Thursday 11 April 2013

குறள் அமுது - (61)

குறள்:
“வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு”                       - 878

பொருள்:
தன்னை வலிமைப்படுத்தும் வகையை அறிந்து, தன்னை மேம்படுத்திக் காத்துக் கொண்டால் பகைவரிடமுள்ள செருக்கு அழிந்து போகும். 

விளக்கம்:
நாம் போர் செய்யாமல் எமது பகைவரை எப்படி அடக்கி வைக்கலாம் என்பதையும் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இக்குறள் எடுத்துச் சொல்கிறது. ஆதலால்  தமிழராகிய நாம் இத்திருக்குறள் சொல்வதுபோல் செயல்பட்டால் பகைவரின் செருக்கை அடக்கலாம்.  பகைவரை அடக்கி வைப்பதற்ற்கு, முதலில் நம் பகைவரைவிட, எம்மை நாம் எப்படி வலிமை மிக்கவராக ஆக்கிக்கொள்ளலாம் என்னும் வழியை கண்டறிய வேண்டும். அதுவே வகையறிதலாகும். 

நாம் கண்டறிந்த வழிமூலம் எம்மை வலிமை உடையோராக உயர்த்திக் கொள்ளவேண்டும். அதாவது எமது பகைவரைவிட அறிவிலும், உள்ளத்திடத்திலும், உடல் உறுதியிலும், பொருட் பெருக்கத்திலும், படை வீரத்திலும்  மிகுந்தோராக எம்மை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே தற்செய்தலாகும். அத்தகைய ஆற்றல்கள் மட்டும் இருந்தால் போதாது. அவற்றைப் பயன்படுத்தி எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும். பகைவரால் அழிக்க முடியாமல் எம்மைத் திறமையுடன் தற்காத்துக் கொண்டால் பகைவரிடம் இருக்கும் செருக்கு அழிந்துவிடும். 

 எம்மை எவரும் வெல்லமுடியாது, எவரையும் எளிதாக வெல்வோம் என இறுமாந்திருத்தலே பகைவரிடம் உள்ள செருக்காகும். அந்த செருக்கை இல்லாமல் செய்வதற்கு எதிரியை வெல்லும் வழிவகையை அறிந்து, எமது வலிமையை கூட்டி எம்மை நாம் பாதுகாத்துக் கொண்டால் எதிரியின் இறுமாப்பு மாண்டு போகும் என இக்குறள் மூலம் பகைவரின் செருக்கை அழித்து ஒழித்து தமிழர் தலைநிமிர்ந்து வாழும் வழியை திருவள்ளுவர் சொல்லிச் சென்றுள்ளார்.

No comments:

Post a Comment