Thursday 15 March 2012

திண்ணனார் பரிவு


பண்டைய தமிழ்ப்பெண் புலவர்களிலே மிகவும் ஆழ்ந்த அற்புதமான கருத்துக்களை தந்தவர்களில் ஔவையாரும் ஒருவர். எடுத்துக்காட்டுக்களைக் கூறி தன் கருத்துக்களை மற்றையோர் இலகுவாகப் புரிந்து கொள்ள வைத்தவர். வைரமானவை  மென்மை ஆனவையை வெல்லமுடியாது என்பதை ஔவையார்.

"வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவும் கோல் பஞ்சில்பாயாது - நெட்டிரும்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்" 
எனக்கூறியுள்ளார். யானையின் உடம்பினுள் ஊடுருவிச் செல்லும் வேல் பஞ்சுப்பொதியினுள் பாய்ந்து செல்லாது. நீண்ட கடப்பாரைக்கு பிளவாத கருங்கற் பாறைகூட பச்சை மரத்தின் வேர் ஊடுருவிச் செல்லக் கரையும். ஆதலால் வன்மையால் மென்மையை வெற்றி கொள்ள இயலாது.

மென்மையானவற்றிலே அதிகம் மென்மையானது அன்பே. அன்பின் அளவு கடந்த ஆற்றலுக்கு கருங்கற் பாறையும் குருதி சிந்தும். கருங்கல்லும் குருதி சிந்துமா! வியப்பாக இருக்கிறதா? அதனை நான் சொல்லவில்லை. சேக்கிழார் சொல்லி இருக்கிறார். 

கண்ணப்ப நாயனார் வரலாற்றில் கருங்களால் ஆன இலிங்கத்தின் கண்ணிலிருந்து தானே குருதி வழிந்தோடியது. அந்தக் கருங்கற் கண்களில் குருதி சிந்தக் காரணம் திண்ணன் என்ற இயற்பெயருடன் பிறந்த கண்ணப்ப நாயனாரின் அளவுகடந்த பேரன்பு அல்லவா? 

  திருக்காளத்தி 
திருக்காளத்தி இறைவர் முனிவனாகிய சிவகோசரியாருக்கு திண்ணனின் அன்பின் ஆழத்தைக் காட்ட அச்சத்தை உண்டாக்கக் கூடியவாறு தனது ஒரு கண்ணிலிருந்து குருதி பாய்ந்தோடச் செய்தார். கொடிய வில்லையுடைய திண்ணனார் அதனை தூரத்திலிருந்து கண்டு மிகவும் விரைவாக ஓடிவந்தார்.
“அண்ணலார் திருக்காளத்தி அடிகளார் முனிவனார்க்கு
திண்ணனார் பரிவு காட்டத் திருநயனத்தில் ஒன்று
துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அவ்
வண்ணவெஞ் சிலையார் கண்டு வல்விரைந் தோடி வந்தார்.”   
                                                                             - (பெரியபுராணம்: 16: 164)
என கண்ணப்ப நாயனார் வரலாற்றில் சேக்கிழார் கூறியுள்ளார். 

நெஞ்சில் அன்பென்னும் இன்ப ஊற்று சுரப்பவர் கண்களுக்கு குருதி கல்லில் இருந்து வழிந்தால் என்ன? புல்லில் இருந்து வழிந்தால் என்ன? யாவும் ஒன்றே. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? 
இனிதே,
தமிழரசி. 

சொல்விளக்கம்

1.  வெட்டனவை  -  வைரமானவை                             
2.  மெத்தனவை  -  மென்மையானவை
3.  வேழம்  -  யானை                                                    
4.  பட்டுருவும் கோல்  -  வேல்
5.  நெட்டிரும்பு  -  நீண்ட இரும்பு                                 
6.  நெட்டிரும்புப் பாரை  -  நீண்ட இரும்புக் கடப்பாரை
7.  நெக்குவிடா  -  கரையாத / பிளவாத                         
8.  நெக்குவிடும்  -  கரையும்
9.  துண்ணென  -  அச்சம் தர                                       
10.  உதிரம்  -  குருதி
11. வண்ணவெம்  -  அழகிய கொடிய                            
12.  சிலை  -  வில்

No comments:

Post a Comment