Saturday 3 December 2011

தசமுகன் பரவும் நாமம் உடையார்

தசமுகன் [இராவணன் - திருக்கோணேஸ்வரம்]

இசையால் இறைவனை இசைவித்தவன் இராவணன். அதாவது இசைபாடி இறைவனையே தன் பக்தி வலைக்குள் சிக்கவைத்தவன். எப்படி அவனால் இறைவனை தன் வசப்படுத்த முடிந்தது? நாம் ஒன்றில் தேர்ச்சி பெறவேண்டும் என்றால் நாம் அதனைப் பயில (கற்க) வேண்டும். பயிலுதல் என்றால் சொல்லுதல் என்ற கருத்தையும் தரும். இறைவனை தன் பக்தி வலைக்குள் சிக்க வைப்பதற்காக இராவணன் இறைவனின் தன்மையை, இறைவனின் செயலை ஆராய்ந்து அறிந்து, இறை என்ற சொல்லை பயின்றானாம். இராவணன் முழுமூச்சாகப் இறைவனைப் பயின்றதை திருஞானசம்பந்தக் குழந்தை

"இறை பயிலும் இராவணன்"                -(பன்.திருமுறை:3: 66: 8)
என தாம் பார்த்ததை எமக்கும் காட்டுகிறது.

இராவணன் செய்த சிவயோகமே அவனின் தவவலிமைக்கு காரணமாயிற்று. சிவயோகம் என்பது எந்நேரமும் சிவனின் எண்ணமாகவே இருத்தல். பெயர் இல்லாத ஒன்றை நினைப்பதைவிட அதற்கு ஒரு பெயர் வைத்து, நினைப்பது மிக இலகுவானது. ஒரு குழந்தை பிறந்தால் அந்தக்குழந்தைக்கு நாம் பெயர் வைத்து அழைப்போம் அல்லவா? அது போல் நாம் வணங்கும் பேரில்லாப் பெம்மானுக்கு பெயரிட்டவன் இராவணன்.

இசைக்கலையில் வல்லவனான இராவணன் இறைவனுக்கு பெயர் சூட்டுவதற்காகப் பாடினான். சாமவேதகீதம் பாடினான். அவன் பாடியது இன்றைய சாமவேதமல்ல ஏனெனில் அவன் வாழ்ந்ததாகக் கூறப்படும் காலம் வேதகாலத்திற்கு முந்தியது. தசமுகனான இராவணன், சாமவேதகீதம் பாடிப் போற்றிப் புகழ்ந்து  இறைவனுக்கு வைத்த பெயரே இறைவனுடைய பெயராய் நிலைத்துள்ளது. அதனை

"சாமவேதமொர் கீதம் ஓதியத் தசமுகன் பரவும்
நாமதேயமது உடையார்"                      
                                                                    -(பன்.திருமுறை: 2: 92: 8)
என திருஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ஞானக்குழந்தை தனது ஞானத்தால் அறிந்து சொன்ன இராவணனின் பெருமையை தமிழர்களாகிய நாம் அறியாதிருப்பது ஏன்? 

இன்னொன்றையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். இராவணன் சாமவேதகீதம் பாடினான் எனக்கூறும் இத்தேவாரத்தை பாடிய திருஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த தமிழர் கீதம் பாடினர் என்பதை 'சாமவேதமொர் கீதம்' எனும் சொல்லாட்சி காட்டுகிறது.

கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் என அழைக்கப்படும் புரந்தரதாசர் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர். புரந்தரதாசரே கீதங்களை இயற்றினார் என்றும் தமிழர் கீதத்தை அறியார் என்றும் சிலர் எழுதியும் சொல்லியும் வருகின்றனர் அப்படிச் சொல்வோரின் அறியாமையை என்னென்பது? திருஞானசம்பந்தர், புரந்தரதாசருக்கு எண்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். திருஞானசம்பந்தர் இத்தேவாரத்தில் கீதம் எனும் சொல்லைப் பதித்த காலத்தில் கன்னடம் என்ற மொழியே உண்டாகவில்லை. அப்படி இருக்க எப்படி புரந்தரதாசர் கீதத்தை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்க முடியும்?

இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment