Friday 9 December 2011

மயக்கு குழலோசை!



காதலன் ஒருவன் ஈழத்தில் மாந்தையின் காட்டில் தன் காதலி வருவாள் எனக் காத்து நிற்கின்றான்.  அவள் வரவில்லை. தான் காட்டில் நிற்பதை காயாம்பூப் போன்ற கருநீலனிறமுடைய காதலிக்கு தெரியப்படுத்த நினைத்தான்.  குழலோசைக் கேட்டு தன்னிடம் வருவாள் என எண்ணி கண்ணக் குழலை ஊதுகிறான்.  [கண்ணக் குழல் - துளைகள் உள்ள புல்லாங்குழல்]. அவள் வரவேயில்லை. காதலி வருவாள் வருவாள் என எவ்வளவு நேரம் தான் அவனும் குழலை இசைப்பது? அதனால் அவளுக்கு காது செவிடாய் போய்விட்டது என சலிப்புடன் கூறுகிறான்.

ஆண்:  காட்டிலே நின்றுகொண்டு
                     கண்ண குழலூதையிலே
            காயாம்பூ மங்கையர்க்கு
                      காது செவிடாமோ 

அவளும் காதலனின் குழலிசையைக் கேட்கிறாள். வீட்டிலோ அவனிடம் போகமுடியாத சூழ்நிலை. அவனின் குழலோசையில் மயங்கியே அவள் அவனைக் காதலித்தாள். ஆதலால் மாலைப்பொழுதும் குழலிசையும் அவளை வாட்டி வதைப்பதாகக் கூறுகிறாள்.  

பெண்:  மாலை மதியமதில்
                      மயக்கு குழலோசை
             வாலைக்குமரி என்னை
                      வாட்டி வதைக்குதடி
                                     - நாட்டுப்பாடல் (மாந்தை)
                                            -(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

இந்த நாட்டுப்பாடலைப் பாடிய மாந்தை மங்கையை மாலைபொழுதும் குழலிசையும் வாட்டிவதைப்பது போலவே சங்ககாலக் காதலி ஒருத்திக்கும் மாலைப் பொழுதும் குழலோசையும் வாட்டிவதைப்பது வேலால் குத்துவது போல் இருக்குதாம்.

சங்ககாலப்பெண்:  
"தேரோன் மலைமறைந்த செக்கர் கொள் புன்மாலை
ஆவின்பின் ஆயன் உவந்தூதும் - சீர்சால்
சிறுகுழல் ஓசை செறிதொடி வேல்கொண்டு
எறிவது போலும் எனக்கு                               
                                           -(ஐந்திணை ஐம்பது)

'நெருங்கிய வளைகள் அணிந்த தோழியே! தேரில் செல்லும் சூரியன்  மலையின் பின்னால் மறைய செந்நிறமாக இருக்கும் முன் மாலைப் பொழுதில் பசுக்களுக்குப் பின்னே செல்லும் இடையன் மகிழ்வோடு ஊதுகின்ற சீரான சிறுகுழலின் ஓசை என்னை வேல் கொண்டு குத்துவது போல இருக்கிறது', எனத் தோழிக்குக் கூறுகிறாள். சங்க காலத்திலும் சரி இப்போதும் சரி காதலர் மனநிலை மாறவே இல்லை.

மானுடவாழ்வில் காலம் பல்லாயிரம் ஆண்டு கழிந்து ஓடினாலும் காதல் ஒரு இனிமையான தொடர்கதையே.
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்
காயாம்பூ  -  கருநீலநிறப்பூ
தேரோன்  -  சூரியன் (ஏழு நிறங்களாகிய குதிரைகள் பூட்டிய தேரில் செல்பவன்)
செக்கர்  -  சிவந்த
புன்மாலை  -  முன்மாலைப் பொழுது
ஆவின்பின்  - பசுக்களின் பின்னே
ஆயன்  -  இடையன்
உவந்தூதும்  - மகிழ்ந்து ஊதும்
சீர்சால்  -  அழகுபொருந்திய
செறிதொடி  -  நெருக்கமான வளையல் அணிந்தவள் 

No comments:

Post a Comment