Saturday 10 December 2011

குறள் அமுது - (12)



குறள்:
“உடம்பாடு இலாதார் வாழ்க்கை குடங்கருள்
பாம்பொடு உடனுறைந் தற்று”                        - 890

பொருள்:
மனப்பொருத்தம் இல்லாதவருடன் வாழும் வாழ்க்கை ஒரே குடிசைக்குள் பாம்போடு சேர்ந்து வசிப்பதைப் போன்றதாகும்.

விளக்கம்:
இத்திருக்குறள் உட்பகை என்னும் அதிகாரத்தில் உள்ள கடைசிக் குறளாகும். நாம் பிறருடன் சேர்ந்து வாழும் வாழ்க்கையின் உறவு இரண்டு வகைப்படும். மற்றோருடன் மனமொன்றி சேர்ந்து வாழ்வது ஒருவகை. அத்தகையோர் பிறர் நலம் பேணுவர். மனப்பொருத்தமும் ஏதுமின்றி சேர்ந்து வாழ்வது மறுவகை. மனம் பொருந்தாத வாழ்க்கை தன்னலக்காரரிடம் இருக்கும். ஒத்தமனம் உடையோரே உடம்பாடு உடையோர். 

ஒத்தமனம் இல்லாதாரிடம்  வெறுப்பும் பகைமையும் இருக்கும். பகையும் இரண்டு வகைப்படும். ஒன்று வெளிப்பகை, மற்றது உட்பகை. எம்மால் எதிரி என இனங்காணப்பட்ட வெளிப்பகைவருக்கு நாம் பெரிதாக அஞ்சத்தேவையில்லை. அவர் பகைவர் என்பதால் நாம் எப்போதும் விழிப்பாக தற்பாதுகாப்புடன் இருப்போம்.  எனவே மனம்வேறுபட்டு உதட்டளவில் உறவு கொள்ளும் உட்பகைக்கே அஞ்சவேண்டும்.

உட்பகை கொண்டோர் நாம் என்னதான் அள்ளிக் கொடுத்திருந்தாலும் உறவுபோல், நண்பர்போல், எம்மோடு இருந்தே எமக்குக் கேடு செய்வர். எம் குடிசையில் இருக்கும் பாம்பு எப்பொழுது சீறிப்பாய்ந்து கடிக்கும் என்பதை நாம் உணரமாட்டோம். அதுபோல் எம் உட்பகைவரது நயவஞ்சனை எம்மை அழிக்கும் என்ற இக்குறளின் கருத்தை 

“தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையால் நேர் செய்திருத்தல் - மலைமிசைக்
காம்பனுக்கும் மென்தோளாய் அஃதொன்றோ ஓரறையுள்
பாம்போடு உடனுறையும் ஆறு”

என கொஞ்சம் விரித்து பழமொழிநானூறு சொல்கிறது. அதாவது 'மூங்கில் போன்ற தோளையுடையாய்! தலைவனாக வேண்டுமென நினைக்கும் வஞ்சகரை  தன்னைப்போல் பாவிக்கும் அரசனின் நிலை, பாம்புடன் ஓர் அறையுள் வாழ்வது போன்றது' எனக்கூறுகிறது. பழமொழிநானூறு மென்தோளாய்! என பெண்ணை விழித்து உட்பகையுடன் சேர்ந்து வாழும் அரசனின் நிலையை எடுத்துக்கூறி பெண்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரங்களை வைத்திருக்கும்  அரசன் நிலையே அப்படியானால் எதுவித அதிகாரமும் அற்று பொருளாதாரமும் சிதைந்து ஆணவப் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் எம்மவர் நிலையை எண்ணிப் பாருங்கள். தாமே தலைவராக வேண்டும் என்றும் அங்குள்ள போகமும் பொருளும் தமதேயென்றும் யாவரும் தமக்கு அடிமை என்றும் எத்தனை பாம்புப் பட்டாளம் அங்கே சீண்டுகின்றது. அந்தச் சீண்டலை அந்த உட்பகையை அன்றாடம் அநுபவிக்கும் நம்மவர் நிலையை குருதியால் பதித்த குறளிது.

No comments:

Post a Comment