Saturday 20 April 2013

சனிபிடித்திடு காக்கையே!

 
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பெருமையாகக் கூறும் மணிபல்லவமே நயினாதீவு. நயினாதீவின் புகழை தன் பெயரில் தாங்கி, ஈழத்தமிழரின் கவித்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டிய பெரும் புலவர் என என் தந்தையால் அடிக்கடி கூறப்பட்டவர் நயினை நாகமணிப்புலவர். அவர் என் தந்தையின் தனித்தன்மையைக் கண்டு அவரின் மேல் மிகுந்த அன்புள்ள நண்பராக இருந்திருக்கிறார். அதனால் தான் எழுதிய பாடல்களில் பலவற்றை என் தந்தையிடம் கொடுத்திருக்கிறார். அப்பாடல்களை விளக்கி என் தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் 1950 களில் தினகரன் ஞாயிறு வாரமலரில் தொடர்ந்து எழுதி வந்தார் என்பதை நான் அறிந்தேன். எனக்கு அவை கிடைப்பின் பதிவுசெய்வேன்.

நயினை நாகமணிப்புலவர் சிலேடைப் பாடல்கள் முதற்கொண்டு எல்லோராலும் இயற்றமுடியாத 'நீரோட்ட யமக அந்தாதி' உட்பட பலவகைப்பட்ட தமிழ்ப்பாடல்களை இயற்றியுள்ளார். இங்கே அவரது கவித்துவத்தைக் காட்ட எனக்கு தெரிந்த ஒரு பாடலை பதிவு செய்கிறேன்.

அந்நாளைய வாழ்க்கை இயற்கையோடு இயந்ததால் அவரும் இயற்கையில் கண்டவற்றை தமது பாடல்களில் பதிவு செய்திருக்கிறார். இனிமையையும் அழகையும் போற்றும் நாம் அழகின்மையைப் போற்றுவதில்லை. குயிலையும் மயிலையும் புகழ்ந்து ஆகா! ஓகோ! என்போம். அப்படி காகத்தையும் கூகையையும்[ஆந்தை] சொல்வோமா? அது மனிதரின் குணம். புலவராய் இருந்தால் என்ன? யாராய் இருந்தால் என்ன? அது மாறுமா?

காகம் ஒன்று அதிகாலை நான்கு மணி வேளையில் கண்தூங்க விடாது 'கா கா' என்று கரைந்து புலவரின் நித்திரையை கெடுத்துக்கொண்டிருந்தது. புலவருக்கோ தாங்கமுடியாத ஆத்திரம் வந்தது. ஆத்திரத்தை அடக்கி அடக்கிப் பார்த்தார் அது அடங்கவில்லை. எழுந்து வந்து காகத்தை துரத்தினார். காகம் எழுந்து பறந்து சென்று ஒருவட்டம் இட்டு, மீண்டும் வந்து இருந்த இடத்திலே இருந்து 'கா கா' என தன் சங்கீதக் கச்சேரிசையைத் தொடர்ந்தது.

காகாத்தின் கச்சேரியை இரசித்துக் கேட்ட புலவர் அந்த மகிழ்ச்சியில் காகத்தின் பெருமைகளை நீண்ட பட்டியல் இட்டு காட்டுகிறார். 

'சூரிய ஒளியே படாது இருள் சூழ்ந்த அதிகலையில் கா கா எனக் கரைவது; நல்ல இனிமையான மா, பலா, வாழையாகிய முக்கனியும் இருக்க அவற்றை உண்ணாது வேப்பம் பழத்தை தின்பது; குப்பைக் குழியை தேடித்திரிவது; பிணத்தின் மணத்தை விரும்பிச் சென்று கண்ணைப் பிடுங்குவது; ராமர் விட்ட அருகம்புல் அம்புக்கு ஒருகண்ணைக் கொடுத்தது; நரியாரின் பேச்சை நம்பி வாயில் இருந்த வடையையே தப்பவிட்டது; கற்பகதருவான பனைமரத்தில் முட்குவியலை வைத்து சண்டித்தனம் செய்வது. தன்முட்டை என நம்பி குயில் முட்டையை அடைகாப்பது என காகம் மிக்க புகழுடன் இருந்ததால் சனியனும் பிடித்து தன் வாகனமாக வைத்திருக்கிறார் என்பதை மிகநளினமாக ‘சனிபிடித்திடு காக்கையே!’ என நயினை நாகமணிப்புலவர் வாயாரம்புகழும் பாடலை நீங்களும் படித்து மகிழுங்கள்.

கருதுலகு விடியுமுன் வீடுவாசலில் வந்து
          கா காவெனுஞ் செருப்பே
கனிவர்க்கம் உண்ணாது வேப்பம்பழந் தின்னும்
          கடை கெட்ட மூதேவியே
பெருமையுடனே சந்தி எல்லாம் திரண்டு
          பல்வீக் குவியல்தேடு கழிவே
பிணமான மணமெங்கு அங்குசென்றே கண்
          பிடுங்கும் பெரும் பிசாசே
திருமேவு ராமர்விடும் அறுகானசரம் உருவ
          ஒருகண் கொடுத்த பதரே
தரைமீது நரியாரின் மொழிநம்பி ஏமாந்து
          வடைவிட்ட தனி மூடமே
தருவான மரமீது முட்குவியல் வைத்திடுஞ் 
          சண்டித் தனத்துள் மாறே
தன்முட்டை யென்று சிறுகுயில் முட்டை
          காத்திடுஞ் சனிபிடித்திடு காக்கையே!   
இத்தகைய பெரும் பெருமைகளையுடைய காக்கையாரின் புகழை நயினை நாகமணிப்புலவர் போல எடுத்துச் சொல்ல எவரால் முடியும்?
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment