Tuesday 3 July 2012

பல ஆகி நின்றவா!


 பக்திச்சிமிழ் - 30

இயற்கை என்றால் என்ன? பிறிதொன்றால் உருவாக்கப்படாது, தனது இயல்பில் மாறாது இருப்பது எதுவோ, அதுவே இயற்கையாகும். இயற்கையை ‘ஏது’ என்றும் கூறுவர். ஒன்றன் தோற்றத்திற்கு இயற்கை மூலகாரணமாக இருப்பதால் அது ஏது எனச் சுட்டப்படும். இயற்கை ஒரு வட்டச்சுழற்சியை உடைய தொடர் சங்கிலியாகும். அது தொடக்கமும் முடிவும் இல்லாதது. இயற்கையின் எல்லாத் தொழிற்பாடுமே வட்டமாக மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டிருக்கும். எனவே அது அழிவில்லாதது. 
ஒரு பழத்தின் விதையை நட்டால் அது முளைத்து செடியாகி வளர்ந்து மரமாகி, பூத்துக் காய்த்து மீண்டும் பழமாகி விதையாகும். இயற்கையின் தொழிற்பாட்டிற்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும். இவ்வாறு இயற்கை சுழன்று கொண்டிருப்பதால் இயற்கையின் தோற்றங்களை மாயை என்பர். ஒரு கணநேரத்தின் முன்பு இருந்தது போல் எது இருப்பதில்லையோ, அது மாயை எனப்படும். விதையாய் இருந்து மரமாக விரிந்து, மீண்டும் விதையாவது போல் அணுவாய் இருப்பது அண்டமாய் விரிந்து பின்னர் அணுவினுள் ஒடுங்கும். அதுவே இயற்கை. அதனையே இறைவனது ஆடல் என்றனர் எம் தமிழ் மூதாதையர்.
“நிலம் நீர் நெருப்பு உயிர் நீள்விசும்பு நிலாப் பகலோன்
புலன் ஆய மைந்தனோடு எண்வகையாய் புணர்ந்து நின்றான்
உலகு ஏழ் எனத் திசைபத்தெனத் தான் ஒருவனுமே
பல ஆகி நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ”                   
                                                 - (திருமுறை: 8: 15: 5)
‘இறைவன் ஒருவனே நிலம், நீர், நெருப்பு, காற்று [உயிர்], ஆகாயம் [நீள்விசும்பு], சந்திரன், சூரியன் [பகலோன்], ஆன்மா என்ற எட்டுடனும் சேர்ந்து நின்றும், ஏழு உலகங்களாகவும், பத்துத் திசைகளாகவும் பரந்து பல வடிவங்களாகவும் நிற்கின்றான். இறைவனின் அந்த வலிமையை நாம் விநோதக்கூத்தாக (நோக்கம்) ஆடுவோம்’ என மாணிக்கவாசகர் திருவாசகத்தில் கூறியுள்ளார். 
தோள் என்றால் மொய்ம்பு. அதாவது தன்னேரில்லா வலிமை. அது இறைவனுக்கே உரியது. இறைவன் ஐம்பூதங்களாக நின்று, விரிந்து ஒடுங்கி, ஆடும் பரமானந்த ஆடலின் வலிமையில் அண்ட கோளங்களே ஆட்டம் காண்கின்றன. அத்தகைய இறைவனின் பெருமையின் மாண்பை திருவிளையாடல்களை கூறி பெண்கள் மகிழ்ந்தாடும் கூத்தே தோள் நோக்கம் ஆகும். 'நோக்கம்' என்பது விநோதக்கூத்து வகைகளில் ஒன்று. [தோள் + நோக்கம் = தோணோக்கம்].
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment