Monday, 28 October 2013

ஏழ்மையெலாம் எமக்காமோ!























பட்டாடை கட்டிக் கொண்டு
          பவனி வரும் மானுடரே!
வட்டாடும் குளத்தருகும்
          வயல் வெளியும் எம்சொந்தம்
கொட்டுமழை என்றாலும் கோமணமும்
          கட்டாமல் சகதி எங்கும்
சிட்டாக நாம் பறந்து
          செய்குறும்பு பாரீரோ!
கூட்டாக நாம் சேர்ந்து
          குலவி மகிழ் நிமிடமெலாம்
எட்டுணையும் அறியீரே!
          ஏழ்மையெலாம் எமக்காமோ!
                                                           - சிட்டு எழுதும் சீட்டு 75

சொல்விளக்கம்:
வட்டாடல் - பண்டைத் தமிழர் விளையாடிய விளையாடல்களில் ஒன்று. உருளைகளை, வளையங்களை உருட்டி விளையாடுதல். ஆதாரம் மணிமேகலை.
எட்டுணை - எள்ளளவு.

Sunday, 27 October 2013

மதுவும் வீரமும்


எமது நாக்கு இனிப்பு, புளிப்பு, உறைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என்ற அறுசுவைகளையும் உணரும். ஆனால் எமது உடம்போ நகைத்தல் [சிரித்தல்], அழுதல், இழிவரல் [அருவருப்பு], மருளுதல் [வியப்பு], அச்சம், பெருமிதம் [வீரம்], வெகுளி [கோபம்], உவகை [மகிழ்ச்சி], சாந்தம் ஆகிய ஒன்பது சுவைகளையும் காட்டும். ஆக மொத்தம் இந்த பதினைந்து சுவைகளுக்கும் மனிதர்களாகிய எம்மை ஆட்சி செய்கின்றன. நாம் அவற்றின் அடிமைகளாக இருக்கின்றோம். நாக்கு இல்லாவிட்டால் உடல் ஏது? ஆதலால் எந்தப் பெரிய வீரனாக இருந்தாலும் அவன் தன் நாவுக்கு அடிமையாகத் தானே இருக்க வேண்டும்!
இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் சங்ககாலத்தில் ஒரு பெரும் போர் நடந்தது. அப்போரில் வெற்றி பெற்றதால் அந்நாட்டு அரசன், போர் புரிந்த வீரர்களுக்கு எல்லாம் பாராட்டிப் பரிசு கொடுப்பதற்காக பெரிய விருந்து [பெருஞ்சோறு] அளிக்கின்றான். மனிதரைவிட இருமடங்கு, மும்மடங்கு உயரமான குடங்களில் மது வகைகளும், வண்டில் வண்டிலாக பழங்களும், அண்டா அண்டாவாக கறிவிறவு நெய்சோறும் அங்கே கொட்டிக் கிடந்தது. 

மது அருந்தும் நேரமும் வந்தது. மதுவைப் பறிமாறுவோர் அவற்றை ஒன்றோடு ஒன்று ஏற்றமுறையில் கலந்து மதுவின் சுவையைக் கூட்டினர். ஆனால் அந்த நேரத்துக்காகக் காத்திருந்த இளைஞர்களில் ஒருவன் பொறுமையை இழந்தான். எவ்வளவு நேரம் தான் மதுவகையைச் சேர்த்து குலுக்கி கலப்பது? போர் முனையில் மிகவும் சுறுசுறுப்பாகச் சுழன்று போர்புரிந்தவனுக்கு மது கலப்போரின் ஆமை வேகம் கோபத்தைத் தூண்டியது. உடனே தன் உடைவாளை எடுத்தான். மது கலப்போருக்கு அவ்விளைஞன் மேல் கோபம் வந்தது. அரசனுக்கு மதுகலந்து கொடுப்பவர்கள் அல்லவா? கோபம் வராமல் இருக்குமா? 

அந்த விருந்துக்கு விரிச்சியூர் நன்னாகனார் என்ற சங்ககாலப் புலவரும் வந்திருந்தார். அவரும்  மதுகலக்குவோரின் செய்கையைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கும் மதுகலக்குவோர் மேல் உள்ளூரக் கொஞ்சம் சினம் இருந்தது. ஆதலால் அவர்களைப் பார்த்து

“வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
யாம்தனக்கு உறுமுறை வளாவ, விலக்கி,
வாய்வாள் பற்றி நின்றனன் என்று
சினவல் ஓம்புமின் சிறுபுல்லாளர்
ஈண்டே போல வேண்டுவன் ஆயின்
என்முறை வருக என்னான் கம்மென
எழுதரு பெரும்படை விலக்கி
ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே”         - (புறம்: 292)

‘ஆண்மையில்லாதோரே[சிறுபுல்லாளர்]! அரசனுக்காக[வேந்தற்கு] எடுத்துக் கொடுத்த இனிய குளிர்ந்த மதுவை[நறவம்], ஏற்ற முறையில் வளாவித் [கலந்து], தருவதற்குள் பொறுமையில்லாது கோபித்து தனது உடைவாளைப்  பற்றி நிற்கிறான் என்று சினம் கொள்ளாதீர்கள். இங்கே நடந்தது போல [ஈண்டே போல - ஆண்மையுடன் தன் உடைவாளைப் பற்றிப் பிடித்தது போல], அவன் விரும்பினால் என்முறை வரட்டும் என்று காத்திராமல் விரைவாக[கம்மென] எழுந்து சென்று பெரும் படையை தடுத்து, வெற்றி பெற்று நிற்கும் ஆண்மையுடையவனே’ என்று எடுத்துக் கூறுகிறார்.

சிறுபுல்லாளர் என்று மது கலப்போரை விளித்து, அவர்கள் வீரம் அற்ற வீணர்கள் என்பதை எமக்குக் காட்டித்தந்துள்ளார். மதுவைச் சுவைபடக் கலக்கினால் அங்கு வீரம் விளையுமா என்ன? உடலின் சுவை வேறு. நாவின் சுவை வேறு. ஆனால் வீரச்சுவையைச் சுமந்து நின்ற ஆண்மையாளன் கூட நாவின் சுவைக்காக கோபச்சுவையுள் கட்டுண்டு கொதித்தெழுந்ததை இப்பாடல் காட்டுகிறது.

போர் நடைபெறும் இடங்களில் ஒருவரோடு ஒருவர் சினந்தால் போரின் அமைதி கெடும். ஆதலால் இப்படியான பிடிபாடுகளை தீர்த்து வைக்க  அறிவுள்ள புலவர்களை அரசர்கள் தம்மோடு அழைத்துச் சென்றனர். அந்த இளைஞனைப் பெரிய ஆண்மையாளனாக விரிச்சியூர் நன்னாகனார் சொன்னாலும் அவனுக்கு மதுச்சுவையின் மேலிருந்த மோகம், அவனது வீரத்தைக் கோபமாக வீழ்த்திவிட்டது என்பதே உண்மை. சங்ககால வீரனான இவனும் நாவின் சுவைக்கு அடிமையே!
இனிதே, 
தமிழரசி.

Friday, 25 October 2013

பரமனே போற்றினேனே!


கையகத்து மலர் தூவி
          காதலால் கசிந்துருகி
மெய்யகத்துப் புரை போக்கி
          மெய்யடியே உண்ணி
வையகத்தே வாழ்வாரை
           வான்புகழில் துய்க்கும்
பையகப்பாம்பு அரையாத்த
          பரமனே போற்றினேனே!

Thursday, 24 October 2013

ஆசைக்கவிதைகள் - 77

பட்டு செஞ்சி தந்தவரே!
(பெருக்கமரத்தில் நார் எடுத்தல் - Photo: source: Royal Pavilion, Museums & Libraries)

போத்துக்கீசரும், ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் நம் நாட்டிற்கு வருவதற்கு இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பட்டு உடுத்தித் திரிந்தார்கள். அவர்கள் தாழை, பெருக்கு போன்றவற்றின் நார்களில் இருந்து பட்டு நெய்திருக்கிறார்கள். அவற்றை இன்றும் தாழை நார்ப்பட்டு என்றும் பெருக்குப் பட்டு என்றும் அழைப்பதிலிருந்து அறியலாம். ஈழத்திலும் பெருக்கு மர நாரில் பட்டு நெய்து உடுத்ததை நெடுந்தீவின் நாட்டுப்பாடலாலும் மாந்தையின் நாட்டுப்பாடலாலும் அறியலாம். 

நெடுந்தீவுக் கன்னியொருத்திக்கு அவளின் காதலன் பெருக்கம் பட்டையில் நார் எடுத்து, பட்டு செய்து கொடுத்தான். அவள் அவனிடம் அந்தப் பட்டை, பொழுது சாய்ந்த கருக்கல் நேரம் வந்து தனக்கு கட்டிவிட்டு போகும்படி கேட்கிறாள்.

பெண்: பெருக்குப் பட்டையில
                      பட்டுசெஞ்சி தந்தவரே
             கருக்கலுக்கு வந்து
                      கட்டிவிட்டு போனாலென்ன  
                                                            -  நாட்டுப்பாடல் (நெடுந்தீவு)
                                                           - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

ஆனால் மாந்தையில் இருந்த ஒரு கன்னிப் பெண்ணைச் சுற்றிச்சுற்றி வாலிபன் ஒருவன் திரிந்தான். பெருக்குப் பட்டில் பட்டுச் சேலை செய்து அவளுக்குக் கொடுக்கப் பார்த்தான். கருக்கல் நேரம் வந்து கட்டிக் கொள் என்றான். கருக்கு மட்ட வண்டிகட்டிக்கொண்டு அவள் போகும் வயலுக்கும் வந்தான். அவனின் தொல்லை தாங்க இயலாமல் அவளைச் சுற்றித்திரியும் வாலிபனிடம் இப்படியெல்லாம் வந்தால் எருக்கம் பால்விட்டு கஞ்சி காய்ச்சி கொடுத்து அவனைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறாள்.

பெண்: பெருக்குப் பட்டெடுத்து பட்டுசெஞ்சி தந்தாலு
            கருக்கலுக்கு வந்துநின்னு கட்டிகிடு என்னாலு
            கருக்குமட்ட வண்டிகட்டி கழனியடி வந்தாலு
             எருக்குபாலு கஞ்சிசெஞ்சி எட்டிநின்னு தந்திடுவே
                                                                   -  நாட்டுப்பாடல் (மாந்தை)
                                                                   - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

இந்த நாட்டுப் பாடல்கள் இரண்டும் பெருக்குப் பட்டில் செய்த பட்டை, பெண்கள் கருக்கல் நேரத்தில் [பகல் முடிந்து மாலை தொடங்கும் நேரத்தில்] உடுத்தார்கள் என்ற செய்தியை மிகத்தெளிவாகச் சொல்கின்றன. வண்டியில் கருக்கு மட்டை கட்டியிருந்த செய்தியையும் மாந்தை நாட்டுப்பாடல் அறியத்தருதிறது.

Wednesday, 23 October 2013

குறள் அமுது - (78)


குறள்:
“கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுஉடையது இல்”                        - 1021                               

பொருள்:
ஒரு செயலைச் செய்யும் ஒருவன், அதனைச் செய்து முடிக்காமல் நிறுத்தமாட்டேன் என்று முயன்று செய்வதைப் போன்ற பெருமையில் சிறந்த பெருமை வேறில்லை.

விளக்கம்:
திருவள்ளுவர் இத்திருக்குறளை குடிசெயல்வகை என்னும் அதிகாரத்தில்  சொல்கிறார். குடி என்பது இனத்தைச் சுட்டி நிற்கிறது. தான் பிறந்த இனத்தை முன்னேறச்செய்யும் வழிவகைகளை செய்வதே குடிசெயல் வகையாகும். 

தன்குடி மாற்றானுக்கு அடிமைப்பட்டு மாண்டு போகாது காக்கவேண்டும் என நினைப்பவன், எந்த இடையூறு வந்தாலும் அவற்றை எல்லாம் தாங்கி, பதவிக்கும் பணத்துக்கும் மயங்காது தனது குடியை முன்னேற்றும் முயற்சியை கைவிடமாட்டேன் என்ற மனவுறுதியோடு செயல்படுவதைவிடச் சிறந்த பெருமை வேறு இல்லையாம்.

தமிழனாய்ப் பிறந்த திருவள்ளுவர் தமிழ்க்குடி பெருமையுடன் வாழ அரிய பெரிய கருத்துக்களை திருக்குறளில் பல இடங்களில் கூறியிருக்கிறார். அவற்றுள் ஒன்று 

“செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை”                                         - 485  

இறுவரை என்பது அழிவுகாலத்தைக் குறிக்கும். தம்மிலும் வலிமை மிக்க பகைவரைக் கண்டால் பகைமை எண்ணம் நீங்கும் படி அவர்களை தோளிலிலோ தலையிலோ வைத்து சுமக்க வேண்டுமாம். அதாவது பணிவாக நடக்கவும். அவர்களுடன் நெருங்கிப் பழகுவதால் பகைமையை நன்கு அறிய அது உதவும். அப்பகைவருக்கு அழிவுகாலம் வரும்போது நிலைமை தலைகீழாக மாறும் என்கிறார். எமக்கு ஏற்ற காலம் வரும்வரை பகைமையை வெளிப்படுத்தாது காத்திருக்கச் சொல்கிறார்.

இக்குறளுக்கு ஏற்ப பணிவாக நடப்பதாகக் காட்ட, 1987ம் ஆண்டு ஆயுதங்களை இந்திய அமைதிப்படையினரிடம் ஒப்படைத்த போதும், தான் எடுத்துக்கொண்ட செயலை நிறுத்தமாட்டேன் என்பதை ‘போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது இலட்சியம் மாறப்போவதில்லை’ எனப் பலரும் அறிய அறிவிக்கப்பட்டதே, சுதுமலைப் பிரகடனமாகும். 

அதிலும் வெறுங்கையுடன் நின்றாலும், எமது இலட்சியம் மாறாது என்பதை தெட்டத்தெளிவாக இந்திய வல்லரசிற்கு, அமைதிப் படையினரைப் பார்த்துச் சொல்லியதால் சுதுமலைப் பிரகடனம் வரலாற்று முக்கியம் உடையதென அரசியல் ஆய்வாளர்கள்  கருதுகின்றனர். சின்னஞ் சிறிய இலங்கைத் தீவில் தன்மானமுடைய தமிழினமும் வாழ்கிறது, அது தமிழீழம் என்னும் உயர்ந்த இலட்சியத்துடன் வாழ்கிறது என்பதை உலகுக்குப் பறைசாற்றிய நாளும் அதுவேயாகும். 

என்குடியை உயர்த்தாமல் நான் ஓயமாட்டேன் எனத் தொடர்ந்து செய்யும் பெருமையிலும் சிறந்த பெருமை உலகில் வேறு இல்லை எனக்கூறும் குறள் இது.

Monday, 21 October 2013

பக்திச்சிமிழ் - 68


மையினாற் கண் எழுதி...
- சாலினி -

உலகஇயற்கை கற்றுக் கொடுத்த பாடங்களால் மனிதன் தன் வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து கொண்டான். உலக இயற்கையை இயக்கும் சக்தி, தனது நிலையில்லா வாழ்க்கையை, அழியாது நிலைத்து நிற்கவைக்கும் என நம்பினான். அவனின் நம்பிக்கையே கடவுள் கொள்கைக்கு வித்திட்டது. பிறந்தவர் யாவரும் இறப்பது திண்ணம். ஆதலால் இறப்பைத் தாம் தழுவும் முன்னம் தம்மை எல்லாம் இயக்கும் அந்தப் பழம் பெரும் சக்தியைக் காணும் வழியைத் தேடினான். அவன் தேடிய வழியை பிறருக்கும் எடுத்துச் சொன்னான். இறப்பு எம்மைத் தழுவும் முன் ‘பழம் பெரும் சக்தியை நினை’ என்றான். அப்படிச் சொன்ன சான்றோர்களை நாம் அருளாளர்கள் என்று சொல்கிறோம். தான் கண்டு சுவைத்த அருட்சுவையை உலகுக்கு முதன்முதல் எடுத்துச் சொல்லி வழிகாட்டியவர் காரைக்கால் அம்மையாரே!
அதனாற்றான் என்னவோ சிவனும் ‘அம்மையே!’ என அழைத்து மகிழ்ந்தார் போலும்.  

“உத்தமராய் வாழ்வார் உலந்தாக்கால் உற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமுன் - உத்தமனாம்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தந்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து”                    - (திருஇரட்டைமணிமாலை - 20)

கடல்போல ஆழமான நெஞ்சே! நல்லவர்களாக வாழ்பவர்கள் இறந்து போனால் கூட உறவினர்கள் காய்ந்த மரத்தை அடுக்கிச் சுடுவர். அப்படி சுடுபட முன்னர் நீண்ட கடலின் நஞ்சை உண்டு, பாற்கடலின் நெய்யில் குளித்த உத்தமனாம் இறைவனின் திறமைகளை எழுச்சியுடன் கேட்பாய்! என்கிறார்.

திருநாவுக்கரசு நாயனாரும்
“ஐயினால் மிடறடைப்புண்டு ஆக்கை விட்டு
          ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி
          மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும்
ஐயனார்க்கு ஆளாகி அன்பு மிக்கு
          அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்
கையினால் தொழுமடியார் நெஞ்சின் உள்ளே
          கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே”

கோழையால் [ஐ - சளி] தொண்டை அடைப்பு ஏற்பட்டு, உடலைவிட்டு உயிர் போனதும் வீட்டில் உள்ளோர் சேர்ந்து, மை கொண்டு கண்ணை [கோயிற் சிலைகளுக்கு அருள்பொழியும் கண் வரைதல் போல] வரைந்து, மாலை போட்டு மயானத்தில் இடமுன்னர், பிறைசூடும் பரமனுக்கு ஆளாகி, அன்பால் உள்ளம் நெகிழ்ந்து, மெய் சிலிர்த்து இறைவனின் திருவடியைத் தொழும் அடியவர் நெஞ்சினுள்ளே இறைவனைக் காணலாம் என்கிறார்.

இன்றைய தமிழர்களாகிய நாம் ஒருவர் இறந்தால் அவரின் கண்களை மூடிவிடுகிறோம். கண்மூடி இருக்கும் போது சிலர் தூங்குவது போல் இருப்பார்கள். ஆனால் எல்லோரும் அப்படியிருப்பதில்லை. அது அவரவர் பெற்று வந்த வரம். அதனால் நம் முன்னோர்கள் ஒருவர் இறந்ததும் அவரை உயிருடன் இருப்பது போல் காட்டுவதற்காக மை கொண்டு கண்ணிருப்பது போல வரைந்திருக்கிறர்கள். திருநாவுக்கரசர் நாயனார் வாழ்ந்த காலத்தில் அந்த வழக்கம் இருந்ததை இத்தேவாரம் எடுத்துக் கூறுகிறது. அந்தப் பழக்கம் மாற்றார் படையெடுப்பால் அழிந்தது போலும். ஆனால் இன்றும் மாலை சூட்டுகின்றோம். மையினால் கண் எழுதாவிட்டாலும் மாலை சூட்டி மயானத்தில் இடமுன் மதிசூடும் பெம்மானை நம் சிந்தையில் சூடுவோம்.

Sunday, 20 October 2013

அடிசில் 68

பேரீச்சம்பழ பால்
- நீரா -

தேவையான பொருட்கள்:
பேரீச்சம் பழம் - 10 - 12
பால் - 1½ கப்
கட்டித் தயிர் - ½ கப்
சீனி - 1 தேக்கரண்டி

செய்முறை:
1. பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பேரீச்சம் பழத்தை எடுக்கவும். 
2. அந்தப் பேரீச்சம் பழத்துடன் மேலே கொடுக்கப்பட்ட மற்றப்பொருட்களையும் லிக்குடைசரில் (liquidiser) போட்டு அடித்து எடுக்கவும்.


குறிப்பு:
பேரீச்சம் பழத்தில் கல்சியம், இரும்பு, நார்ச்சத்து போன்றவை இருப்பதால் இரத்தச் சோகை, மலச்சிக்கல் போன்றவற்றை நீக்கும். கருவுற்ற பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் சிறந்த ஊட்டச்சத்தைக் கொடுக்கும்.

Saturday, 19 October 2013

தித்தித்த தாது எது?



அதிகாலை நேரம் காளமேகப்புலவர் ஓர் அழகிய பூந்தோட்டத்தினூடாக நடந்து சென்றார். பூக்களில் தேன் உண்ணும் வரிவண்டொன்றும் அவர் செல்லும் வழியில் இருந்த மலர்களில் பறந்து பறந்து தேன் முகர்ந்து சென்றது. அதனைப் பார்த்து இரசித்த காளமேகப் புலவர் பறந்து பறந்து மலர்களின் தேன் உண்ட வரிவண்டிடம் கேள்வி கேட்டார். அவர் புலவராதலால் கேள்வியும் பாடலாகவே வந்தது.
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது                     

என்ன பாடலைவாசிக்கும் போது நாக்கு சுளுக்குதா? மதுவுண்ட போதையில் ரீங்காரமிடும் வண்டிடம் கேள்வி கேட்பதானால் அக்கேள்வியும் ஒருவகை ரீங்காரம் போல் இருந்தால் தானே வரிவண்டுக்கு விளங்கும். எனவே வரிவண்டின் மொழியில் காளமேகப்புலவர் கேள்வி கேட்டிருப்பார் என்று நினைக்க வேண்டாம். அது தமிழ் நாட்டு வரிவண்டல்லவா! அதற்கு தமிழ் நன்கு விளங்கும். ஆதலால் தமிழிலேயே கேள்வி கேட்டிருக்கிறார். பாடலைக் கொஞ்சம் பிரித்துப் பார்ப்போம்.


தத்தி தாது ஊதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைத் அத்தாது ஊதிதி
தித்தித்த தித்தித்த தாது எது தித்தித்தது 
எத்தாதோ தித்தித்த தாது?

வண்டே! தாவிச்சென்று [தத்தி] மகரந்தத்தை [தாது] ஊதி, மகரந்தத்தை ஊதிய பின்னர் [தாதூதித்] திரும்பவும் தத்திப் போகிறாய் [தத்துதி], துத்தி என்று ரீங்காரம் செய்தபடி [துத்தி] இன்னொரு பூவிற்குச் செல்கிறாய் [துதைதி] அந்தப்பூவை நெருங்கி [துதைத்து] அதன் மகரந்தத்தை [அத்தாது] உண்கிறாய் [ஊதி], உனக்குத் தித்திக்கத் தித்திக்க இனிமையாய் [தித்தித்த தித்தித்த] இருந்த பூ [தாது] எது? நீ சுவைத்த தாதுக்களில் [தித்தித்த தாது]  இனிமையைத் தந்தது [தித்தித்தது] எந்தப்பூந்தாதோ? [எத்தாதோ]

என்று பழகு தமிழில் காளமேகப்புலவர் வரிவண்டிடம் கேள்வி கேட்டார். அதற்கு அது என்ன பதில் சொல்லியிருக்கும்?

குறிப்பு:
காளமேகப் புலவரை தமிழின் ‘த’கரவரிசையை மட்டும் வைத்துப் பாட்டு எழுதும்படி கேட்டதற்கு அவர் இப்பாடலை எழுதியதாகாக் கூறுவாரும் உளர்.
இனிதே,
தமிழரசி.

Friday, 18 October 2013

கனவிலும் நினைக்கலாமா?



பண்டைய தமிழகம் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, தொண்டைநாடு, கொங்கு நாடு என ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இன்றைய நிலையில் கொங்கு நாடு - கோவை, நீலகிரி, சேலம், திண்டுக்கல், பெரியார், தர்மபுரி போன்ற மாவட்டங்களின் சில பல பகுதிகளைக் கொண்டதாக இருக்கிறது. அந்த கொங்கு நாட்டைச் சேர்ந்த உமேஷ் மருதாசலம் என்பவர் “மழைப்பொழிவு எங்கள் கொங்குநாட்டில் இல்லை” என்ற தலைப்பில் பாடியிருந்த ‘நொய்யல் ஒப்பாரியை’ தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அதைப்படித்த போது என் மனதில் கம்பனின் ஞாபகம் வந்தது. உமேஷைப் போல கம்பரும் மனம் வெதும்பி ஒப்பாரி வைத்துள்ளார். அந்த ஒப்பாரியோ ‘கொங்கு நாட்டை நினைத்துப் பாராதே’ என்கிறது. 

அரசாங்கம் இயற்கையைப் பாதுகாக்காது புறக்கணிப்பதால், நொய்யல் ஆற்றின் இன்றைய நிலையை  உமேஷ் ஒப்பாரிவைத்துள்ளார். அந்த ஒப்பாரியைப் பார்க்க விரும்புபவர்கள் இந்த வலைத்தளத்தில் சென்று பாருங்கள்.

கம்பர் சேரநாட்டுக்கு போகும் வழியில் கொங்கு நாட்டிற்குச் சென்றார். நடந்து, களைத்து தண்ணீர்த் தாகத்துடன் சென்றவருக்கு ஒரு வாய் தண்ணீர் குடிக்க முடியவில்லை. தண்ணீர் எல்லாம் சேற்று நாற்றம் வீசியது. நல்ல தண்ணீர் தேடி நடக்கவும் முடியவில்லை. நிலம் எல்லாமே கல்லும் முள்ளுமாக இருந்தது. ஊரெல்லாம் மாட்டுப்பட்டியும், அவற்றுக்கு உணவு போடும் தொட்டியுமாகக் காட்சி கொடுத்தது. அங்கு இருந்தவர்கள் கம்பஞ் சோற்றையே உண்டனர். அவர்களது பெயர்களும் பொம்மன், திம்மன் என இருந்தன. அங்கு இருந்த பெண்களும் நாயும் பேயும் போல் இருந்தனர். கம்பராமாயணத்தில் அவர் பாடிய 
“பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பலல்வமனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென”
அவர்கள் இருக்கவில்லைப் போலும்.

நடந்து களைத்து பசியோடு சென்றவருக்கு நல்ல உணவும், தண்ணீரும் கிடைக்கவில்லை. பெண்களும் நாய் போல் வள்ளெனப் பாய்ந்தனர் போலும். அந்த ஆற்றாமையால் 

“நீர்எலாஞ் சேற்று நாற்றம்
          நிலம்எலாம் கல்லும் முள்ளும்
ஊர்எலாம் பட்டி தொட்டி
          உண்பதோ கம்பஞ் சோறு
பேர் எலாம் பொம்மன் திம்மன்
          பெண்களோ நாயும் பேயும்
கார் உலாம் கொங்கு நாட்டை
          கனவிலும் நினைக்கொ ணாதே”

என மழை மேகம் உலாவருகின்ற கொங்கு நாட்டை கனவிலும் நினைக்க இயலாது என்றார். உலா வரும் மழை மேகமும் மழையைப் பொழியாது என்பதையும் தொட்டுக் காட்டியுள்ளார். கம்பர் எவ்வளவு துன்பப்பட்டிருந்தால் இப்படி ஒப்பாரி பாடியிருப்பார்?
இனிதே, 
தமிழரசி.

Wednesday, 16 October 2013

கந்தக் கருணைப் பெருநிதியே!


மெய்யடியே என்றும் நினைத்திலேன்
          மேன்மை தரும் உன்நாமம்
பொய்யேனும் கருத்திற் கருதிலேன்
          போகமே பெரிதென் றெண்ணி
உய்யும்வகை சற்றும் உணராது
          ஊழ்வினையால் உகப்பேனை
கைதான் தந்து காத்தருள்
          கந்தக் கருணைப் பெருநிதியே!

Monday, 14 October 2013

கற்பகத்தே சுமந்ததன்றோ!















ஒட்டியுறவாட வந்த சொந்தம்
          ஓடி ஒளிந்துவிட நித்தம்
பட்டினியைப் போக்கி நல்
          படிப்பினை ஊட்டுதற்கே
வெட்டியாள் வேலை செய்தும்
          வேகும் வெய்யில் நின்றுழன்றும்
கட்டிநான் காக்கும் உயிரென்
          கற்பகத்தே சுமந்ததன்றோ! 
                                                             - சிட்டு எழுதும் சீட்டு 73

Saturday, 12 October 2013

படுத்துறங்கும் மச்சானாரே!



பண்டைத் தமிழர் கடற்கரையோர பெருநகரங்களை பட்டினம் என அழைத்தனர். அதற்கமைய மாந்தைப் பட்டினம் என அழைக்கப்பட்ட பெருமையை உடையதாக மாந்தைமாநகரம் இருந்தது. அதன் துறைமுகத்திலே நங்கூரம் இடப்பட்டு நின்ற ஒரு பாய்மரக்கப்பலில் வாலிபன் ஒருவன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் பாய்மரக் கப்பலில் படுத்து உறங்குவதை இளம் பெண்ணொருத்தி கண்டாள். அவனது உறக்கத்தைப் போக்க நாட்டுப்பாடல் பாடிச் சீண்டுகிறாள். 

பெண்: பட்டனத்துக் காத்து
                       படபடத்து அடிக்கையில
             பாய் மரக் கப்பலிலே
                       படுத்து உறங்கும் மச்சானாரே
             காத்தாட நான் வரட்டோ
                       கதை கதையாச் சொல்லிடட்டோ
                                   -  நாட்டுப்பாடல் (மாந்தை)
                                         (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

கடற்காற்றுக்கு அவன் துங்குவதை பட்டனத்துக் காத்து படபட என்று வீசுவதால் அவன் தூங்குகிறான் என்கிறாள். பாருங்கள் கடற்கரையில் வீசும் கடற்காற்றுக்கு, ஓர் அழகிய தமிழ்பெயரைச் சூட்டி ‘பட்டனத்துக் காத்து’ என்று அழைக்கிறாள். அந்த பட்டினத்துக் காற்றை அவனோடு இருந்து நுகர ஆசைகொண்டு ‘காத்தாட நான் வாரட்டா?’ எனக் கேட்கிறாள். அதற்கு அவன் உடன்பட்டால் அவள் கதை கதையாகச் சொல்வாளாம். அவளது கேள்விக்கு அவன் என்ன பதில் சொன்னானோ தெரியவில்லை. ஆனால் எமக்கு 'பட்டனத்துக் காத்து' என்று ஓர் அரிய பெயர்ச்சொல் கிடைத்திருக்கிறது.
இனிதே,
தமிழரசி.