குறள்:
ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றி
தாழாது உஞற்று பவர் - 620
பொருள்:
தாமதிக்காது தளர்வடையாமல் தொடர்ந்து முயற்சி செய்பவர் விதியையும் முறியடித்து வெற்றியடைவர்.
விளக்கம்:
இத்திருக்குறள் 'ஆள்வினை உடைமை' என்னும் அதிகாரத்தில் பத்தாவது குறளாக இருக்கிறது. முயற்சியுடையோராய் இருத்தலை ஆள்வினை உடைமை என்பர். விதியை வெல்லமுடியுமா? என்னும் கேள்விக்கு, முடியும் என்ற பதிலைத் தருகிறது இக்குறள். திருவள்ளுவர் விதியை வெல்லும் வழியை மிகவும் சிறப்பாகக் கூறி இருக்கிறார்.
நீங்கள் செய்து முடிக்க நினைத்த செயலில் தோல்வி வந்துவிட்டதா? விதியே என்று இருந்து விடாதீர்கள். விதியை வெல்வதற்கு, சோர்ந்திருக்காது விரைந்தெழுந்து தொடர்ந்து செயற்படுங்கள். உங்கள் செயற்திறனால் விடாமுயற்சியால் நீங்கள் செய்து முடிக்க நினைத்ததை முடித்து, விதியை வென்றுகாட்டலாம்.
மனிதர் அறிவற்ற சடப்பொருள் அல்லர். எமக்கு அறிவு இருக்கிறது. மனிதர் தம் விடாமுயற்சியால் ஊழையும் அதாவது விதியையும் வெற்றி கொள்ளமுடியும். இது நம் தலைவிதி என்று செயற்படாதிருக்க மனிதனால் முடியவே முடியாது. அப்படி இருந்திருந்தால் மனிதன் கிரகம் விட்டு கிரகம் தாவ முனைந்திருப்பானா?
குமரகுருபர சுவாமிகள் 'நீதிநெறி விளக்கம்' என்ற நூலில் கூறியுள்ளது போல் நாம் செயற்பட்டால் இக்குறளில் திருவள்ளுவர் கூறியபடி விதியை வெல்லலாம்.
“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.” (நீதி.விளக்கம்: 52)
தான் எடுத்த செயலைச் செய்து வெற்றியடைய ஒருவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை மிக நேர்த்தியாக குமரகுருபரர் இப்பாடலில் தந்துள்ளார். உடல் வருத்தத்தை - நோவைப் பராது, பசி எடுப்பதையும் கண்டுகொள்ளாது, விழித்திருந்து, மற்றவர் செய்யும் துன்பங்களையும் பொருட்படுத்தாது, தன்னைப் புகழ்வோரைப் பார்த்து மகிழாமலும் இகழ்வோரைப் பார்த்து சினக்காமலும் தான் எடுத்த செயலைக் கண்ணும் கருத்துமாகத் தொடர்ந்து விடாது செய்பவன் வள்ளுவர் கூறியது போல் விதியை வென்று வெற்றியடைவான். விதியை வெல்லவேண்டுமா உங்கள் இலட்சியத்தை நாடி தொடர்ந்து செயற்படுங்கள்.