Wednesday 17 April 2013

வாங்கு கதிரோனே!



காட்டிலும் மேட்டிலும் வயலிலும் தம் உடல் வருந்த வேலை செய்யும் மக்கள், தமது உடல் வருத்தம் தெரியாமல் இருக்க பாட்டுக் கட்டிப் பாடுவார்கள். தாம் இயற்கையிடம் இருந்து படித்தவற்றை மீண்டும் மீண்டும் அரையடிப் பாடலாகப் பாடிப் பாடி, தொடர்ந்து ஓரடிப்பாடலாகப் பாடிப் பாடி பாடலைக் கட்டுவர். அப்பாடல், பாடல் கட்டிப் பாடுவோரின் ஆற்றலுக்கு ஏற்றார் போல் ஒன்றரையடிப் பாடலாக, ஈரடிப் பாடலாக கூறவந்த கருத்து முடியும்வரை தொடர்ந்து செல்லும். இப்படிப் பிறந்த பாடல்களையே நாம் நாட்டுப்பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கிராமியப் பாடல்கள் என்றெல்லாம் அழைக்கிறோம்.

அத்தகைய பாடல்களில் ஏற்றப்பாடலும் ஒன்று. கீழே இருக்கும் ஒன்றை மேலே தூக்கி வைப்பதை ஏற்றுதல் என்போம். கிணற்றினுள், ஆற்றினுள் இருக்கும் நீரை மேலே ஏற்றி எடுத்து வாய்க்காலில் இறைப்பதை ஏற்றம் என்பர். அப்படி நீரை ஏற்றும் போது பாடப்படும் பாடல்கள் ஏற்றப் பாடல்கள் என அழைக்கப்படும். 

‘ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டு’ இல்லை என்பது தமிழ்ப் பழமொழிகளில் ஒன்றாகும். அந்தப் பழமொழி உண்மை என்பதை நிலைநிறுத்திய பாடலுக்கும் கம்பருக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. உலகமகாகவிகளில் ஒருவர் கம்பர். கவிச்சக்கரவர்த்தி என்ற பெயரும் அவருக்கு உண்டு. அத்தகைய  கம்பரையே கவிதைச் சுவையில் ஏங்கவைத்த பாடலாக அறியப்படுவது ஓர் ஏற்றப்பாடலாகும். அவர் வாழ்ந்த காலத்தில் பாண்டி நாடு ஏற்றத்தால் [ஏற்ற இறைப்பால்] உழவுத்தொழிலில் சிறந்து விளங்கியது. அவர் ஒருநாள் மாலை நேரம் பாண்டி நாட்டு வயல் வரம்பால் நடந்து சென்று கொண்டிருந்தார். மூன்றே மூன்று தமிழ்ச்சொற்கள் இசைத்தமிழாய் காற்றில் மெல்லத் தவழ்ந்து அவர் காதில் விழுந்தது. 

மகாகவியான கம்பரையே அவ்விசை இழுத்தது. அவ்விசை வந்த திசைநோக்கி இழுபட்டுச் சென்றார்.   தூரத்தே சிலர் ஏற்றம் இறைத்துக் கொண்டு நின்றனர். (ஏற்றம் இறைக்கும் போது பொதுவாக மூன்று, நான்கு பேர் நிற்பர்) கம்பரும் அங்கே இருந்த புதர் மறைவில் நின்று ஏற்றக்காரரின் பாடலைக் கேட்டார். சால் இழுப்பவர் ஏற்றப்பாடலின் அரையடியைக் கட்டி 
“மூங்கில் இலை மேலே...”
எனப்பாட, 

துலா மிதிப்போர் திரும்பப் பாடினர்.
“மூங்கில் இலை மேலே...”
“மூங்கில் இலை மேலே...”
“மூங்கில் இலை மேலே...”
மீண்டும் மீண்டும் அந்த அரையடியே தொடர்ந்தது. 

ஏனெனில் ஏற்றத்திற்கு என்று ஒரு கணக்கிருக்கிறது. ஐஞ்ஞூறு ஏற்றச்சால் போட்டால் ஒரு சுற்று முடியும். ஐஞ்ஞூறு சாலில் ஒருகுழி நிலத்துக்கு நீர் கிடைக்கும். அதுவரை அவர்கள் சலிக்காது பாடிய அரையடியையே பாடிக்கொண்டிக் கொண்டே இருப்பர். 

“மூங்கில் இலை மேலே” அந்த அரையடியைக் கேட்டுக் கேட்டு கம்பருக்கு காது புளித்துப்போக, மூங்கில் இலை மேலே, பூச்சி இருக்கிறதா? புழு இருக்கிறதா? என்னதான் இருக்கிறது? பூ விழுகிறதோ? என அவரது கவி நெஞ்சம் நினைத்துப் பார்த்தது. பதில் கிடைக்கவில்லை. ஏற்றம் இறைப்போரும் ஒருவழியாக ஐஞ்ஞூறுசால் இறைத்து முடித்து சிறிது இளைப்பாறினர். கம்பரும் மடியில் இருந்த வெற்றிலையை போட்டபடி மிகுதி அடிக்காக புதருள் காத்திருந்தார்.

ஏற்றக்காரரும் இன்னும் ஒருகுழி நிலத்துக்கு நீர் இறைத்தபின் வீடுபோகலாம் எனமுடிவெடுத்து ஏற்றமிறைக்கத் தொடங்கினர். சால் இழுப்பவர் பாடத்தொடங்கினார்.
“மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே!”
துலா மிதிப்போரும் திரும்பப் பாடினர். அது மீண்டும் தொடர்கதையாகியது.

பாடலின் முதல் அடியை முழு அடியாகாக் கேட்ட கப்பர், மகாகவியான நானே நினைத்துப் பார்க்க முடியாத சொல்லோவியத்தை மூங்கில் இலைமேல் தூங்கும் பனி நீராய் தீட்டிக்காட்டுகிறார்களே! என மகிழ்ந்தார். எனினும் அடுத்த அடி எப்படி வரப்போகிறது? “மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே!” உனக்கு என்ன? நீ கீழே வீழ்வாயா?  அடுத்த அடி வராதா என நெஞ்சம் துடிக்க காத்திருந்தார். 

மாலைச்சூரியன் மஞ்சட் கதிர்களை விரிக்கத் தொடங்கினான். சால் இழுப்போனும் வேலை முடிந்து வீடுபோகும் மகிழ்ச்சியில் 
“மூங்கில் இலை மேலே
தூங்கும்  பனி நீரே!
தூங்கும் பனி நீரை....”
என மற்ற அரையடியை கட்டி பாட மற்ற ஏற்றக்காரரும் தொடர்ந்தனர். சூரியனும் மெல்ல மறையத் தொடங்கியது. அந்த ஒன்றரை அடியுடன் ஏற்றப்பாடல் நின்றது. ஏற்றம் இறைத்தோரும் தத்தமது வீடு நோக்கிச் சென்றனர்.

கம்பரும் 
“மூங்கில் இலை மேலே
தூங்கும்  பனி நீரே!
தூங்கும் பனி நீரை....” 
எனப்பாடியபடி தனது வீட்டிற்கு வந்து படுத்தார். அவரால் தூங்கமுடியவில்லை. தூங்கும் பனி நீரை என்ன செய்வர்? காற்றுவந்து மோதிச் சிதரடிக்குமா? தேன்குருவி உறிஞ்சிக் குடிக்குமா? கம்பனின் கவியுள்ளம் ஏதேதோ கற்பனையில் இரவு முழுவதும் சுழன்றது. காலைக் கதிரவன் எழுமுன்னே கம்பர் ஓடோடிச் சென்று முதல் நாள் இருந்த புதருக்குள் இருந்து கொண்டார். ஏற்றக்காரரும் வந்தனர். ஏற்றம் இறைக்கத் தொடங்கினர். தெய்வத்தை தொழுது பாடிய பின் முதல் நாள் பாடிய பாடலை
“மூங்கில் இலை மேலே
தூங்கும்  பனி நீரே!
தூங்கு பனி நீரை....”
எனத் தொடர்ந்தனர். 

சூரியனும் மெல்ல எழுந்துவரத் தொடங்கியது. கம்பமகாகவி எதிர்பார்த்து காத்திருந்த அடி மெல்லப் பிறந்து வந்தது.
“மூங்கில் இலை மேலே
தூங்கும்  பனி நீரே!
தூங்கு பனி நீரை
வாங்கும் கதிரோனே!”
என்ன அற்புதமான சிந்தனை. அதிகாலையில் மூங்கில் இலையில் பனியாக வந்த நீரை மீண்டும் சூரியன் வாங்கி பனிமேகம் ஆக்குகின்றான். இது ஓரு நீர் வட்டம் அல்லவா? ஏற்றக்காரருக்கு தெரிந்த அறிவியல் கருத்தை எண்ணி கம்பரும் சிறுகுழந்தைபோல் அழகிய பாடலின் இன்பத்தில் குதித்து நடைபோட்டார். எங்கே சொல்லுங்கள் இந்த ஏற்றப்பாட்டிற்கு எதிர்ப்பாட்டு இருக்கிறதா?

குறிப்பு:
ஏற்றக்கணக்கு:

ஏற்றக்கணக்கு என்பது ஏற்றச்சாலின் கணக்காகும். நம் முன்னோர் சால் என அழைத்த பொருளின் இன்றைய வடிவத்தை வாளி எனலாம். சால் பனை ஓலையால் செயப்பட்டிருக்கும். கூடைபோல் பின்னியும் செய்வதுண்டு. ஆனால் சால் யாவும் ஒரே கொள்ளளவு உடையதாக இருந்தது. இந்நாளில் பனை ஓலைப்பட்டை என்று சால் அழைக்கப்படுகின்றது. ஆனால் அவற்றின் கொள்ளளவு மாறுபடும்.

ஏற்றம்மிதித்து நீர் இறைக்கும் போது இறைக்கும் சாலின் கணக்கை எண்ணுவர். என்றுமே அக்கணக்கு தொடர்ந்து எண்ணப்படுவதில்லை. ஐம்பதுவரை தொடர்ந்து எண்ணினால் பின்னர் 49, 48, 47 என இருபத்தைந்து வரை குறைத்து (பின்னால்) எண்ணிவருவர். மீண்டும் இருபத்தைந்தில் இருந்து எழுபத்து ஐந்துவரை தொடர்ந்து எண்ணுவர். பின்னர் 74, 73, 72 என ஐம்பது வரை பின்னால் எண்ணி வருவர். மீண்டும் ஐம்பதில் இருந்து நூறுவரை தொடர்ந்து எண்ணுவர். பின்னர் 99, 98, 97 என எழுபத்து ஐந்து வரை பின்னால் எண்ணி வருவர். மீண்டும் எழுபத்து ஐந்தில் இருந்து தொடர்ந்து நூற்றி இருபத்து ஐந்து வரை எண்ணுவர். இப்படி ஐம்பது கூட்டியும், இருபத்து ஐந்து குறைத்தும் மாறி மாறி எண்ணி இருநூறு அடையும் போது அவர்கள் ஐந்நூறு சால் நீரை இறைத்திருப்பார்கள். 

ஏற்றச்சால் கணக்கு ஊருக்கு ஊர், இடத்துக்கு இடம் வேறுபடும். ஆனால் எண்ணும் பாங்கு மாறாது. சில இடங்களில் தொடர்ந்து நாற்பதுவரை எண்ணி, பின்னர் இருபதுவரை பின்னால் வந்து, அறுபதுவரை தொடர்ந்து நாற்பதுவரை பின்னால் வந்தும் சால் கணக்கை எண்ணுவர். எப்படி சால் கணக்கை எண்ணினாலும் ஐஞ்ஞூறு சால் இறைத்த பின்னரே இளைப்பாறுவர். ஐந்நூறு சால் நீர் ஒரு குழி நிலத்துக்கு தேவையான நீரை கொடுக்கும் என்பது எமது தமிழ் முன்னோர் ஆராய்ந்து கண்ட முடிவாகும். நூறு சால் ஒரு பரிசம் எனப்படும்.
இனிதே,
தமிழரசி. 

No comments:

Post a Comment