Wednesday 28 March 2012

பக்தர்களே! இங்கே வாருங்கள்! - 2

எத்தனை விதமான இயல்புகள் படைத்தவனாக மனிதன் இருக்கின்றானோ அத்தனை விதமான இயல்புகளையும் இறைவனிடம் பக்தி பண்ணுவதற்கு அவன் பயன்படுத்திக் கொள்ளலாம். மனிதவாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதை நாம் அநுபவத்தில் காண்கின்றோம். எம்மிடம் பொருளில்லையே, வீடு இல்லையே, குழந்தை இல்லையே என ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் துன்பப்படுகிறோம். துன்பப்படுதல் என்னும் எமது இயல்பால் நாமே பெரும் துன்பத்துக்கு உள்ளாகின்றோம். 


துன்பம் மனிதனுக்கு உதவாதது என்பது மற்றைய சமயநெறிகளின் கோட்பாடு. ஆனால் துன்பத்தாலேயே பெரும்பயன் அடையலாம் என்று திருவாசகம் புகட்டுகின்றது. இறைவன் எனும் மேலாம் நிலையைத் தான் இன்னும் அடையவில்லையே என்று மனிதன் வேண்டியவாறு துன்பமடையட்டும்.

எம்மானே உன் அருள் பெறுநாள்
          என்றென்றே வருந்துவனே”


எனத் துன்பத்தை வேண்டுமென்றே ஏற்படுத்திக் கொள்ளலாம். பக்தி வெள்ளத்தில் மூழ்கி வருந்தித் துன்பப்படும் வழியை

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்
          இறப்பு அதனுக்கு என் கடவேன்
வான் ஏயும் பெறில் வேண்டேன்
          மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேன் ஏயும் மலர்க் கொன்றைச்
         சிவனே எம்பெருமான் எம்மானே
உன் அருள் பெறும் நாள்
         என்று என்றே வருந்துவனே”                (திருவாசகம்: 5: 12)
எனக் காட்டித்தந்துள்ளார்.
அப்படி வருந்த வருந்த பக்திஅருவியில் தோயலாம். உப்புப் பொதி நீரில் கரைவது போல எம்மை நாமே துன்பத்துள் கரைத்துக் கொள்ள வேண்டும். அப்போது துன்பத்தை நாம் உணரமாட்டோம்.

இறைவனைப் பக்திசெய்ய  ‘அதுவேண்டும், இதுவேண்டும் என ஏங்கி, ஏங்கி வருந்தும் எம்மியல்பை சற்றே மாற்றி 
தேன் ஏயும் மலர்க் கொன்றைச்
         சிவனே எம்பெருமான் எம்மானே
உன் அருள் பெறும் நாள்
         என்று என்றே வருந்துவனே”
என இறைவனை நினைத்து ஏங்குமாறு திருவாசகம் சொல்கிறது.
‘ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்பது பழமொழி. உலகில் எங்கு சென்றாலும் யாரைச்சந்தித்தாலும் பகையை வளர்க்கும் குணமுடையவர் பலர் வாழ்கின்றனர். பகைமை பொல்லாதது. அதனை முற்றாகக் களைந்து எறியவேண்டும். ஆனால் பக்திநெறி, பக்தியில் மூழ்குவதற்கு பகைமையையும் நன்றாகப் பயன்படுத்து. அதை வேண்டியவாறு வளர்த்துக்கொள்.  அதை முற்றாக இறைவனிடம் திருப்பிவிடு. எவ்வளவுக்கு எவ்வளவு நீ இறைவனை வெறுக்கிறாயோ, நாத்திகம் பேசுகிறாயோ அவ்வளவுக்கு அவ்வளவு இறைவனுடைய இறைமை உனக்குக் கிட்டுகின்றது எனச்செப்புகின்றது. 
கண்ணனை வெறுத்த கம்ஸன் கடிதில் கண்ணன் மயம் ஆகவில்லையா? முருகனைப் பகைத்த சூரன் என்ன ஆனான்? அவர்களைப்போல் கடவுளை முற்றுமுழுதாக வெறுக்கக் கற்றுக்கொள்பவர்கள் பாக்கியவான்களே. சிவனைப் பகைத்து சினந்து எழுந்து வேள்விசெய்த தக்கனுக்கு சிவன் அருள் செய்ததை 

தக்கனையும் எச்சனையும் 
           தலை அறுத்துத் தேவர் கணம்
தொக்கன வந்தவர் தம்மை
           தொலைத்தது தான் என் ஏடி
தொக்கன வந்தவர் தம்மைத்
           தொலைத்தருளி அருள் கொடுத்து அங்கு
எச்சனுக்கு மிகைத் தலைமற்று
            அருளினன் காண் சாழலோ”                     - (திருவாசகம்: 12: 5)

மாணிக்கவாசகர் திருச்சாழலில் எமக்கு காட்டித்தந்துள்ளார். எனவே நீங்கள் எவருடனும் பகைக்க வேண்டுமா அந்தப்பகையை முழுமூச்சாக இறைவன் மேல் திருப்புங்கள், அருள் கிடைக்கும். 

கடவுளை அடைதல் ஒன்றிலே மகிழ்ந்திருப்பவன் ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என்னும் பெருநிலையை அடைந்துவிடுகிறான். மனிதப்பண்பில் கெட்டது என்றது ஏதுமில்லை. எந்தப் பண்பையும் தெய்வத்திடம் செலுத்த வேண்டும். ஏனைய இடத்தில் செலுத்தப்படும் மனிதப் பண்புகளால் நன்மையும் வருவதுண்டு. கேடும் வருவதுண்டு. அவற்றை கடவுளிடத்தில் திருப்பினால் நிலையான நன்மையே வரும். ஏனெனில் கடவுள் ஒருவரே நலனுடையான். கேடில்லான். மனிதன் தனிடமுள்ள இயல்புகள் யாவற்றையும் தெய்வத்திடம் திருப்பி விடுவானேயாகில் தெய்வீகம் அவனுக்கு சொந்தமாகிவிடுகின்றது என திருவாசகம் செப்புகின்றது.
ஆசை, மோகம், காமம் என்பன கொடியதிலும் கொடியது. மனிதனுடைய உயிரை அது உறிஞ்சிவிடுகின்றது. காமத்திற்கு உட்பட்டு உலகம் ஓயாது தட்டழிந்து கொண்டிருக்கிறது. அத்தகைய காமத்தையும் திருவாசகம் பயன்படுத்துகிறது. கடவுளிடத்து மோகம் கொள்கின்ற அளவுடைய கொடிய காமம் அருட்பித்தாக மாறிவிடுகின்றது. அம்பிகையின் பெயர்களில் சிவகாமியும் ஒன்று. சிவகாமி என்றால் சிவனிடத்து காமம் கொள்பவள். உயிர்கள் எல்லாம் அப்பெயருக்குரிய நிலையை அடைய வேண்டும். 

நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத்து இருப்பரால் அன்னே என்னும்
சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும்”                    - (திருவாசகம்: 17: 3)
என்ற அளவுக்கு காமம் கொள்கின்ற பக்தர்கள் சிவமயமாய் மாறிவிடுவார்கள்.
திருவாசகத் தேனாற்றில் ‘திருத்தசாங்கம்’ என்று ஒரு பகுதி உண்டு. அதுவும் அதுபோன்ற பகுதிகளும் ஞானக்கவிஞராகிய மாணிக்கவாசகரின் தெய்வக்காதலை சுவைபட எடுத்துச் சொல்கின்றன. தசாங்கம் என்பது அரசர்க்குரிய பத்துச் சிறப்புக்களாகும். அரசர்களுக்கு எல்லாம் அரசனாகிய திருவாரூர் தியாகராஜனின் பத்துச் சிறப்பு அங்கங்களையும் ஒவ்வொன்றாகச் சொல்லி அதை திரும்பச் சொல்லும்படி பச்சைக்கிளியை வேண்டிப் பாடுகிறாள் மணிவாசகத் தலைவி

“ஏரார் இளம் கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் 
சீரார் திருநாமம் தேர்ந்து உரையாய் - ஆரூரன்
செம்பெருமான் வெள்மலரான் பால்கடலான் செப்புவபோல
எம்பெருமான் தேவர்பிரான் என்று”                               - (திருவாசகம்: 19: 1)
கையிலே கிளியை வைத்து கொஞ்சிக் கெஞ்சி அழகொளிரும் இளமையான கிளியே! வெண்தாமரை மலர்மேல் இருக்கும் பிரமனும் பால்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும் எங்கள் திருப்பெருந்துறை மன்னனின் சிறப்புமிக்க திருநாமத்தைச் சொல்வது போல ஆரூரன், செம்பெருமான், எம்பெருமான், தேவர்பிரான் என்று ஆராய்ந்து ஆராய்ந்து சொல்வாயாக எனக் கேட்கிறாள் கடவுட்காதலி. ஞான ஏக்கம் என்பது காதல் ஏக்கமாக வெளிப்பட்டு திருவாசகத் தேனாகச் சொட்டுகிறது. அந்தத் திருவாசகத் தேனாற்றில் எப்படி ஞானக்காதலி ஆகலாம் என்பதை தொடர்ந்து காண்போம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment