Sunday 11 March 2012

குறள் அமுது - (25)



குறள்:
“இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்”                             - 851
பொருள்:
இகல் என்பது எல்லா உயிர்க்கும் பிரிவு எனும் கெட்டகுணத்தை வளர்க்கும் ஒரு நோயாகும்.
விளக்கம்:
திருவள்ளுவர் இக்குறளில் இகல் என்பது ஒரு நோய் என்கிறார். உலகில் உள்ள ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொருவிதமான குணமுண்டு. அந்த நோய்களின் குணத்தைக் கொண்டே வைத்தியர் என்ன நோய் என்பதைக் கண்டுபிடிப்பர். திருவள்ளுவரும் ஒரு வைத்தியர் போல  உயிர்கட்கு கெட்டகுணத்தை வளர்க்கும் [பாரிக்கும்] நோய் இகல் என்றும், அது எல்லா  உயிர்களிடையேயும் பிரிவை [பகல்] உண்டாக்கி கெட்டகுணமான பண்பில்லாத் தன்மையை வளர்க்கும் என்றும் கூறி அந்நோயின் அறிகுறியை, இயல்பை எமக்குச் சொல்லித்தந்துள்ளார். 
எந்தப் பழக்கத்தால் எமக்குக் கேடு வருமோ அதைச் செய்யத்தூண்டும் மன எண்ணமே கெட்ட குணமாகும். குடிப்பவரைக் குடிக்கத் தூண்டுவதும், களவெடுப்பவரை களவெடுக்கத் தூண்டுவதும் கெட்டகுணமே. பிறர்மேல் ஏற்படும் வெறுப்பும் இக்குணங்களில் ஒன்றே. உயிர்களிடையே பிரிவை உண்டாக்குவது வெறுப்பே. வெறுப்பு வளர வளர கறுவிக் கொண்டிருந்து மற்றவரைத் தாக்கி அடித்தோ, அழித்தோ அது இன்பம் காணும். வெறுப்பு உண்டாகக் காரணமான இகல் நமது கண்ணுக்குத் தெரிவதில்லை. ஏனெனில் அது ஒரு நோய்க்கிருமி. அது எமது எண்ணத்தில் இருந்து மனநோய்களில் ஒன்றான இகலை உண்டாக்குகிறது. இகல் என்று கூறப்படும் இந்த மனநோயாலேயே ஒவ்வொரு வீட்டிலும் நாட்டிலும் சண்டையும் சச்சரவும் நடந்த வண்ணம் இருக்கின்றது.
இந்த நோயின் தன்மையை அறியாததால் மனித இனமே போர்களால் புரையோடிப் போய் அழிகின்றது. மனநோயாளிக்கு தான் செய்வது என்ன என்பது தெரியுமா? அவர் செயலில் வலிமை இருக்கும். கொடுமை இருக்கும். ஆனால் வீரம் இருக்காது. தமிழினம் வீரம் மிக்க இனம். வீரம் மிக்க இனத்தில் பிறந்தோர் இகல் கொள்ளலாமா? தமிழராகிய நாம் இகல் எனும் பிரிவை வளர்க்கும் மனநோய்க்கு அடிமை ஆகலாமா? மானுடராகிய எம்மை மனிதநேயத்துடன் சிந்திக்கச் சொல்லும் குறள் இது.

அன்பும் அறனும் அறிவும் நற்பண்பெனும் ஆற்றலுமே இந்த இகல் எனும் நோயை முற்றாக ஒழிக்கும் மருந்துகளாகும்.

No comments:

Post a Comment