுத்த பின், மிக்கபசியுடன் சாப்பிட எடுக்கும் போது கீழே வீழ்ந்தாலோ, கெட்டுப் போயிருந்தாலோ அந்த உணவால் ஒருவித பயனும் கிடைக்கப்போவதில்லை. சிறு குடலைப் பெருங்குடல் விழுங்குவது போல பசியால் வயிறு காந்தும் போது அப்பசியைத் தீர்க்க முடியாத உணவால் என்ன பயன் கிடைக்கும்?

3.  கடலில் பயணம் செய்யும் போது நா வரண்டு தாகம் ஏற்பட்டால் சூழ உள்ள கடலின் நீரைக் குடிக்க முடியுமா? கைக்கெட்டிய தூரத்தில் தண்ணீர் இருந்தும் தாகத்தைப் போக்கமுடியாத அந்நீர் எதுவித  பயனையும் கொடுப்பதில்லை.

4. தரித்திரம் என்றால் வறுமை. தமது குடும்பத்தின் நிலைமையை  உணராது ஆடம்பரமாக வாழும் மனைவி இருந்தும் எதுவித நன்மையும் உண்டாகாது. [கணவனுக்கும் இது பொருந்தும். குடும்பத்தின் வரவுக்கு ஏற்றபடி செலவு செய்யத்தெரியாத பெண்களை தரித்திரம் அறியாப் பெண்டிர் எனக் குறிப்பிடுகிறார்.]

5. தமக்கு வரும் கோபத்தை அடக்கத் தெரியாத ஆட்சியாளர்களால் கொலைகளும் போர்களும் ஏற்படுகின்றன. ஆதலால் அத்தகைய ஆட்சியாளர்களின் கீழ் வாழ்தலால் எதுவித பயனுமில்லை.

6. தன்னைப் படிப்பித்த ஆசிரியர் கற்றுக்கொடுத்ததை நினைவில் வைத்திராத மாணவராலும் பயன் கிடைப்பதில்லை.

7. கோயிலில் இருக்கும் தீர்த்தக்குளத்தில் தாம் செய்த பாபம் போக மூழ்கி எழுந்தும் பாபம் தீராவிட்டால் அத்தீர்த்தத்தாலும் பயனில்லை. [தீர்த்தத்தின் சிறப்பால் பெயர் பெற்றது கீரிமலைத் தீர்த்தம். முற்காலத்தில் கீரிமலைத் தீர்த்தத்தில் மூழ்கிக் குளித்த மாருதப்புரவல்லி தன் குதிரைமுகம் நீங்கப் பெற்றாள் என்பது மாவிட்டபுரக் கோயில் வரலாறு. ஆனால் தமிழரைக் கொன்று குவித்த பாபம் தீரத் தீர்த்தம் ஆடுவோருக்கு  கீரிமலைத்தீர்த்தம் பாபத்தைத் தீர்த்ததா! பாபம் செய்வோரின் பாபங்களை கழுவிக்கழுவி எடுத்தெடுத்து இனிமேல் பாபங்களை கழுவி எடுக்கமுடியாத அளவு பாபங்களால் கீரிமலைத் தீர்த்தம் நிறை கரைசலாகிவிட்டது போலும்.] 

இந்த ஏழும் இருந்தும் பயன்படமாட்டாவாம்.

No comments:

Post a Comment