Saturday 31 March 2012

கழலடி காணலாமே!


இந்த உலகின் இயக்கத்திற்கு எது காரணம்? அது எப்படி இருக்கும்? அது எங்கே இருக்கிறது? அதனை அடையும் வழி என்ன? என மனிதமனத்துள் எழுந்த பல வகையான கேள்விகளுக்கு மனிதன் கண்ட விடையே இறைவன். அதனால் உலகிலுள்ள சமயங்கள் யாவும் இறைவன் எனும் பொருளை அறிவது எப்படி என்பதை தத்தமக்கு எட்டிய முறையால் சொல்ல முற்படுகின்றன. எனினும் எந்த சமயமும் இறைவனை அறியும் வழியை உறுதியாக அறுதியிட்டுச் சொல்லவில்லை. காரணம் இறை எனும் பொருளை உணர்வால் உணர்ந்தே அறியமுடியும். ஒருவரின் அன்பை, உள்ள நெகிழ்ச்சியை எப்படி உணர்வால் உணர்கிறோமோ அப்படி இறைவனை உணர்வாலே உணரமுடியும். 
எவ்வாறு எமது உணர்வால் இறைவனை உணர்ந்து அறியலாம் என்பதை மிகத் தெளிவாக நம் சைவசமயச் சான்றோர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அவர்களில் திருநாவுக்கரசு நாயனார் பல தேவரங்களில் இறைவனைக் காணும் வழியை கூறியுள்ளார். நான்முகனும் நாராயணனும் தேடிக் காணமுடியாத இறவனை தன்னுள்ளே தேடிக் கண்டு கொண்டதாக மார்தட்டும் அவர், இறைவனை இலகுவாகக் காணும் வழியை சொல்கிறார்.
"உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகழியாக
மடம்படும் உணர்நெய் அட்டி உயிரெனுந் திரிமயக்கி
இடம்படும் ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே"























உடம்பாகிய வீட்டினுள் எமது உள்ளம் அகல் ஆக (எண்ணெய்விடும் தகழியாக), அதில் மடமை நிறைந்த உணர்வை நெய்யாக விட்டு, உயிரைத்திரியாகப் போட்டு, அறிவெனும் தீயால் விளக்கை ஏற்றி, அந்த ஒளியில் இருந்து பார்த்தால் கடம்பு மலர் மாலையை அணியும் முருகனின் தந்தையாகிய சிவனின் திருவடியைக் காணலாமாம். 
இறைவனைக் காண மிகச்சிறந்த இந்த வழி இருக்க நாம் ஏன் சுவாமிமார்களை நாடிச்செல்கிறோம்?  

குறிப்பு:
சொல்விளக்கம்
1.  மனையகம்  -  வீடு
2.  உள்ளம்  -  மனம்
3.  தகழி  -  அகல்
4.  மடம்  -  மடமை/ அறியாமை
5.  அட்டி  -  விட்டு/இட்டு/ ஊற்றி
6.  கடம்பமர் காளை  -  கடம்பு மலர் மாலை அணியும் முருகன்
7. தாதை  -  தந்தை
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment