Monday, 19 December 2011

தீபங்களாடும் கார்த்திகைத் தீபப்பெருவிழா - பகுதி 2


இலவு காக்கும் கிளி

நம் நாட்டில் சொல்லப்படும் ‘இலவம் பஞ்சில் துயில்’, ‘இலவு காத்த கிளி போல’ என்ற மூதுரைகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்த இலவமரப் பூவையே ஔவையார் கார்த்திகைத் தீபத்திற்க்கு உவமை கூறினார். இலவம் பூக்களை இரசித்துப் பார்த்திருப்பீர்கள். நானும் பார்திருக்கிறேன். எனக்கு மரத்திலிருந்து உதிர்ந்த இலவம் பூவிதழ்கள், மரத்தின் அடியைச் சுற்றி  செந்நிறப் பட்டுக் கம்பளம் விரித்ததுபோல் தெரிந்ததோடு முழுமதிஒளியில் நிலமே பற்றி எரிவதுபோலவும் இருந்தது. இயற்கை அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப ஒவ்வொரு விதமாகத் தெரியும். எனவே ஔவையார் தான் உணர்ந்த உண்மையை 
வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு
இலையில மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அருஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி”         
                                                        - (அகம்: 11: 1- 5)
என்று கூறியுள்ளார்.
கார்த்திகைத் திருநாளன்று திருவண்ணாமலையின் உச்சியில் தீபம் ஏற்றுவது போல் சிவனொளிபாத மலை உச்சியிலும் ஏற்றப்பட்டதை புங்குடுதீவில் கோட்டை கட்டி வாழ்ந்த பாண்டிய இளவரசி வீரமாதேவி குறிப்பிட்டாள் என முன்னர் சுட்டினேன் அல்லவா? அந்த வழக்கம் சங்ககாலப் பழமையானது. சங்ககாலத் தமிழரும் மலை உச்சியில் விளக்கேற்றி கார்த்திகை நன்னாளை பெருவிழாவாகக் கொண்டாடினர் என்பதை சங்கப்புலவரான பாலைபாடிய பெருங்கடுகோ என்ற அரசனே கூறியுள்ளார். இவரும் ஔவையாரைப் போலவே கார்த்திகை விளக்குக்கு இலவம் பூவை ஒப்பிடுகின்றார். அப்பாடலில் காதலி ஒருத்தி, தனது  காதலன் கடந்துசென்ற வழியில் இருந்த மலையின் கொடுமையைக் கூறும் பகுதியை மட்டும் பார்ப்போம். 
“பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் வான்உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்,
பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்
இலைஇல மலர்ந்த இலவமொடு
நிலையுயர் பிறங்கல் மலைஇறந்தோரே”          
                                                 - (அகம்: 185: 8 - 13)
பசுமையே இல்லாது காய்ந்து கல்லாய் இருக்கும் மலை உச்சியிலுள்ள வெம்மையான அந்த வழியிலே, வானம் வறண்டு மழை அற்றுப்போனதால் அருவிகள் வற்றிப்போன, உயரமான மலை உச்சியிலிருந்த  இலவமரங்கள் இலையே இல்லாது பூக்களாகவே மலர்ந்திருப்பது, கார்த்திகைப் பெருவிழா விளக்குகள் இருப்பது போலத் தெரியும் அந்த உயர்ந்த மலைத்தொடர்களைக் கடந்து சென்றார். இப்படி காதலனைப் பிரிந்த காதலியின் வேதனையைச் சொல்லும் இடத்திலும் கார்த்திகை விளக்கீட்டை மலை உச்சியில் பெருவிழாவாகக் கொண்டாடினர் என்ற வரலாற்றுச் செய்தியையும் பாலைபாடிய பெருங்கடுங்கோ எமக்குத் தந்துள்ளார். அந்நாளில் ‘பெருவிழா’ என்றாலே கார்த்திகைத் தீபவிழாவையே அது சுட்டியது என்பதையும் இப்பாடல் காட்டுகிறது.
அகநானூற்றில் இப்பாடலை எழுதிய பாலைபாடிய பெருங்கடுங்கோவே நற்றிணையின் ஒரு பாடலில் கார்த்திகை விளக்கீடு, கார்த்திகை நட்சத்திரத்தில் நடந்ததைக் காட்டுகிறார். கார்த்திகை மாதத்தில் சங்ககாலத் தமிழர்கள் அறம் செய்தார்கள் என்பதையும் அப்பாடல் காட்டுகிறது. காட்டு வழியே காதலனுடன் காதலி செல்கிறாள். காதலிக்கு தன்னுடன்  நடந்து வருவதால் ஏற்படும் களைப்பு தெரியாதிருப்பதற்காக செல்லும் வழியில் உள்ளவற்றைக் காட்டி காதலன் சொல்கிறான். 
“கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை
அறுமீன் கெழீய அறம்செய் திங்கள்
செல்சுடர் நெடுங்கொடி போலப்
பல்பூங் கோங்கம் அணிந்த காடே!           -(நற்றிணை: 202: 8 - 11)
‘இளையவளே! நீ வாழ்வாயாக! உன் தந்தை அறம் செய்கின்ற கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் சேர்ந்து வரும் போது தொடர்ந்து செல்லும் சுடரொளியின் நீண்ட வரிசையைப் போல கோங்கம் பூக்களால் அழகுபெற்று விளங்கும் காட்டைப் பார்’ எனக் காட்டுகின்றான். அறுமீன் என்பது கார்த்திகை நாளையும் அறம்செய் திங்கள் என்பது கார்த்திகை மாதத்தையும் குறிக்கும். 
கோங்கம் பூக்கள்
கோங்கம் பூக்கள் எப்படி இருக்கும்? அதற்கு சேரமான் இளங்குட்டுவன் தரும் விளக்கத்தைப் பாருங்கள். 
“...................................  கோங்கின்
காலுறக் கழன்ற கள்கமழ் புதுமலர்
கைவிடு சுடரின் தோன்றும்”     - (அகம்: 153: 16 - 18)
கால் என்றால் காற்று. காற்றுவீசுவதால் கோங்கமரத்தில் இருந்து விழுகின்ற தேன்மணக்கும் புதுமலர்கள் கையால் தூண்ட சுடர்விட்டு எரியும் சுடர் போல் தோன்றுமாம். கலித்தொகையில் குறிஞ்சிக்கலி பாடிய கபிலர் 
“தண்ணறுங் கோங்கம் மலர்ந்த வரையெல்லாம் 
பொன்னணி யானைபோல் தோன்றுமே”     -(கலி: 42: 16-17)
என்கிறார். கோங்கம் என்பதும் ஒருவகை இலவமரமே. இதன் பூ பொன்னிறத்திலும் மகரந்தம் செம்மஞ்சள் நிறத்திலும் இருக்கும். அதனால் கோங்கமரத்தை கோங்கிலவு என்றும் மஞ்சள் இலவு என்றும் அழைப்பர்.
செங்காந்தள் மலர்கள்

கார்நாற்பதைப் பாடிய மதுரைக் கண்ணங் கூத்தனாருக்கு தோன்றிப்பூ கார்த்திகை விளக்குப்போலத் தோன்றியிருக்கிறது. கார்த்திகை விளக்கீட்டை ‘நலமிகு கார்த்திகை’ என்றும் ‘தலைநாள் விளக்கு’ என்றும் புகழ்ந்துள்ளதைப் பாருங்கள். தோன்றிப் பூவை இக்காலத்தில் செங்காந்தள் என்றும் சிலர் சொல்கின்றனர். செந்நிறக் கார்த்திகைப்பூவே செங்காந்தள் பூ. தோன்றிப் பூ வேறு செங்காந்தள் வேறு.

“நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகயுடைய ஆகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி”           -(கார்.நாற்: 26: 1 - 3)
நன்மை மிகுந்த கார்த்திகைத் திருநாளில் நாட்டினர் ஏற்றிவைத்த முதல்நாள் விளக்கைப் போல எல்லா இடங்களிலும் தோன்றிப்பூக்கள் பூத்தனவாம். கார்த்திகை நட்சத்திரத்தை வரவேற்பதற்காக பரணி நட்சத்திரத்தன்றே விளக்கேற்றுவார்கள். அதற்கு தலைநாள் விளக்கு என்று பெயர்.
மேலே நான் சொன்ன சங்ககால புலவர்களுக்கு  செந்நிறப்பூக்கள் யாவும் கார்த்திகை விளக்கின் தீபச்சுடரொளியையும் தீபங்கள் ஆடும் கார்த்திகைத் தீபப்பெருவிழாவையுமே நினைவூட்டின.
நப்பூதனார் என்ற சங்ககாலப்புலவர் பத்துப்பாட்டிலுள்ள முல்லைப் பாட்டைப் பாடியவர். அவரும் கார்நாற்பதைப்பாடிய மதுரைக் கண்ணங் கூத்தனாரைப் போல தோன்றிப்பூவைப் பார்த்தார். அது அவருக்கு கார்த்திகைச் செடியின் பூவாகவோ அல்லது கார்த்திகை விளக்காகவோ தெரியவில்லை. தோன்றிப்பூ அவருக்கு குருதியாகவே தோன்றியிருக்கிறது. 
“ தோன்றி குருதி பூப்ப”             - (முல்லைப்பாட்டு: 96)
என்கிறார். ‘தோன்றி பூத்தது’ எனக்கூறாது, குருதி பூத்தது எனச்சுட்டுவதைப் பாருங்கள்.
அவரைப் போலவே களவழி நாற்பதைப் பாடிய பொய்கையாரும் குருதியைச் சுட்டுகிறார். எங்கே? போர்க்களத்தில். சங்ககாலப் போர்க்களத்தில் மரங்களை, பூக்களை பார்க்க முடியுமா? முடியாதே. போர்க்களத்தின் தன்மையை எம்முன் காட்டி அங்கே பாய்ந்தோடும் குருதியையும் காட்டுகிறார். ஆனால் போர்களத்தில் பாய்ந்து ஓடிய குருதி கார்த்திகைத் தீப விளக்கைப்போல தொடர்ந்து ஓடுவது போல் அவருக்குத் தெரிந்திருக்கிறது.
ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்து ஓடி
தாக்கி எறிதர வீழ்தரும் ஒண்குருதி
கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவே
போர்க் கொடித் தானை பொருபுனல் நீர்நாடன்
ஆர்து அமர்அட்ட களத்து”                           
                                                -(கள.நாற்பது: 17)
போர்க்கொடி ஏந்திய படையோடு சோழன் ஆரவாரித்து போர்க்களத்தில் போர் செய்கிறான். போர்வீரர்கள் ஒருவரோடு ஒருவர் எதிர்த்து ஒடி, குத்தி, வெட்டித் தாக்கி, தூக்கி எறிவதால் உடலில் இருந்து குருதி வழிந்து ஓடியது. அப்படி வழிந்தோடிய அந்த இரத்த ஆறு, கார்த்திகை திருவிழாவில் எண்ணமுடியாத அளவிற்கு ஏற்றப்பட்ட கார்த்திகை விளக்கின் தீபச்சுடர் அசைந்தாடி தொடர்ந்து செல்வது போல ஓடியதாம். சாறு என்றால் விழா. கார்த்திகைச் சாற்றில் என்பது கார்த்திகை விழாவில் எனப்பொருள் தரும். 
இந்தச் சங்கச்சான்றோர்களுக்கு பூக்களும் போர்க்களத்து இரத்த ஆறும் கார்த்திகைத் தீப விளக்குகளையும் கார்த்திகைத் தீபப் பெருவிழாவையும் ஞாபகப்படுத்தியது என்றால் அவர்கள் வாழ்ந்த சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர்கள் கார்த்திகைத்தீபத் திருவிழாவுக்கு எவ்வளவு முதன்மை கொடுத்துதிருப்பார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களாகிய நாம் தீபாவளிக்குக் கொடுக்கும் மதிப்பைக்கூட கார்த்திகை விளக்கீட்டுக்குக் கொடுப்பதில்லையே!  


பண்டைக்காலத் தமிழ்ப்பெண்கள் தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்தரம், சித்திரைச் சித்திரை, வைகாசி விசாகம் என ஒவ்வொரு மாதமும் வரும் முழுமதி நாளை  திருவிழாக்களாக கொண்டாடியிருக்கிறார்கள். பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து ஆடியும் பாடியும் மகிழ்ந்து கொண்டாட பால்போன்ற நிலவொளி துணை புரிந்தது. அப்படிக் கொண்டாடப்பட்ட விழாக்களில் மிகப்பெரிய விழாவே கார்த்திகைப் பெருவிழா. 
குமாராலய தீபம், என்றும் சர்வாலய தீபம் என்றும் ஆலயவழிபாடாக இன்று கார்த்திகைத் தீபத்திருவிழாவை மாற்றிவிட்டோம். தமிழர் தம் பெருவிழாவை இந்துசமய நிறம்பூசுவது நன்றா? பன்னெடுங் காலமாக பெண்களால் கொண்டாடப்பட்டு வந்த ஒரு பண்டிகை சமயம் சார்ந்த கொள்கையுடன் மாறுவது தவறல்ல. ஆனால் அங்கே மூடநம்பிகைகள் புகுத்தப்படுவதும் பெண்களால் கொண்டடப்பட்ட விழா என்ற உண்மை மறைக்கப்பட்டு பெண்களுக்கே இடம் இல்லை எனப் பூச்சாண்டி காட்டுவதும் தவறாகும்.
இன்றைய இந்துசமயம் கார்த்திகை விளக்கீட்டிற்கு பல கதைகளைக் கூறுகின்றது. அதில் ஒன்று பிரமவும் திருமாலும் அடி முடி தேடிய கதை. இதே கதையை சிவராத்திரிக்கும் சொல்கிறார்கள். இதில் எது உண்மை? அது எப்படி ஒரே நிகழ்ச்சி மாசி மாதத்திலும் கார்த்திகை மாதத்திலும் நடந்திருக்க முடியும்? அடுத்த கதை முருகனின் பிறப்பு. வைகாசி விசாக நட்சத்திரத்தில் முருகன் பிறந்ததாகச் சொல்பவர்களே கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்ததாகவும் சொல்கிறார்கள். இதில் எது உண்மை? யாராவது இதுபற்றி கேள்வி கேட்கிறார்களா? கோயில் அறக்காவலர்களும் எப்படியாவது உண்டியல் நிறைந்தால் சரியென இருக்கிறார்களோ? 
திருமந்திரம் சொன்ன திருமூலரே
“விளக்கொளியாகிய மின்கொடியாளை
விளக்கொளியாக விளக்கிடு நீயே”
என எமக்குக் கட்டளை இட்டுள்ளார்.
விளக்கிடுவதை திருவிழாவாக பொருவிழாவாக சங்கத்தமிழர் கொண்டாடியதை நாம் அறிந்தோம். அன்றைய தமிழன் தொடக்கம் இன்றைய தமிழன் வரை தொடர்ந்து கொண்டாடிவரும் ஒரே பெருவிழா கார்த்திகைத் தீப விழாவேயாகும். இரண்டாயிரத்து நூறு வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பெண்கள் தொடர்ந்து கொண்டாடி வரும் பெருவிழாவும் இதுவேயாகும்.
இந்த கார்த்திகைப் பெருவிழாவை மதிநிறைந்த நன்னாளில் பெண்கள் எப்படிக் கொண்டாடினார்கள் என்பதை அகநானூற்றில் நக்கீரர் சொல்வதைக் கொண்டு பார்ப்போமா?
உலகுதொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து 
அறுமீன் சேரும் அகலிருள் நடு நாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப் 
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகதில் அம்ம!”          (அகம்: 141: 5 - 11)
உலகத்து தொழில்கள் அற்றுப்போக, உழும் கலப்பையும் முடங்க (அறுவடைக் காலமாதலால்) மழை அற்றுப்போன விண்ணில் முயலின் உருவம் தெரியும் முழுமதி, கார்த்திகை நட்சத்திரத்தைச் சேரும் இருளற்ற நடுஇரவில் தெருக்களில் விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி, மாலைகளை தொங்கவிட்டு,  பழம்பெருமைமிக்க  மூதூரில் பலரும் சேரும் விழாவினைக் கொண்டாட தலைவன் வருவார். ஆதலால்
“துவரப் புலர்ந்து தூமலர் கஞலித்,
தகரம் நாறுந் தண்நறுங் கதுப்பின்
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இஈஇ,
கூழைக் கூந்தற் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப்
பாசவல் இடிக்கும் இருங்கால் உலக்கைக்
கடிதுஇடி வெரீய கமஞ்சூல் வெண்குருகு
தீங்குலை வாழை ஓங்குமடல் இராது
நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றும்.....”                 
                                     - (அகம்: 141:12 - 21) 
நன்றாக விரிந்த தூயமலரை நெருக்கமாக வைத்த, மயிர்ச்சாந்தின் மணம்வீசும் கூந்தலையுடைய புதுமணப்பெண் போன்றவள் உணவு நிறைந்த காவலுள்ள வீட்டின் பலபக்கங்களையுடய அடுப்பில் பாலை உலையாக வைத்தாள். சிறிய கூந்தலுடைய சிறுவளையல் அணிந்த மகளிர் நெல்லின் வளைந்த கதிர்களை முறித்து புதுஅவல் இடிக்கும் சத்தத்தைக்கேட்டுப் பயந்து  அடைகாக்கும் வெண்நாரை வாழையில் இராது, மாமரத்தில் போயிருக்கும் என்று கார்த்திகை விழாவைக் கொண்டாட ஏற்பாடுகள் நடக்கும் காட்சியையும் பாடல் காட்டுகிறது. 

இப்படியெல்லாம் சங்கத்தமிழர் எல்லோரும் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்த தீபங்கள் ஆடும் கார்த்திகைத் தீபப்பெருவிழாவை உலகெலாம் பரந்து வாழும் தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து எப்போது கொண்டாடுவது? 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment