Monday, 19 December 2011

இயங்குவோருக்கு இறைவன்

பக்திச்சிமிழ் [9]
(இயக்கன், இயக்கி; Yaksha & Yakshi)
இருக்கு வேதகாலம் கி மு 1200 என்பது வரலாற்றாய்வாளர் முடிவாகும். இருக்கு வேத காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே இலங்கையில் நாகர்களும், இயக்கர்களும் வாழ்ந்தார்கள் என்பதை இருக்குவேதத்தால் அறியலாம். இயக்கர்கள் என்று அழைக்கப்படும் மனிதர்கள் யார்? அவர்களை இயக்கர்கள் என அழைத்ததற்கான காரணம் என்ன? என்ற எனது தேடலுக்கு கிடைத்த விடையை உங்களூடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இயங்குவது என்பது அசைதலை குறிக்கும். மரம் காற்றால் அசைவதும் இயக்கமே. ஒரு பொருள் தானிருந்த நிலையிலிருந்து அசைவதை  இயக்கம் என்றும் இயங்குகை என்றும் சொல்வர். பெரும்பாலான விலங்குகள் நிலத்திலும், பறவைகள் வானிலும், நீர்வாழ் உயிரினங்கள் நீரிலும் இயங்கித் திரிகின்றன. இன்றைய மனிதராகிய நாம் வானிலும், நீரிலும், நிலத்திலும் வாகனங்களில் இயங்கித் திரிகிறோம். அதுபோல் அன்றைய மனிதரும் வான், நீர், நிலம் என இயங்கித் திரிந்தனர். அப்படி இயங்கித் திரிந்தோரை இயக்கர் என அழைத்தனர்.

திருஞானசம்பந்தர் தமது தேவாரத்தில்
"மயங்கு மாயம் வல்லராகி
           வானினொடு நீரும்
இயங்குவோருக்கு இறைவனா
           இராவணன் தோள் நெரித்த
புயங்கரா மாநடத்தன்..."                    (ப.திருமுறை: 1: 53: 7)
எனப் பிறரால் விரும்பப்படும் புதியனவற்றை [மயங்கு மாயம்] உண்டாக்கும்  வல்லமை உடையவராய் வானிலும் நீரிலும் இயங்கித் திரிவோருக்கு அரசனான[இறைவனாகிய] இராவணனின் தோளை நெரித்த ஆனந்தக்கூத்தன் என்று சிவனை வணங்குகிறார். இறைவன் என்று கடவுளை மட்டுமல்ல அரசனையும் சொல்வர். மனிதரால் விரும்பப்படக் கூடியதாக, இயற்கையாக இல்லாத ஒன்றை உருவாக்குதலும் மாயம் ஆகும். எமக்கு முன்னே இல்லததொன்றைக் காட்டுவோரை மாயவித்தை[Magic] காட்டுவோர் என்கிறோம் அல்லவா! அதுவும் மயங்கு மாயம் தானே! இயற்கையில் கிடைக்காத விமானம், கப்பல் போன்ற மாயப் பொருட்களை உருவாக்கி வானிலும், நீரிலும் இயக்கர்கள் இயங்கித் திரிந்தனர். நாம் பாவிக்கும் Radio, TV, iphone யாவும் மயங்கு மாயப் பொருட்களே.  இத்தேவாரம் இயக்கர் என்ற சொல்லிற்கு வரைவிலக்கணத்தைத் தருகிறது. இராவணன் முதலானோர் வானிலும் நீரிலும் இயங்கியதால் அவர்கள் இயக்கர் என அழைக்கப்பட்டனர்.


இயக்கி - அம்பிகை (Photo source: Jaina Art and Iconography)


























ஆனால் இலங்கையின் வரலாற்றில் இயக்கரும் நாகரும் வாழ்ந்தனர் எனக்கூறும் வரலாற்றாசிரியர்கள் இயக்கரை மனிதர் அல்லாதவர் என்றும் லாலா மொழிபேசும் வேடர் என்றும் எழுதுகின்றனர். இயக்கர் என்பதற்கு அவர்கள் கூறும் விளக்கம் சரியா? என்பதை நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். ஆதலால் திருஞானசம்பந்தர் கூறிய வானினொடு நீரும் இயங்குவோரே இயக்கர் எனக்கொள்ளலே சரியானது. புட்பகவிமானத்தை செய்த மயன் எழுதியதாகக் கூறப்படும் நூல்களில் மரக்கலச் செந்நூல், வானியல் செந்நூல் என்பனவும் அடங்கும். ஆதலால் சம்பந்தர் கூறியது போல் இலங்கையில் வாழ்ந்த இயக்கரும் நாகரும் வானிலும் நீரிலும் இயங்கித் திரிந்திருப்பர்.

அநுராதபுர வரலாற்றின் மின்னல் கீற்று:
இராவணனின் தந்தையான விசுரவசுமுனிவரின் தந்தை புலத்தியமுனிவர். அவரின் புலத்தியபுரநகர் இலங்கையில் இருந்தது என இருக்குவேதம் (3: 53: 6) இறந்தகாலத்தில் சொல்கிறது. எனவே புலத்தியமுனிவர் இருக்குவேத காலத்திற்கு முன்பு இலங்கையில் வாழ்ந்தவர் ஆவார். இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம் போலவே C M Enriquez, T W Rhys Davids போன்ற வரலாற்று அறிஞரும் புலத்தியபுரத்தை இன்றைய பொலநறுவையாகச் சொல்வார். T W Rhys Davids, 1877ல் தாமெழுதிய On the Ancient Coins and Measures of Ceylon என்ற நூலில் புலத்தியநகரில் கண்டெடுக்கப்பட்ட பழையகாசுகள் பற்றியும் கூறுகிறார். புலத்தியபுரம் (பொலநறுவை) பண்டையதலைநகராக இருந்த காலத்தில் திருகோணமலை, அநுராதபுரம், சிகிரியா உள்ளிட்ட தென்கிழக்கு இலங்கை முழுவதும் 'அளகை' என அழைக்கப்பட்டது. அதனை திருஞானசம்பந்தரின் இன்னொரு தேவாரம்

"மதில் அளகைக்கு இறைமுரல மலரடி யொன்று
          ஊன்றி மறை பாட ஆங்கே
முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான்"
எனக்காட்டும். 
சிவன், மதிலுள்ள இலங்கைக்கு [அளகைக்கு] அரசனான இராவணன் கதறும்படி [முரல-ஒலிக்க] மலரடியால் நெரித்து சாமகீதம் பாடியதும் பிரகாசமான நீண்டவாளைக் கொடுத்தாராம்.
விசுரவசுமுனிவர் ஆலயம் [இசுருமுனிய, அநுராதபுரம்]

அன்றைய அளகையில் இராவணன் தன் தாய் தந்தையர்க்கு ஒரு நினைவாலயத்தை கட்டினான். அது அவனது தந்தையின் பெயரால் விசுரவசுமுனிவர் ஆலயம் என அழைக்கப்பட்டது. அநுராதபுரத்திலுள்ள அந்த ஆலயம் இன்றும் இசுருமுனிய ஆலயம் (விசுரமுனிவர்)  எனவும், இயக்ச (யக்ச) ஆலயம் எனவும் கூறப்படுகிறது. இயக்கர் வழிபாடு பண்டைய தமிழரிடம் காணப்பட்ட வழிபாடாகும். யாழ்ப்பாணத்து பெருமாள்கோயில் இயக்கன் கோயிலாகவும், வீரகாளியம்மன் கோயில் இயக்கி கோயிலாகவும் முந்நாளில் இருந்ததாகக் கூறுவர். 

தமிழ்நாட்டில் பல இடங்களில் இன்றும்  இசக்கிவழிபாடு என்ற பேரில் சிறுதெய்வ வழிபாடாக இயக்கி வழிபாடு நடைபெறுகின்றது. அன்றைய இயக்கனும் இயக்கியுமே இன்றைய சிவனும் சக்தியும் ஆக மாறியுள்ளதை மேலே உள்ள படங்கள் மிகத்தெளிவாகக் காட்டுகின்றன. இனிமேலாவது இயக்கர் - மனிதர் அல்லாதவர் என்ற தப்பான எண்ணத்தை கைவிட்டு உண்மையான தமிழின் கருத்தை எடுத்துச் சொல்வோமா?

இனிதே,
தமிழரசி.


No comments:

Post a Comment