Monday, 29 April 2013

அடிசில் 53

பால் அப்பம்

                              - நீரா -




















தேவையான பொருட்கள்:
குருணலான அரிசிமா [ground rice flour] - 1¾ கப்
பிரட் மிக்ஸ் [bread mix] - 1 கப்
சிவத்த அரிசிமா - ¼ கப் 
தடித்த தேங்காய்ப் பால்  -  3 கப் 
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1. அரிசிமாக்களுடன் பிரட் மிக்சைக் கலந்து உப்பும் சேர்த்து தண்ணீர் விட்டு இறுக்கமில்லாது பிசைந்து வைக்கவும்.
2. பிசைந்த மாவை 5 - 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
3. புளித்த மாவிற்குள் அரைக் கப் தேங்காய்ப்பாலும் தண்ணீரும் விட்டு கரைத்துக் கொள்க.
4. மெல்லிய நெருப்பில் நொன் ஸ்டிக் அப்பச்சட்டியை சூடாக்கி குழிக்கரண்டியால் ஒரு கரண்டி கரைத்த மாவைவிட்டு, அப்பச்சட்டியைத் தூக்கி சரித்து வட்டமாக அப்பம் போல்வர சுற்றி, மீண்டும் அடுப்பில் வைக்கவும்.
5. அந்த மாவின் மேல் முக்கால் மேசைக்கரண்டி தேங்காய்ப் பால் விட்டு மூடியால் மூடி வேகவிடவும்
6. இரண்டு நிமிடங்களின் பின்பு அப்பம் வெந்திருப்பதைப் பார்த்து இறக்கவும்.

குறிப்பு:
தேங்காய் பால் பொடியை [coconut milk powder] தண்ணீர் விட்டு கரைத்து, தேங்காய்ப் பால் எடுத்தும் அப்பம் சுடலாம்.

Sunday, 28 April 2013

மரமுடன் மரம் எடுப்போமா!

ஆலத்தி எடுத்தார்


கவி உள்ளம் கொண்டோருக்கு விடுகதை சொல்லும் விடுகவிதையாக இருக்கும் தனிப்பாடல் ஒன்றைப் பார்ப்போம்.

“மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று வளமனைக்கு ஏகும் போது
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்”              
                                                        - தனிப்பாடல்

சுந்தரகவிராயர் மரம் என்ற சொல்லை பதினொரு இடங்களில் வைத்து இத்தனிப்பாடலை இயற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இப்பாடலில் அரசமரம், மாமரம், வேலமரம், வேங்கைமரம், ஆலமரம், அத்திமரம்  ஆகிய ஆறு மரங்களை வைத்து ஒரு சிறுகதையை சுந்தரகவிராயர் கூறியுள்ள பாங்கு போற்றுதலுக்கு உரியது.

பெருங்காடு. அங்கே வாழ்ந்த வேங்கை ஒன்று அருகே இருந்த சிற்றூர்களில் சென்று குடிசையில் வாழ்ந்த மனிதர்களை கொன்று குவித்தது. அதனைக் கேள்விப்பட்ட அரசன் அவ்வேங்கையைக் கொல்லப் புறப்பட்டு சென்றான்.



சுந்தரகவிராயர், அரசன் வேங்கையைக் கொல்லப்புறப்பட்டுச் சென்றதையும், அவன் வேங்கையை வேலால் குத்திக் கொன்று, வெற்றிவாகையுடன் மீண்டதற்கு அரசமகளிர் ஆலத்தி எடுத்ததையும் கண்டார். தாம் கண்டதை இப்பாடலில் பாடியுள்ளார். மீண்டும் ஒருக்கால் பாடலை படித்துப் பாருங்கள் புரிகிறதா?

"மரமது(அரசன்) மரத்திலேறி(குதிரையில் ஏறி) மரத்தை(வேலை) தோளில் வைத்து
மரமது(அரசன்) மரத்தைக்(வேங்கையை) கண்டு மரத்தினால்(வேலால்) மரத்தைக்(வேங்கையை)குத்தி
மரமது(அரசன்) வழியே(வந்தவழியே) சென்று வளமனைக்கு(அரண்மனைக்கு) ஏகும் போது
மரமது(அரசன்) கண்ட மாதர் மரமுடன்(ஆல) மரம்(அத்தி) எடுத்தார்”  

‘அரசன் குதிரையில் ஏறி வேலைத் தோளில் வைத்துக் கொண்டு சென்றான். அரசன் வேங்கையைக் கண்டு வேலால் வேங்கையைக் குத்திக் கொன்று, வந்தவழியே தன் அரண்மனைக்குச் சென்ற போது அரசனைக் கண்ட பெண்கள் ஆலத்தி எடுத்தனர்’ என்பதே இத்தனிப்பாடலின் கருத்தாகும். 

மரமது என்பது அரசமரத்தை குறித்து அரசனை சுட்டி நிற்கிறது. மரத்திலேறி என்பது மாமரத்தைக் குறித்து மா எனும் குதிரையைச் சுட்டி நிற்கிறது. மரமதை என்பது வேலமரத்தைக் குறித்து வேலைச் சுட்டி நிற்கிறது. மரத்தை என்பது மேங்கைமரத்தைக்  குறித்து வேங்கையைச் சுட்டி நிற்கிறது. மரத்தினால் வேலால் வேங்கையைக் குத்தி, அரசன் வந்த வழியே திரும்பி  வளமனைக்கு சென்ற போது அரசனைக் கண்ட மாதர் (பெண்கள்) மரமுடன் ஆலமரமுடன் மரம் அத்திமரத்தை எடுத்தனர். அதாவது [ஆல் + அத்தி = ஆலத்தி] ஆலத்தி எடுத்தனர்.
இனிதே,
தமிழரசி.   

Saturday, 27 April 2013

கிளிநொச்சி மருவும் கோயில் மகிழ்ந்தருளே!

கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்

                                      - இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன்











பழமுதிர் சோலைக் கள்ளழகர் பண்பில்
          வளர்ந்த வள்ளிமலர்
பரவப் பரிந்து பரங்குன்றப் பதியைநீக்கி
          யுவந்து வந்து
கிளமுதி ரிளமை வேட்டுருவங் கிளரத்
          தாங்கி மரமாகிச்
கீதம்பாடும் நாரதரின் கேலிக் கிரங்கி
          அலந்து நொந்து
மழமுதிர் களிறா வரும்வண்ணம் வனத்தே
          தமையன் றனையழைத்து
மன்னன் நம்பிமகள் மணத்தை மருவி
          மகிழ்ந்த மணவாளா!
வளமுதிர் நன்னீ ரிரணைமடு வாய்க்கால்
          வழிந்தே நெல்விளையும்
வளஞ்சூழ் நகரக் கிளிநொச்சி மருவும்
          கோயில் மகிழ்ந்தருளே!

Thursday, 25 April 2013

மனதிற்கு ஓர் உபதேசம்

தெய்வம் உண்டென்று இரு!


மனிதமனம் ஒரு குரங்கு போன்றது. அது நிலையாக ஓர் இடத்தில் நிலைத்து நிற்காது. குரங்கு கிளைக்கு கிளை, மரத்திற்கு மரம் தாவித்திரிவது போல மனமும் எமது ஆசைகளுக்குத் தக்கபடி ஒன்றைவிட்டு மற்றதற்கு தாவித்திரியும். அப்படித் தாவித் தாவி அலைபாய்ந்து திரியும் மனதிற்கு எவராவது உபதேசம் செய்து அடக்கி வைக்க முனைந்திருக்கிறார்களா? 

தன் மனதிற்கு உபதேசம் செய்தவர்களில் சிவவாக்கியரும் ஒருவராவார். ‘மனமே! மனிதகுலம் ஒன்று. தெய்வமும் ஒன்றுதான். தெய்வம் உண்டு என்பதை நம்பு. பெரிய செல்வம் எல்லாம் என்றும் நிலைத்து இருப்பவை அல்ல. ஆதலால் செல்வத்தை போற்றாது இரு. பசித்தவர்கட்கு தேவையான உணவைக் கொடுத்துக் காப்பாற்று. நல்ல அறச்செயல்களும் நட்பும் நன்மை தரும் என்பதை நினைவில் வைத்துக் கொள். எப்பொழுதும் நடுநிலைமையில் இருந்து நீங்காதே. எமக்கு எது கிடைக்குதோ, அது போதும் என்று எண்ணிக் கொள். இதுவே நான் உனக்குச் செய்யும் உபதேசமாகும்.’ என்று அவர் கூறியுள்ளார்.

சிவவாக்கியர் அவரின் மனதிற்கு செய்த உபதேசத்தை நீங்களும் படித்துப்பாருங்கள்.

“ஒன்று என்று இரு தெய்வம் உண்டு என்று இரு 
             உயர் செல்வம் எல்லாம் 
அன்று என்று இரு பசித்தோர் முகம் 
             பார்நல் அறமும் நட்பும் 
நன்று என்று இரு நடு நீங்காமலே 
             நமக்கு இட்டபடி
என்று என்று இரு மனமே 
             உனக்கு உபதேசம் இதே!

சிவவாக்கியர் தமது மனதிற்குச் சொன்ன உபதேசத்தை நாமும் எமது மனதிற்குச் சொல்லலாமே!
இனிதே,
தமிழரசி.

Wednesday, 24 April 2013

அலைமோதும் வாழ்க்கை.




அலைமோதும் வாழ்க்கை மனிதனுக்கு கற்றுத்தந்த பாடங்கள் கோடானு கோடியாகும். இன்பமும் துன்பமும், சிரிப்பும் அழுகையும், பெருமையும் சிறுமையும், செல்வமும் வறுமையும் எனப் பல வகையான இரு கோடுகளுக்கிடையே மனித வாழ்க்கை அலை மோதுகின்றது. ஒன்று மேலே கொண்டு சென்றால் அக்கணமே இன்னொன்று கீழே இழுத்து வருகின்றது. இந்த அலை மோதுதல் இல்லாமல் எப்போதும் மனிதன் மேலே மேலே சென்றிருந்தால், அவன் அன்பை உணராது, அறிவைத் தேடாது என்றோ மமதையால் அழிந்து ஒழிந்திருப்பான். அலைமோதும் வாழ்க்கை மனிதர்களாகிய எம்மை வாட்டி வதைக்கின்றது என நினைப்பது தவறு. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அலை மோதல்கள் எம்மை செதுக்கி எடுக்கின்றன.

மனிதன் விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த காலத்தில் இருந்து இன்றுவரை எத்தனை எத்தனை கோடி இன்பதுன்ப அலைமோதல்களை சந்தித்திருப்பான். அந்த அலைமோதல்களை எல்லாம் பொருட்படுத்தாது துணிந்து எதிர் நீச்சல் போட்டு விலங்குகளை வென்றதோடு, இயற்கையையும் மெல்ல மெல்ல வெல்ல முயல்கின்றான். இயற்கையை வென்றதன் முதற்படி நிலைகளாக உணவை வேகவைத்து உண்ணத் தொடங்கியதையும், ஆடை அணியத் தொடங்கியதையும், தனக்கென வீடு கட்டும் பொறிமுறையை வகுத்துக் கொண்டதையும் கூறலாம்.

அலைமோதிய வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடங்களில் இருந்தே பண்டைய மனித இனக்குழுக்கள் தத்தமக்கு என பண்பாடுகளை வகுத்துக் கொண்டன. தாம் வகுத்த அந்த பண்பாடு எனும் வட்டத்துள் அவை வாழ்ந்தும் வந்தன. கால ஓட்டம் மனிதன் வகுத்த பண்பாடு எனும் வட்டத்தை மெல்லமெல்லத் தகர்த்து எறிந்தது. அது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. மனித இனங்களின் பண்பாடுகள் மாறுபடினும் மனிதத்தன்மை என்றும் மாறுபடுவதில்லை. அது எந்த மனிதனுக்கும் பொதுவானதே. பல இனக்குழுக்களாக உலகெங்கும் பிரிந்து தத்தமது பண்பாடுகளுடன் வாழ்ந்த மனித இனம், இன்று உலகமயமாக்கலால் பின்னிப் பினைந்து ஒன்றோடு ஒன்று கலக்கின்றது.

அதற்கான காரணம் என்ன? தத்தம் பண்பாடு எனும் தனித்தன்மையோடு வாழ்ந்த மனித இனக்குழுக்களை இயற்கையின் சீற்றம் சீறிப்பாய்ந்து அழித்தது. அந்த அழிவுகளுக்கு தப்ப அவன் தானிருந்த இடம்விட்டு, இடம் பெயர்ந்து செல்லவேண்டி வந்தது. அப்படி நடந்த இடப்பெயர்வுகள் பண்பாட்டு மோதல்களாய் வெடித்து மனிதனை மேலும் சிதறிடித்தன. அறிவும் ஆற்றலும் உள்ளோர் பிழைத்துக் கொண்டனர். அவர்களையும் கயவர்கள் கொன்றொழித்தனர். அதனால் மனிதன் அலைமோதும் வாழ்க்கையில் தடுமாறி தத்தளித்து வாழக்கற்றுக் கொண்டான்.

இயற்கை மனிதனுக்கு கற்றுத் தந்த பாடங்களிலே மிக முக்கியமான பாடம் விழுவதும் எழுவதும். நம் குழந்தைப் பருவத்தில் எத்தனை முறை எழுந்தும் விழுந்தும், விழுந்தும் எழுந்தும் இருக்கிறோம். எழுந்தவன் விழுவதும், விழுந்தவன் எழுவதும் இயற்கை கற்றுத்தந்த பாடமல்லவா? அப்படி இருக்க அலைமோதும் மனித வாழ்க்கைப் போராட்டத்தில் நாம் துவண்டு போகலாமா?

இந்த அலைமோதும் வாழ்க்கைக்கிடையே பெரிய சுழிகளும், சூறாவளிகளும், எரிமலைகளும், பூகம்பங்களும் ஏன் ஆழிப்பேரலை கூட அடுத்தடுத்து கணத்துக்குக் கணம் வரலாம். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என திருவள்ளுவர் சொன்னது போல அவற்றை எல்லாம் சிரித்த முகத்துடன் எதிர்கொண்டு வாழ்வதே மனித வாழ்வாகும். 
இனிதே, 
தமிழரசி.

Tuesday, 23 April 2013

உலகுயிர் நேயம் வேண்டுவீரேல்!

மார்கழி மாத மழையதுவால்
மாநில மெங்கும் நீர்ஓட
ஊர்ந்து திரியும் எறும்புகளும்
உணவு இன்றி தாம்வாட
பார்த்து அறிந்த பாவையரும்
பதமாய் அரிசியை இடித்து
மாக்கோலம் இட்டார் மண்மீது
மாவைக் கண்ட எறும்புகளும்
மளமள என்று மாவெடுத்து
மகிழ்ந்து உண்டிருந்தன காண்!

மானுட நேயம் வெந்து
மாண்டதினால் சுண்ணக் கல்லை
மாவாக்கி கோலம் போடும் 
மங்கையர் தாமும் அறியாரோ?
சுண்ணக் கல்லின் மாவதனால் 
மண்ணின் தன்மை பாழாக
மற்றுள உயிர்கள் வீணாகும்
உலகுயிர் நேயம் வேண்டுவீரேல்!
மங்கலக் கோலமிடு நங்கையரே!
மாக்கோலம் இடுவீர் மண்மீதே!
இனிதே,
தமிழரசி.

Monday, 22 April 2013

ஆசைக்கவிதைகள் - 61

ஓட்டைச் சங்கானேன்!

























குதிரைமலைக் கடற்கரையில் சங்குகளை அடுக்கி சிறுயது முதல்இளஞ்சிட்டுக்களாய் விளையாடித் திரிந்த மச்சானும் மச்சாளும், பருவவயதுவர ஒருவரைவிட்டு ஒருவர் மெல்ல விலகினர். மச்சானுக்கோ மச்சாளின் நினைவு மாறாது என்றும் பசுமையாய் இருந்தது. அறியாப்பருவத்தில் அவள் சொன்னவற்றை அவன் உறுதியாக நம்பினான். கடற்கரையில் சங்குகளைப் பார்க்கும் போதெல்லாம் அவளின் நினைவால் அவன் துவண்டு பாதிச்சங்கு போல மெலிந்து போனான். எதற்கும் உதவாத ஓட்டைச் சங்குபோன்ற நிலையில் அவன் வாழ்க்கை நகர்ந்தது. மச்சாள் மேல் காதல் கொண்டதால் தானிருக்கும் நிலையை எண்ணி சங்குகளோடு ஒப்பிட்டு வருந்துவதோடு, மச்சாளை தன்னை ஏமாற்றிய துரோகியாக எண்ணி பாடுகிறான். அவள் ஏமாற்றினாளோ இல்லையோ காதலனின் மனஓட்டத்தை இந்த நாட்டுப்பாடல்கள் நன்கு எடுத்துச்சொல்கின்றன.

மச்சான்: ஓட்டைச் சங்கானேன்
                          உடைந்த சங்கு நீருனேன்
               பாதிச்சங்கானேன் மச்சியுன்மேல்
                           பட்சம்வைத்த நாள் முதலாய்.

மச்சான்: உன் சொல்லில் உறுதி கொண்டேன்
                          உன் பேச்சில் மையல் கொண்டேன்
               உன்னைப் போல் நீலி
                          உலகத்தில் கண்டதில்லை.
                                                          -  நாட்டுப்பாடல் (குதிரைமலை)
                                                            பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

Sunday, 21 April 2013

குறள் அமுது - (62)


குறள்:
“வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு நின்றான் இரவு”                         - 552

பொருள்:
அரசாட்சி என்னும் அதிகாரத்தை வைத்திருப்பவர் பொருள் கேட்பது, வழிபறி கள்வர் வேலைக்காட்டி பொருளைக் கொடு எனப்பறிப்பது போன்றது.

விளக்கம்:
இக்குறள், கொடிய அரசாட்சி நடக்கும் நாட்டில் அரசாங்கம் குடிமக்களைத் துன்புறுத்தி வரி அறவிடுவதை, கொள்ளைக்காரரின் செயலுடன் ஒப்பிட்டுச் சொல்கிறது. வேல் என்பது இங்கு ஆயுதத்தைக் குறிக்கும். கோல் என்றால் நீதி. அரச சேவகர்கள் தண்டணைக் கோலுடன் சென்று குடிமக்களிடம், தொட்டதற்கெல்லாம் வரி செலுத்து எனக் கேட்டு பிடுங்குவதும் வழிபறி கொள்ளைக்காரர் வேலைக்காட்டி வெருட்டிப் பிடுங்குவதும் சமமாகும்.  இரந்து கேட்பதை இரவு என்று சொல்வர். இங்கு  இரவு இரந்து கேட்டல் என்ற பொருளில் வரவில்லை. தொல்லை கொடுத்தல் என்ற கருத்தையே தருகின்றது. இரத்தல் இங்கு அரசாட்சியின் கொடுங்கோன்மையை சுட்டி நிற்கிறது.

வழிபறி கொள்ளக்காரர், தனிவழியே செல்வோரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆயுதத்தைக் காட்டி தெருட்டி, வெருட்டி கையிலுள்ளவற்றைத் தா எனப்பறித்தல் போன்றதே ஒரு நாட்டின் தலைவன் நீதி என்ற பெயரில் ஆட்சி அதிகாரங்களைக் காட்டி, அரச பயங்கர வாதங்களால், அடக்கு முறைகளால் குடிமக்களைத் துன்பப்படுத்தி அவர்களிடமுள்ள பொருட்களைப் பறித்து எடுப்பது. 

கொடுங்கோன்மை நடக்கும் நாட்டில் வாழும் மக்கள் தம் உயிரை, தமது உற்றாரின் உயிரைக்காக்க உடமைகளைக் கொடுப்பர். அந்த மக்களிடமிருந்து ஆட்சியாளர்கள் தம் குடும்பத்தினருக்காகவும், நண்பர்க்காகவும், தம்மோடு கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிக்கும் கூட்டத்தார்க்காகவும் தமது படைபலத்தால் கொலை வெறியர்களைக் கொண்டு பணம், பொருள், பொன், வீடு, நிலம் என்பனவற்றை மட்டும் பிடுங்கி எடுப்பதில்லை. பெண்களையும் உயிரற்ற பொருளாக நினைத்து பறித்து இழுத்துச் செல்வதோடு கடத்தியும் செல்வர்.

கொள்ளைக்காரர் கூட தமக்கு தேவையான பொருள் கிடைத்தால் அது முடியும்வரை மீண்டும் கொள்ளையடிக்கார். ஆனால் அரசுகளோ எந்நாளும், எவ்விடத்தும் தம் ஆட்சி அதிகாரத்தைக்  காட்டும். திருவள்ளுவரின் இந்தக்குறளுக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சிகள் இப்போது இலங்கையில் நாளும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.

Saturday, 20 April 2013

சனிபிடித்திடு காக்கையே!

 
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பெருமையாகக் கூறும் மணிபல்லவமே நயினாதீவு. நயினாதீவின் புகழை தன் பெயரில் தாங்கி, ஈழத்தமிழரின் கவித்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டிய பெரும் புலவர் என என் தந்தையால் அடிக்கடி கூறப்பட்டவர் நயினை நாகமணிப்புலவர். அவர் என் தந்தையின் தனித்தன்மையைக் கண்டு அவரின் மேல் மிகுந்த அன்புள்ள நண்பராக இருந்திருக்கிறார். அதனால் தான் எழுதிய பாடல்களில் பலவற்றை என் தந்தையிடம் கொடுத்திருக்கிறார். அப்பாடல்களை விளக்கி என் தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் 1950 களில் தினகரன் ஞாயிறு வாரமலரில் தொடர்ந்து எழுதி வந்தார் என்பதை நான் அறிந்தேன். எனக்கு அவை கிடைப்பின் பதிவுசெய்வேன்.

நயினை நாகமணிப்புலவர் சிலேடைப் பாடல்கள் முதற்கொண்டு எல்லோராலும் இயற்றமுடியாத 'நீரோட்ட யமக அந்தாதி' உட்பட பலவகைப்பட்ட தமிழ்ப்பாடல்களை இயற்றியுள்ளார். இங்கே அவரது கவித்துவத்தைக் காட்ட எனக்கு தெரிந்த ஒரு பாடலை பதிவு செய்கிறேன்.

அந்நாளைய வாழ்க்கை இயற்கையோடு இயந்ததால் அவரும் இயற்கையில் கண்டவற்றை தமது பாடல்களில் பதிவு செய்திருக்கிறார். இனிமையையும் அழகையும் போற்றும் நாம் அழகின்மையைப் போற்றுவதில்லை. குயிலையும் மயிலையும் புகழ்ந்து ஆகா! ஓகோ! என்போம். அப்படி காகத்தையும் கூகையையும்[ஆந்தை] சொல்வோமா? அது மனிதரின் குணம். புலவராய் இருந்தால் என்ன? யாராய் இருந்தால் என்ன? அது மாறுமா?

காகம் ஒன்று அதிகாலை நான்கு மணி வேளையில் கண்தூங்க விடாது 'கா கா' என்று கரைந்து புலவரின் நித்திரையை கெடுத்துக்கொண்டிருந்தது. புலவருக்கோ தாங்கமுடியாத ஆத்திரம் வந்தது. ஆத்திரத்தை அடக்கி அடக்கிப் பார்த்தார் அது அடங்கவில்லை. எழுந்து வந்து காகத்தை துரத்தினார். காகம் எழுந்து பறந்து சென்று ஒருவட்டம் இட்டு, மீண்டும் வந்து இருந்த இடத்திலே இருந்து 'கா கா' என தன் சங்கீதக் கச்சேரிசையைத் தொடர்ந்தது.

காகாத்தின் கச்சேரியை இரசித்துக் கேட்ட புலவர் அந்த மகிழ்ச்சியில் காகத்தின் பெருமைகளை நீண்ட பட்டியல் இட்டு காட்டுகிறார். 

'சூரிய ஒளியே படாது இருள் சூழ்ந்த அதிகலையில் கா கா எனக் கரைவது; நல்ல இனிமையான மா, பலா, வாழையாகிய முக்கனியும் இருக்க அவற்றை உண்ணாது வேப்பம் பழத்தை தின்பது; குப்பைக் குழியை தேடித்திரிவது; பிணத்தின் மணத்தை விரும்பிச் சென்று கண்ணைப் பிடுங்குவது; ராமர் விட்ட அருகம்புல் அம்புக்கு ஒருகண்ணைக் கொடுத்தது; நரியாரின் பேச்சை நம்பி வாயில் இருந்த வடையையே தப்பவிட்டது; கற்பகதருவான பனைமரத்தில் முட்குவியலை வைத்து சண்டித்தனம் செய்வது. தன்முட்டை என நம்பி குயில் முட்டையை அடைகாப்பது என காகம் மிக்க புகழுடன் இருந்ததால் சனியனும் பிடித்து தன் வாகனமாக வைத்திருக்கிறார் என்பதை மிகநளினமாக ‘சனிபிடித்திடு காக்கையே!’ என நயினை நாகமணிப்புலவர் வாயாரம்புகழும் பாடலை நீங்களும் படித்து மகிழுங்கள்.

கருதுலகு விடியுமுன் வீடுவாசலில் வந்து
          கா காவெனுஞ் செருப்பே
கனிவர்க்கம் உண்ணாது வேப்பம்பழந் தின்னும்
          கடை கெட்ட மூதேவியே
பெருமையுடனே சந்தி எல்லாம் திரண்டு
          பல்வீக் குவியல்தேடு கழிவே
பிணமான மணமெங்கு அங்குசென்றே கண்
          பிடுங்கும் பெரும் பிசாசே
திருமேவு ராமர்விடும் அறுகானசரம் உருவ
          ஒருகண் கொடுத்த பதரே
தரைமீது நரியாரின் மொழிநம்பி ஏமாந்து
          வடைவிட்ட தனி மூடமே
தருவான மரமீது முட்குவியல் வைத்திடுஞ் 
          சண்டித் தனத்துள் மாறே
தன்முட்டை யென்று சிறுகுயில் முட்டை
          காத்திடுஞ் சனிபிடித்திடு காக்கையே!   
இத்தகைய பெரும் பெருமைகளையுடைய காக்கையாரின் புகழை நயினை நாகமணிப்புலவர் போல எடுத்துச் சொல்ல எவரால் முடியும்?
இனிதே,
தமிழரசி.

Friday, 19 April 2013

பெண்ணிற் பெருந்தக்கயாவுள?


-

பெண்மை என்றால் என்ன? அடக்கம், தியாகம், பொறுமை, இரக்கம், அன்பு, அழகு, ஆற்றல் தொண்டு, ஒப்புரவு முதலிய இயல்புகள் சேர்ந்த கலவையே பெண்மை எனப்படும். பெண்மையின் இந்த இயல்புகள் இன்பத்தை தரவல்லன. யாரும் இன்பத்தை இழிவு படுத்துவதில்லை. இதனால் இன்பத்தைத்தரும் பெண்மை பெருமை அடைகிறது.

அரும் பெரும் தத்துவ முத்துக்களை உலகிற்கு தந்த வள்ளுவரே ‘பெண்ணிற் பெருந்தக்கது யாவுள?’ என வியக்கின்றார். உலகில் பெண்ணைவிடப் பெருமை பெற்றவை வேறு எவை இருக்கின்றன? எனத் தன்னையே கேள்வி கேட்டு வியந்தவர், கற்பே அதன் பெருமைக்கு காரணம் என்றும் கூறுகிறார்.
நீதிசாஸ்த்திரம் எழுதிய மனு - ‘எங்கு பெண்களை வணங்குகிறார்களோ அங்கு தேவதைகளின் ஆலயங்கள் தானாக உண்டாகின்றன என்றும் தந்தையாயினும் சரி, கணவன் என்றாலும் சரி, சகோதரன் என்றாலும் சரி பெண்களுக்குத் தகுந்த மரியாதை கொடுக்க வேண்டும் என்று நீதி கூறியவர், ஒரு குலம் உயர்வடையவும், மற்றோரால் அறியப்படவும் பெண்ணே காரணமாக விளங்குகிறாள்’ என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

மனு மட்டும் பெண்ணின் பெருமையைப் போற்றவில்லை. இவற்றிற்கு ஒருபடி மேலே சென்று வேதகாலத்தில் வேதநூல் வல்லவர்கள் பலர் பெண்ணின் பெருமைக்கு தலைவணங்கி இருக்கிறார்கள். வேதகால மாமேதையான ‘யாக்ஞவல்லர்’ என்பவரிடம் ‘வாசக்னவி கார்கி’ என்பவள் 'பிரம விடயம்' [இன்றைய பௌதிகவிஞ்ஞானம்] கூறும் சக்திகளின் இரகசியம் (energy) பற்றி தர்க்கம் செய்து தர்க்க அரசி எனப்பட்டம் பெற்றாள்.

கார்கியின் அண்ணன் மகளான மைத்திரேயி உலகத்திலேயே மிகவும் அத்தியாவசியமான சக்தி, பெண்சக்தி என்றும் அது பெண்களிடமே உண்டு எனவும் நிலைநாட்டினாள். அவளின் ஆற்றலுக்கும், பெருமைக்கும் தலைவணங்கிய யாக்ஞ்வல்லர் அவளை திருமணம் செய்து மகிழ்ந்தார். வேதகால பெண்களின் முதன்மை இத்தனை சிறப்புடையதாக இருப்பதால் அதற்கு முன்பும் பெண் பெருமை மிக்கவளாகவே இருந்திருப்பாள். 

திருமூலரும் உலகின் சக்தி பெண் என்பதை மிக அழகு தமிழில்
பெண்கொடியாக நடந்தது உலகே"            - (திருமந்திரம்: 1143)
என திருமந்திரம் செய்திருக்கிறார். 

உலகமே கொடிபோன்ற பெண்ணாலே இயங்கிச் செல்கிறது என்பது அவர் கருத்து. ஆணுலகம், பெண்ணுலகம் என்ற பாகுபாடு இன்றி உலக இயக்கம் பெண்மையிலேயே தங்கி இருக்கிறது. இதைவிடப் பெண்ணின் பெருமைக்கும் முதன்மைக்கும் சான்று வேண்டுமா? 

உலக ஆக்கத்திற்கு உரிய தாய்மை பெண்ணிடமே உண்டு. அது அவளது தொண்டின் சிறப்பை எடுத்துக்காட்டும். பயன் கருதாது செய்யப்படும் பணியே தொண்டாகும். தாய் எதனையும் பயன் கருதிச் செய்வதில்லை.

“ஈன்றாளின் என்ன கடவுளும் இல்”             - (நான்மணிக்கடிகை: 55)
என்கிறது நான்மணிக்கடிகை.

தான் பெற்ற குழந்தை சான்றோனாய், கல்வியாளனாய், வல்லவனாய், நல்லவனாய், அன்பானவனாய் உலகில் வாழவேண்டும் என நினைப்பவள் தாய். பெண்மையின் மலர்ச்சியே தாய்மையாகும். இதனாலேயே பெண் இல்லாள் இல்லத்தரசி எனப் போற்றப்பட்டாள். இல்லத்துடன் அவளின் பெருமை நின்றுவிடவில்லை. தாய்மொழி, தாய்நாடு, தாய்க்கண்டம் என்று உலகளவில் பெண்ணின் பெருமை பரந்து விரிகின்றது.

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்”                                 - (திருக்குறள்: 505)
என்பது திருக்குறள். அவரவர் செய்யும் செயலே அவர்களது பெருமைக்கும் சிறுமைக்கும் காரணமாகும். தன்னலம் கருதாமல் தொண்டாற்றுபவள் பெண். அதனால் வள்ளுவர் கூற்றுப்படி பெண்ணின் செயலே பெண்ணின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறது. 

பெருமைக்குணம் எப்படி இருக்கும் என்பதையும் திருவள்ளுவர்
“பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்”                              - (திருக்குறள்: 979)
என்ற குறளில் தெளிவாகச் சொல்கிறார்.

புகழில், பணத்தில் மிக்க உயர்வாக வாழ்ந்தாலும் செருக்கடையாது வாழ்வதே பெருமையாகும். சிறப்பே இல்லாத வாழ்விலும் செருக்கின் உச்சியில் வாழ்வது சிறுமையாகும் என்கின்றது இக்குறள். ஆதலால் எல்லாச் சிறப்புக்கள் இருந்தும் அதை இயல்பெனக் கொண்டு வாழ்வதே பெருமையாகும்.

ஞாலம் சொற்கேட்க வேண்டுமானால் - உலகம் ஒருவனின் சொல்லைக்கேட்டு அவன் பின்னே செல்ல வேண்டுமானால் அவனிடம் பெண்தன்மை இருக்க வேண்டும். அறிஞர்களை, மெய்ஞானியர்களை, பாவலர்களை பார்த்தாலே இது புரியும். புத்தன், ஜேசு, ஆதிசங்கரர் போன்ற பெரியோர்களிடம் ஆண்மையைவிடப் பெண்மைக் குணங்களே ஓங்கி இருந்தன. அதனாலே உலகம் அவர்கள் சொற்கேட்டு அவர்கள் பின் சென்றது. இரக்கமும் கருணையும் எவனிடம் இருக்கிறதோ அவனிடம் பெண்மைக் குணம் முன்னிற்கும்.

இறைமையிலும் இயற்கையிலும் முதன்மை பெற்றுள்ள பெண்ணிற்கு பெருமையை எவரும் வழங்க வேண்டியதில்லை. அப்பெருமை இயல்பாகவே பெண்ணிடம் அமைந்திருக்கிறது. பெண்ணின் பெருமை காக்கவே ஆண்மகன் பிறக்கின்றான். பெண்ணில்லையேல் அன்பேது? இன்பமேது? உயிரேது? உலகேது? உலகிற்கு வேண்டிய மெஞ்ஞானியரை, விஞ்ஞானியரை, தத்துவஞானியரை எல்லாம் உருவாக்கி உவந்து அளிப்பவள் பெண். இதனாலேயே பெண் ‘சக்தி’ என்ப்போற்றப்பட்டாள்.

அவளது சக்தி இல்லாவிட்டால் உலக இயக்கம் ஏது? உலகில் உள்ள அனைத்துச் சக்தியினதும் பிறப்பிடம் பெண்ணே. பெண்ணின் பெருமை அறிந்தே, பெண்ணைச் சிறுமை செய்தோர் வாழ்ந்த காலத்தில் தோன்றிய பாரதி, “பெண்மை வாழ்க என்றும் வெல்க என்றும் கூத்திடுவோமெடா!” எனப்பாடி ஆனந்தக் கூத்தாடினார்.

உலகின் அதிஉன்னத சக்தியான கடவுளையே திருஞானசம்பந்தர்
“பெண்ணார் திருமேனிப் பெருமான்” என்றும்
“பெண்ணியலுருவினர்” எனவும் போற்றி வணங்குகிறார்.

“உலகு என்பது உயர்ந்தோர் மாட்டே” என்பது தொல்காப்பியரின் வாய் மொழியாகும். ஆதலால் உயர்ந்த அறிஞர்கள் உள்ள உலகு வாழும் வரை பெண்ணின் பெருமை பேசப்படும்.

இனிதே,
தமிழரசி. 
(1998 - 'கலசம்' இதழிற்கு சாலினி என்ற பெயரில் எழுதியது.)