Sunday 4 March 2012

நான் உறங்கக் கூடுதில்லை


புங்குடுதீவில் வாழ்ந்த இளம்பெண் ஒருத்தியின் காதலன் ஒருவன் அவளைத் திருமணம் செய்வதற்காக பொருள்தேட வெளிநாடு சென்றுவிட்டான்.  அவளின் எண்ணம் முழுவதும் அவனது நினைவே சுழன்று வந்ததால், தான் உறங்காது விழித்திருப்பதை அவள் உணரவில்லை. திடீரென தன் நினைவு வந்து வீட்டில் உள்ளோரைப் பார்க்கிறாள் எல்லோரும் உறங்கிவிட்டார்கள். வீட்டுக்கு அருகேயுள்ள வெட்டைவெளியில் வாழும் குருவிகள் பூச்சி புழுக்கள் கூட எதுவித சத்தமும் இன்றி உறங்கிவிட்டன. அவள் வாழும் நாடும் கூட உறங்கிவிட்டது. ஆனால் அவளால் மட்டும் உறங்கமுடியவில்லை. எனவே அவள் தன் கண்ணுக்கு தன் நிலையைக் கூறுகிறாள். காதலனின் பிரிவால் தவித்த இளம் பெண்ணின் உறக்கமின்மை எமக்கு ஈழத்து  நாட்டுப் பாடல் ஒன்றை தந்திருக்கிறது. 
பெண்:  வீடும் உறக்கம் வெட்டை
                        எல்லாந்தான் உறக்கம் 
            நாடும் உறக்கம் கண்ணே!
                        நானுறங்கக் கூடுதில்லை.
                                     - நாட்டுப்பாடல் (புங்குடுதீவு)
                                                  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

இவளைப் போலவே சங்க காலக்காதலி ஒருத்தியும் திருமணம் செய்வதாகக் கூறிப்பிரிந்து சென்ற தன் காதலன் நினைவால் நித்திரை இன்றித் தவிக்கின்றாள். இரவு முழுவதும் அவள் தூங்கவே இல்லை. காலையில் எழுந்து வந்த தோழி, அவளின் தூங்காத கண்களைப் பார்த்ததும்  அவளிடம்’ நீ இரவு தூங்கவில்லையா?’ எனக்கேட்கிறாள். அதற்கு அவள் ‘நள்ளிரவு நேரமாக மனிதர்களும் பேசாது நன்றாக தூங்கிவிட்டனர். பரந்த இவ்வுலகமும் தூங்கிவிட்டது. ஓஒ....[என்ன கொடுமை] நான் மட்டுமே தூங்காதிருந்தேன்’ எனக்கூறுகிறாள். 
அக்காட்சியை பதுமனார் எனும் சங்ககாலப் புலவர் 
“நள்ளென் றன்றே யாமம் சொல் அவிந்து
 இனிது அடங்கினரே மாக்கள் முனிவின்று
 நனந்தலை உலகமும் துஞ்சும்
 ஓஒ யான் மன்ற துஞ்சாதேனே”                         - (குறுந்தொகை: 6)

எனத் சங்க இலக்கியப் பாடலாக எமக்குத் தந்திருக்கிறார். 

காலங்கள் மாறினாலும் காதலால் வரும் ஏக்கம், சலிப்பு ஆகிய மனிதப்பண்புகள் மாறாது தொடர்கின்றன.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment