Monday 15 April 2013

மனதில் பற்றிப்பிடித்து வாழுங்கள்!



கடவுள் எப்படி இருப்பார்? கறுப்பா? சிவப்பா? உயரமா? குள்ளமா? மண்ணா? பொன்னா? எங்கே இருப்பார்? நீரில்? நிலத்தில்? நெருப்பில்? ஆகாயத்தில்? காற்றில்? கடவுளை அளப்பது எப்படி? மீற்றரால் நீட்டி அளக்க முடியுமா? லீற்றரில் முகந்து அளக்க முடியுமா? கிராமில் நிறுத்து அளக்க முடியுமா? கோயில் குருக்கள்மார் செய்யும் மந்திரங்களால் அளக்க முடியுமா? ஆகமங்கள், வேதங்கள் சொல்கின்றன என்று நாத்தழும்பேறச் சொல்கிறார்களே அந்த நூல்கள் கடவுளை அளந்து அறிந்து விட்டனவா? சித்தாந்தமும் வேதாந்தமும் இப்படிச் சொல்கின்றன என்று பசப்புகின்றார்களே அவை கடவுளை அளந்து கூறிவிட்டனவா? அண்ட கோளங்களை நுணுகி ஆராய்ந்து கொண்டு இருபத்து ஓராம் நூற்றாண்டில் வாழும் நாம் கடவுளை அளந்து அறியும் வழியை அறிந்து விட்டோமா? எப்படித்தான் இறைவனை அறிவது? 

மூன்று வயதுக் குழந்தையாக இருந்த போதே கடவுள் உண்டு என்று ஓர் எண்ணம் உண்டாகி தன் சிந்தையில் உணர்ந்த இறைவனை தன் தந்தைக்கும் உணர்த்தியவர் திருஞானசம்பந்தர். தான் அளந்து அறிந்த இறைவனின் தன்மையை அவர்பாடிய தேவாரங்களில் கூறியிருக்கிறார். அதில் ஒன்றைப் பார்ப்போமா?

‘நற்குணம் மிக்கோரே! காரணங்களாலும், மேற்கோளாலும் இறைவனை இப்படிப்பட்டவன், அப்படிப்பட்டவன் என்று சோதித்து அறியவேண்டாம். இறைவனின் அன்பை மனதில் பற்றிப்பிடித்து வாழுங்கள். பெரும் துக்கம் நீங்கி போகும். சோதியாய் சுடர்விட்டு விளங்கும் எம்மிறைவனிடம் வந்து சேருங்கள்”

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள்சோதி
மாதுக்கம் நீங்கல்உறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கள்மிக்கீர் இறையே வந்து சார்மின்களே!           
                                                         - (ப.திருமுறை: 3: 54: 5)

ஏதுக்களாலும் [காரணங்களாலும்] எடுத்த மொழியாலும் [மேற்கோளாலும்] மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள்சோதி
மாதுக்கம் [பெருந்துக்கம்] நீங்கல்உறுவீர்[நீங்கிப் போகும்] மனம்பற்றி [மனதில் பற்றிப்பிடித்து] வாழ்மின்
சாதுக்கள்மிக்கீர் [நற்குணம் மிக்கோரே!] இறையே வந்து [இறைவனிடம் வந்து] சார்மின்களே [சேருங்கள்]!  

ஆராய்ந்து பார்க்கும் எங்கள் அளவைக்கு அப்பாற்பட்டவன் இறைவன். அன்பை அளந்தறிய முடியுமா?  அன்பை உணர்வது போல இறைவனை எமது மனதால் உணர்ந்து அறியவே முடியும். கோயிலிலும் குளத்திலும் தேடுவதைவிட எமது மனதில் தேடினால் உடனே கிடைப்பார்.

இறைவனைக் காண்பதற்காக கோயில்களிலும், ஆச்சிரமங்களிலும் சுவாமிமாரிடமும் சென்று முகத்தில் இருக்கும் கண்கொண்டு தேடிப்பார்ப்போரை திருமூலர் மூடர்காள்! என விழித்துக் கூப்பிட்டு, மனதில் இருக்கும் மனக்கண்ணால் பார்த்து ஆனந்தம் அடையச் சொல்கிறார். அதனை 
“முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்”               
                                                             - (திருமந்திரம்: 2944)
என்று திருமந்திரமாகத் தந்திருக்கிறார்.

எனவே நாமும் எமது மனக்கண்ணால் - அகக்கண்ணால் இறைவனை உணர்ந்து அறியலாமே!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment