Friday 5 April 2013

தான் தான் பண்ணினானே!

இராமச்சந்திர கவிராயர் ஒரு சிறந்த புலவர். தமிழை தன் மனஎண்ணப்படி அழகாகப் புனைந்து நல்ல பல பாடல்களைத் தந்தவர். அவருக்கு பண நெருக்கடி வந்த நேரங்களில் பிறரிடம் சென்று, தன் தேவையைச் சொல்லி பணம் கேட்டுப் பெற்றார். அப்படி பிறரிடம் சென்று பணம் கேட்டுப் பெறுவது  அவருக்கு வெட்கத்தையும் வேதனையையும் கொடுத்தது. அதனால் வயிற்றுப் பசிக்காக இந்த உலகில் பிறரிடம் பல்லைக்காட்டி வாழ பிரமன் தன்னைப் படைத்து விட்டிருக்கிறானே என மனம் வருந்தி பாடுகிறார்.




மனம் மிக நொந்த நிலையிலும் தமிழ் இராமச்சந்திர கவிராயருடன் கொஞ்சிவிளையாடுகிறது. ‘படைத்தல் கடவுளான பிரமன் கல்லை, மண்ணை காச்சிக்குடிக்க சொல்லித்தந்தானா? அதனை செய்யாவிட்டாலும் பொன்னை எனக்குத் தந்து காப்பாற்றினானா? துன்பத்தை சொல்லி ஆரையும் நோவ முடியவில்லை. ஐயோ! எல்லா இடத்திலும் பல்லைக்காட்டத்தானே பிரமன் இப்பூமியில் என்னைப் படைத்தான்’ என தன் நிலையைச் சொல்லி மனம் வெதும்பும் அவருடன் தமிழ் கொஞ்சி விளையாடியதால் எமக்குக் கிடைத்துள்ள அரிய தமிழ்ப் பாடலைப் பாருங்கள்.

கல்லைத்தான் மண்ணைத்தான் காச்சித்தான் 
          குடிக்கத்தான் கற்பித்தானா!
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
          கொடுத்துத்தான் இரட்சித்தானா!
அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்
           நோவத்தான் ஐயோ எங்கும்
பல்லைத்தான்  திறக்கத்தான் பதுமத்தான்
            புவியில்தான் பண்ணி னானே!                -இராமச்சந்திர கவிராயர்

‘பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான் (பிரமன்) புவியில்தான் பண்ணினானே’ என்று பிரமனை திட்டி தீர்க்கும் இப்பாடலில் ஒவ்வொரு சொல்லின் இறுதியிலும் பதினெட்டு தரம் ‘தான்’ எனும் சொல்லைக் கூட்டி கொஞ்சு தமிழில் பாடல் புனைந்திருக்கிறார். அன்று பொருள் இல்லாது வருந்திய  போதும் அவரின் கொஞ்சுதமிழின் விஞ்சு கவிதையால் இன்றும் இராமச்சந்திர கவிராயர் நிலைத்து வாழ்கிறார். பொருள் அழியும், தமிழ் அன்னை தரும் புகழ் என்றும் அழியாதது. அதற்கு இராமச்சந்திர கவிராயரின் வாழ்வும் ஒரு சான்றாகும்.

                     


No comments:

Post a Comment