Friday, 16 March 2012

தாய்மொழி தமிழ் - பகுதி 4

தொல்காப்பியர் தமிழ் எழுத்துக்களின் பிறப்பின் இயல்பை
“உந்தி முதலா முந்துவளி தோன்றி
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லுங்காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறுவேறியல
திறம்படத் தெரியும் காட்சியான”              -(தொல்: எழு: 3: 1)
எனக்கூறியுள்ளார்.

சுவாசிக்கும் போது எமது உடம்பினுள் நிலைக்கும் காற்றை பத்து வகையாகப் பிரித்துள்ளனர். அதில் உதானன் எனும் காற்று உந்தியில் இருக்கும். உந்தி என்பது நடுவயிறு, தொப்பூழ் ஆகும். தொல்காப்பியர் இச்சூத்திரத்தில் 'தொப்பூழில் இருந்து தோன்றி மேலே எழுந்து வரும் காற்றானது  தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய மூன்று இடத்திலும் நிலைத்து நின்று பல், இதழ், நா, மூக்கு, மேல்வாய் ஆகிய ஐந்து உறுப்புக்களும் சேர்ந்த எட்டோடும் பொருந்துவதை முறையாக ஆராய்ந்து சொல்லும் போது தமிழ் எழுத்துக்களின் பிறப்பின் ஒலிவடிவம் வேறுவேறு வகையாகத் திறம்படத் தெரிவதைக் காணலாம் எனக்கூறியுள்ளார். 
முறையாக ஆராய்ந்து எல்லா எழுத்தையும் சொல்லும் போது என்பதை ‘நெறிப்பட நாடி எல்லா எழுத்தும் சொல்லுங்காலை’ எனத் தொல்காப்பியர் சொல்வதிலிருந்து எம் தமிழ் முன்னோர் தமிழ் எழுத்தின் ஒலிவடிவங்களை எவரிடமிருந்தும் இரவல் வாங்காது தாமே ஆராய்ந்து கண்டனர் என்பதும் தெளிவாகின்றதல்லவா? தொல்காப்பியம் தமிழ் எழுத்துக்களின் பிறப்பை ஒலியெழுதுக்களின் வாயிலாக மிகவிரிவாகக் கூறுகின்றது.
சங்கத்தமிழர் தாமெழுதிய எழுத்தை இரண்டு விதமாகப் பிரித்துப் பெயரிட்டு அழைத்தனர்.
1.  கோலெழுத்து.
2.  கண்ணெழுத்து.

கோலால் எழுதிய எழுத்தை கோலெழுத்து என்றனர். வண்ண மையில் தோய்த்த எழுதுகோல், தூரிகை போன்றவற்கைக் கொண்டு துணியின் மேலோ தோலின் மீதோ எழுதுவதை கோல் எழுத்து என்றழைத்தனர். இரண்டாயிர வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழர்கள் எழுதுகோல் பாவித்து எழுதி வந்திருக்கிறார்கள் என்பதை 
“எழுதும் கால் கோல் காணாக் கண்ணேபோல்”
எனும் திருக்குறள் அடி எமக்குச் சொல்கிறது. மையைத் தொட்டு எழுதும் பேனாவை இன்றைய தமிழர்களாகிய நாமும் எழுதுகோல் என்றுதானே அழைக்கிறோம்.
கண் என்றால் குழி எனவும் பொருள் தரும். கோலால் மையைத்தொட்டு எழுதும் பொருளின் மேற்பரப்பில் எழுதாது அதன் மேற்பரப்பை உட்குழிந்து எழுதிய எழுத்தே கண்ணெழுத்தாகும். சங்ககாலத்தில் ஊருக்குள் புதிதாக வருபவர்கள் கண்ணெழுத்தால் எழுதிய தமது பெயர் பொறித்த பொதிகளைக் கொண்டு திரிவார்களாம். அதனை இளங்கோவடிகள்
“வம்பமாக்கள் தம் பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி”
                                              - (சிலம்பு: 5: 111 - 112)
எனச் சொல்வதோடு கண்ணெழுத்தை எழுதியவர்களை கண்ணெழுத்தாளர் எனவும்  சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.
அவர்களின் அடியை ஒற்றியே இன்றும் நாம் பிரயாணம் செய்யும் பொழுது பெட்டிகள் மாறாமல் இருக்க எமது பெயரும் முகவரியும் எழுதுகிறோம். இந்த வழக்கமும் சங்ககாலப் பழமையானதே.
ஒலியெழுத்து - வரியெழுத்தாக மாறிய பின்னர், வரியெழுத்தில் காலத்துக்குக் காலம் பல மாற்றங்களுக்கு உள்ளாகி இன்றைய நிலையை அடைந்துள்ளது. உதாரணமாக மலை என்பதைக் குறிக்கும் மலைத் தொடர் வடிவான (/\/\/\) உருவெழுத்தானது முக்கோண வடிவான வரியெழுத்தாக மாறி பல பல நிலைகளைக் கடந்து வட்டெழுத்தாக வளர்ந்து இன்று நாம் எழுதும் ‘ம’ என்னும் எழுத்தாக வந்துள்ளது.
குகைகளிலும் பாறைகளிலும் எழுதிவந்த உருவெழுத்தை காலப்போக்கில் தேவைகருதி களிமண் தட்டுகளிலும் மரப்பட்டைகளிலும் கோலெழுத்தாகவும் கண்ணெழுத்தாகவும் எழுதினர். இப்படி மரப்பட்டையிலும் மாவுக்கல்லிலும் எழுதியவற்றை ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச்செல்வது மிகக் கடினமான காரியமாக இருந்தது. தமிழரின் கல்வியறிவு மேலும் வளர வளர எழுதுவதற்கான தேவையும் அதிகரித்தது. கல்வியறிவு அரசன் தொடக்கம் காட்டில் வாழும் குறவர்வரை எல்லோரிடமும் விரவியிருந்தது. அவ்வுண்மையை சங்க இலக்கியம் மட்டுமல்ல இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட தொல்பொருள் ஆய்வுகளும்கூட மிகத் தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன. 

கண்ணெழுத்தை ஆய்வாளர் சிலர் முத்திரை பதித்தல் அதாவது இலச்சினை இடுதல் எனக்கருதுகின்றனர். உட்குழிந்து எழுதும் கண்ணெழுத்தை பொருளின் மேலும் எழுதலாம், இலச்சினையாயும் இடலாம் தானே?

இளங்கோஅடிகள் கால்கோட்காதையில் 
“இருபதினாயிரம் கண்ணெழுத்துப் படுத்தன
 கைபுனை சகடமும்”                                      
                                                - (சிலம்பு:   135 - 136)
என்கிறார். சகடம் என்றால் வண்டி. பொதி வண்டிகளை  மூடிக்கட்டி முத்திரை இட்டார்களா? என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில் அந்த வண்டிகளை ‘கைபுனை சகடம்’ என நன்கு அலங்கரிக்கப்பட்ட வண்டிகள் என்றே காட்டுகிறார். ஆதலால் இந்நாளில் யாழ்தேவி என்று வண்டியில் பெயர் எழுதுவது போல அந்நாளிலும் வண்டியில் கண்ணெழுத்தால் எழுதினர் எனக்கொள்ளலே பொருந்தும்.
சங்ககாலத் தமிழர் எழுதிய எழுத்துக்கள் தொல்பொருள் ஆய்வுகளில் கல்வெட்டுக்களாகக் கிடைத்திருக்கின்றன. கல்லில் சிலை வடிப்பதால் கல்லை சிலை என்றும் அழைப்பர். அதை ‘இளமையிற் கல்வி சிலையில் எழுத்து’ என்னும் பழமொழி எடுத்துக் காட்டுகிறது. இளமையில் கற்பது கல்லில் எழுதுவது போன்றது எனச்சொல்லும் இடத்தில் சிலை கல்லையே குறித்து நிற்கிறதல்லவா? ஆதலால் கல்வெட்டு சிலாசாசனம் என்றும் சொல்லப்படும்.
சங்ககால நடுகற்களிலும், மலைகளிலும், மலைக்குகையிலும், தொல்லியல் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், ஜாடிகள் போன்றவற்றிலும் கோயில் சுவர்களிலும் பண்டைக்காலக் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவைமட்டுமல்ல பண்டைய காசுகள், முத்திரைகள், மோதிரங்கள், விளக்குகள் போன்றவற்றிலும் பண்டைய தமிழ் எழுத்துகள் காணப்படுகின்றன. 
கருங்கல், நடுகல் போன்றவற்றில் எழுதிய தமிழ் எழுத்தை குயிலெழுத்து என்று சங்கத்தமிழர் அழைத்ததை 
“மருங்குல் நுணுகிய பேஎமுதிர் நடுகற்
பெயர்பயம் படரத் தோன்று குயிலெழுத்து”       - (அகம்: 297)
என அகநானூற்றில் மதுரை மருதன் இளநாகனார் சொல்லியுள்ளார். இழைத்தல் அல்லது பதித்தல் குயிற்றுதல் எனப்படும். குயிலெழுத்து கோடுகளாய் இருந்ததையும் அதை உளிகொண்டு பதித்ததையும் அகநானூறு
“கூருளி குயின்ற கோடுமாய் எழுத்து”
எனக்காட்டுகிறது. வரியெழுத்து என்பதையே கோடுமாய் எழுத்து எனும் சொல்வழக்கு சொல்கிறது. தமிழ் எழுத்தின் பழமையை தொடர்ந்து காண்போம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment