Monday, 26 December 2011

ஆடும் எங்கள் அப்பன்


இந்த உலகத்தையும் அதிலிருக்கும் உயிருள்ள, உயிரற்ற பொருட்களையும் இயக்குவது எது? அப்படி இயக்கும் பொருள் எதுவோ அது தானும் இயங்க வேண்டுமல்லவா?  ஒரு விளையாட்டுத் திடலில் ஒருவர் ஒரு பந்தை எடுத்து வீசுகிறார் என வைத்துக்கொள்ளுங்கள்.  அவர் இயங்காது - அசையாது இருக்க அப்பந்து தூரத்தில் போய் விழுமா? இல்லையே. ஆதலால் அவரின் இயக்கமே பந்தின் வேகத்திற்கும் விழுகைக்கும் காரணமாகும். எனவே இவ்வுலக இயக்கத்தையும் ஏதோவொன்று தானும் இயங்கி இயக்குகின்றது என்பதை ஆதிமனிதன் புரிந்து கொண்டான். அந்த இயற்கையை - இயக்கனை வழிபடத் தொடங்கினான். 

அந்த இயக்கத்தை ஆடலாகப்புரிந்து கொண்ட தமிழன், அந்த ஆடலுக்கு வடிவம் கொடுத்து இயக்கனை ஆடல் நாயகனாக உயர்த்தினான். ஆடல் நாயகனின் ஆடல் நிலைகளை பக்தி இலக்கியங்கள் காட்டுகின்றன. காரைக்கால் அம்மையாரே பக்தி இலக்கியங்களிலே ஆடல் நாயகனின் ஆடலை முதன் முதல் பதிவு செய்தவர். 

ஆடலுக்கு பாடலும் தாளமும் மிக இன்றியமையாதன. பாடலுடன் இசைந்த பண்ணும், ஆடலுடன் இசைந்த தாளமும் இருக்கவேண்டும். அப்போது தான் ஆடலை இரசித்துச் சுவைத்துப் பார்க்க முடியும். பாடலுடன் சேர்ந்த பண்ணை அமைக்க சுரங்கள் வேண்டும்.  ச, ரி, க, ம, ப, த, நி என்ற இன்றைய கர்நாடக சங்கீதத்தின் ஏழு சுரங்களும் கர்நாடக இசையின் சுரங்கள் தானா? பண்டைத் தமிழர் இசைச் சுரங்களை அறிந்திருக்கவில்லையா? என்கின்ற கேள்விகளுக்கு தமிழரின் பக்தியிலக்கியங்கள் மிக அற்புதமான நல்ல விடைகளை பதிவுசெய்து வைத்திருக்கின்றன. ஆனால் நாம் அவற்றைத் தொட்டும் பாராமல் அந்தப்புராணம் அதைச் சொல்கிறது. யாவும் சமஸ்கிருதம் தந்ததே என மருண்டு கொண்டு இருக்கிறோம்.

பண்டைய தமிழர் பாடிய பாடல்களின் இசைச் சுரங்கள் என்னென்ன? அதன் ஆதாரத்தையும், பாடலுக்கு ஏற்றவாறு இசையைத் தரும் இசைக்கருவிகளையும் ஆடலுக்கேற்ற தாளத்தைக் கொடுக்கும் தாள இசைக்கருவிகளையும் காரைக்காலம்மையார் பாடிவைத்துள்ளார். 


"துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம்
                      உழை இளி ஓசை பண் கெழுமப்பாடிச்
சச்சரி கொக்கரை தக்கையோடு
          தகுணி துந்துபி தாளம் வீணை
         மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
                        தமருகம் குடமுழா மொந்தை வாசித்து 
          அத்தனை விரைவினோடு ஆடும் எங்கள்
                  அப்பன் இடம் திருஆலங்காடே"
                                       - (திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்: 9)

 பண்டைத் தமிழரின் தமிழிசையின் துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை ஆகிய ஏழுசுரங்களையும்  பண்னோடு பாடி சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணி, துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, வன்கை, மென்தோல், தமருகம், குடமுழா, மொந்தை ஆகிய பதிநான்கு இசைக்கருவிகளையும் வாசித்து மிகவும் விரைவாக இறைவன் ஆடுவாராம். காரைக்கால் அம்மையார் ஓசை எனக்கூறும் சுரத்தை இளங்கோவடிகள் குரல் என்பார். அதுவே சட்ஜம்  'ச' ஆகும். அதாவது காரைக்கால் அம்மையார் கூறிய ஏழுசுரங்களும் 
ஓசை(குரல்)  -  சட்ஜம் ()
துத்தம்   -  ரிஷபம் (ரி)
கைக்கிள்ளை  -  காந்தாரம் ()
உழை -  மத்யமம் ()
இளி  -  பஞ்சமம் ()
விளரி  -  தைவதம் ()
தாரம்  -  நிஷாதம் (நி)
ச ரி க ம ப த நி என்ற வடிவத்தை எடுத்துள்ளன. ச ரி க ம ப த நி என்ற ஏழு சுரங்களும் தமிழிசையின் சுரங்களே. நாமோ அதனை மாற்றான் தோட்டத்து மல்லிகையாகப் பார்கிறோம்.

ஊர்த்துவத் தாண்டவராய் ஆடும் எங்கள் அப்பன் தனது ஆடலுக்கான தாளத்தைப் பெறுவதற்கு தானே தமருவை ஒரு வளைந்த கோல் கொண்டு அடித்து ஒலி எழுப்புவதைப் படத்தில் பாருங்கள். இது கிடைத்தற்கரிய ஒரு சிலையாகும்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment