Sunday 28 April 2013

மரமுடன் மரமெடுத்தார்

ஆலத்தி எடுத்தார்


கவி உள்ளம் கொண்டோருக்கு விடுகதை சொல்லும் விடுகவிதையாக இருக்கும் தனிப்பாடல் ஒன்றைப் பார்ப்போம்.

“மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று வளமனைக்கு ஏகும் போது
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்”              
                                                        - தனிப்பாடல்

சுந்தரகவிராயர் மரம் என்ற சொல்லை பதினொரு இடங்களில் வைத்து இத்தனிப்பாடலை இயற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இப்பாடலில் அரசமரம், மாமரம், வேலமரம், வேங்கைமரம், ஆலமரம், அத்திமரம்  ஆகிய ஆறு மரங்களை வைத்து ஒரு சிறுகதையை சுந்தரகவிராயர் கூறியுள்ளார்.

பெருங்காடு. அங்கே வாழ்ந்த வேங்கை ஒன்று அருகே இருந்த சிற்றூர்களில் சென்று குடிசையில் வாழ்ந்த மனிதர்களை கொன்று குவித்தது. அதனைக் கேள்விப்பட்ட அரசன் அவ்வேங்கையைக் கொல்லப் புறப்பட்டு சென்றான்.



சுந்தரகவிராயர், அரசன் வேங்கையைக் கொல்லப்புறப்பட்டுச் சென்றதையும், அவன் வேங்கையை வேலால் குத்திக் கொன்று, வெற்றிவாகையுடன் மீண்டதற்கு அரசமகளிர் ஆலத்தி எடுத்ததையும் கண்டார். தாம் கண்டதை இப்பாடலில் பாடியுள்ளார். மீண்டும் ஒருக்கால் பாடலை படித்துப் பாருங்கள் புரிகிறதா?

மரமது(அரசன்) மரத்திலேறி(குதிரையில் ஏறி) மரத்தை(வேலை) தோளில் வைத்து
மரமது(அரசன்) மரத்தைக்(வேங்கையை) கண்டு மரத்தினால்(வேலால்) மரத்தைக்(வேங்கையை)குத்தி
மரமது(அரசன்) வழியே(வந்தவழியே) சென்று வளமனைக்கு(அரண்மனைக்கு) ஏகும் போது
மரமது(அரசன்) கண்ட மாதர் மரமுடன்(ஆல) மரம்(அத்தி) எடுத்தார்”  

‘அரசன் குதிரையில் ஏறி வேலைத் தோளில் வைத்துக் கொண்டு சென்றான். அரசன் வேங்கையைக் கண்டு வேலால் வேங்கையைக் குத்திக் கொன்று, வந்தவழியே தன் அரண்மனைக்குச் சென்ற போது அரசனைக் கண்ட பெண்கள் ஆலத்தி எடுத்தனர்’ என்பதே இத்தனிப்பாடலின் கருத்தாகும். 

மரமது என்பது அரசமரத்தை குறித்து அரசனை சுட்டி நிற்கிறது. மரத்திலேறி என்பது மாமரத்தைக் குறித்து மா எனும் குதிரையைச் சுட்டி நிற்கிறது. மரமதை என்பது வேலமரத்தைக் குறித்து வேலைச் சுட்டி நிற்கிறது. மரத்தை என்பது மேங்கைமரத்தைக்  குறித்து வேங்கையைச் சுட்டி நிற்கிறது. மரத்தினால் வேலால் வேங்கையைக் குத்தி, அரசன் வந்த வழியே திரும்பி  வளமனைக்கு சென்ற போது அரசனைக் கண்ட மாதர் (பெண்கள்) மரமுடன் ஆலமரமுடன் மரம் அத்திமரத்தை எடுத்தனர். அதாவது [ஆல் + அத்தி = ஆலத்தி] ஆலத்தி எடுத்தனர்.
இனிதே,
தமிழரசி.   

4 comments: